ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என சாணக்கியன் எம்.பி கோரிக்கை.
Share
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கடந்த நத்தார் திருநாள் அன்று 25ம் திகதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே சாணக்கியன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. படுகொலை செய்யப்பட்டு 19 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நியாயமான விடயம் மக்கள் மனதில் உள்ளது என்பதற்கு இன்றைய பேரணி ஓர் சான்று.
கோட்டபாஜவின் ஆட்சிக் காலத்திலும் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என நாம் நம்பிக்கை வைக்கவில்லை. ஜோசப் பரராஜசிங்கம் அவர்களது படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பிள்ளையான் கோட்டாபாய ஆட்சிக் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌளான வெளிநாடு சென்று பல உண்மைகளை கூறியிருந்தார்.
அவை சணல்4 தொலைக் காட்சியில் ஆவணமாக வெளிவந்தது. அதில் பிள்ளையானை விடுவிப்பதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் சிலரை மாற்றினர் எனவும் அப்போது நீதி அமைச்சராக இருந்த அலி சப்ரியின் வழிகாட்டலில்தான் இவை இடம்பெற்றதாக சொல்லப்பட்டது.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும்போது கடந்த காலத்திலே இடம்பெற்ற ஈஸ்ரர் குண்டு வெடிப்பு, கிழக்கு உப வேந்தர ரவிந்திரநாத் கொலை, லசந்த விக்கிரம, எக்னலியகொட உட்பட சில விடயத்தை தாம் ஆராய்வதாக சொல்லியிருந்தனர். இதில் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை உள்வாங்கப்படவில்லை.
இலங்கையில் சட்டத்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சணங்கள், குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை தற்போதைய அரசு வெளிக்கொணர வேண்டும்.
அப்படியானால் அசாத் மௌலாள சொன்ன விடயங்களை வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு மட்டுமல்ல பரராஜசிங்கம் கொலை விடயத்தில் நீதிபதியை மாற்றினர் என்னெல்லாம் பல விடயங்கள் அவரது வாக்குமூலத்தில் உண்டு. இவற்றின் அடிப்படையில் ஓர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அதிலே சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உள்ளனர் அவர்களை விசாரணை செய்து ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அனைத்து படுகொலைகளிற்கும் நீதி கிடைக்க வேண்டும் என நாம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.