மணிப்பூரில் மீண்டும் தாக்குதல் – பாதுகாப்பு படை பதிலடி
Share
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய குழுவினர் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் வன்முறை சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சிகளால் அங்கு படிப்படியாக அமைதி திரும்பி வரும் நிலையில், அவ்வப்போது சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், மணிப்பூரில் உள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தில் இன்று காலை 10.45 மணியளவில் சனாசாபி என்ற கிராமம் அருகே, ஆயுதம் ஏந்திய குழுவினர் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதே போல் சுமார் 11.30 மணியளவில் தம்னாபோக்பி என்ற கிராமத்திலும் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்டு கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.