LOADING

Type to search

இந்திய அரசியல்

மன்மோகன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Share

அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது

     முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்கு உயிரிழந்தார். திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டில்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அதிபர் முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் காலை 8 மணிக்கு அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்றது. இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்தது. அங்கு மன்மோகன் சிங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதிபர் முர்மு , பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே , பூட்டான் மன்னர் ஜிக்மி ஹிசர் உள்பட பல்வேறு தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.