LOADING

Type to search

உலக அரசியல்

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை.. வங்காளதேச நீதிமன்றம் அதிரடி

Share

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பு தலைமையில் நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்களால் நடத்தப்பட்ட கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக ஷேக் ஹசீனா மற்றும் 45 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் கைது ஆணை பிறப்பித்தது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி, வங்காளதேசத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையை முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா, அவரது ராணுவ ஆலோசகர், ராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என மொத்தம் 12 பேரை கைது செய்ய உள்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது 500-க்கும் மேற்பட்டோர் வங்காளதேச பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலர் பல ஆண்டுகளாக ரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறியபின், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறத் தொடங்கி உள்ளனர்.