அரிசியை உற்பத்தி செய்யும் ஆயிரம் ஏக்கர் காணியை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு
Share
நாடு பாரிய அரிசி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், திருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை, கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பட்டினியில் இருந்து காப்பாற்றிய விவசாய நிலத்தை, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு கையளிக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், விவசாயிகள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை முத்துநகர் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட, அம்மன்குளம் விவசாய சம்மேளனம், தகரவெட்டுவான் விவசாய சம்மேளனம், முத்துநகர் விவசாய சம்மேளனம், மத்தியவெளி விவசாய சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
அப்பகுதியைச் சேர்ந்த 1,200 விவசாயிகள் கடந்த 64 வருடங்களாக பாரம்பரியமாக நெற்பயிர்ச் செய்கை மேற்கொண்டு வரும் 1,600 ஏக்கர் காணியை சன்ரைஸ் சோலார் (Sunrise Solar) நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆரப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
1961ஆம் ஆண்டு முதல் உள்ளூர் மக்களுக்கு விவசாயம் செய்வதற்காக அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்ட காணியை இலங்கை துறைமுக அதிகார சபையிடம் கையளிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் 1984ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் எனினும், அதற்கு நாடாளுமன்ற அனுமதி கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வருட அறுவடையின் பின்னர் 1,200 விவசாயிகள் 64 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபடும் 1,600 ஏக்கர் நெற்காணியையும், மேட்டு நில உப உணவுப் பயிர்கள் செய்கைப் பண்ணப்படும் 50 ஏக்கர் காணியையும் பிரதேச செயலகத்தின் தலையீட்டுடன் சன்ரைஸ் சோலார் நிறுவனத்திற்கு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அப்பிரதேச முஸ்லிம் தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களது இரண்டு ஏக்கர் வாழ்வாதார இடத்தை இப்பொழுது சோலார் பவர் திட்டத்திற்கு வழங்குவதற்கு, அதாவது இவ்வருட அறுவடையின் பின்னர் அந்த இடத்தில் சோலார் திட்டத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிந்துகொண்டுள்ளோம். ஆகவே நாங்கள் எங்கே செல்வது, எங்கள் குழந்தைகளுடன் எங்கே செல்வது? எல்லோருமே இரண்டு ஏக்கர், ஒரு ஏக்கர் உள்ள விவசாயிகள். ஏழை விவசாயிகள் நாங்கள். மரவள்ளியும், சோறும்தான் எங்கள் வாழ்வாதாரம். கால்நடைகளுடன் மாத்திரமல்ல யானைகளுடனும் போராடி நாங்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றோம். எங்கள் விளைநிலங்களை பெற்றுத்தர வேண்டும். துறைமுக அதிகார சபையின் இடையூறுகள் இன்றி எங்கள் நிலங்களை எங்களுக்கே வழங்க வேண்டும்.
“விவசாயத்தை அழிப்பது அபிவிருத்தியா?”, “விவசாய நிலங்களை அபகரிக்க வேண்டாம்”, “சோலார் பவர் சாப்பிடவா?”, போன்ற பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த காணிகளில் வருடாந்தம் 1,12,000 புசல் நெல் விளைவதாக சுட்டிக்காட்டிய விவசாயிகள், சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்திற்கு விவசாய நிலத்தை வழங்கினால், அது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அடியாக விழும் எனவும், விவசாயத்திற்கு நீரை வழங்கிய ஐந்து சிறு குளங்களும் அழிவடையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலங்களை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்படைப்பதை உடனடியாக நிறுத்தி, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமெனக் கோரும் மகஜர் பிரதேச செயலாளர் என். மதிவண்ணனிடம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஒப்படைக்கப்பட்டது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகன் குகதாசன், திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரிடமும் மகஜரின் பிரதிகளை போராட்டக்காரர்கள் கையளித்திருந்தனர்.
விவசாய காணியில் திட்டமிடப்பட்ட சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை நிறுத்தி, விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தடையின்றி தொடர்வதற்கு அனுமதிப்பது என, 2024 டிசம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்துள்ளார்.