LOADING

Type to search

கனடா அரசியல்

கிராமத்து வதனம் அமைப்பால் ஆசிரியை கமலவதனா சுந்தாவின் தலைமையில் கொண்டாடப்பெற்ற ‘தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா

Share

சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகசபை அங்கத்தவர்களால் மங்களவிளக்கு ஏற்றப்பட்ட பின் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன பைரவி அருள் மாறன், லதிசா தயாளன், பிரகதி சர்மா ஆகிய சிறுமிகளால் இசைக்கப் பெற்றன. இதைத் தொடர்ந்து புஸ்பா சிவராசா, இந்திராணி சங்கநிதி ஆகியோரின் தமிழரின் பாரம்பரிய பறை இசையும், சிலம்பாட்டமும் இடம் பெற்றன. அடுத்து வரவேற்பு நடனமும், திருமதி அருள்மலர் மதியழகனின் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.

அடுத்து இளையதலைமுறைக்கும் பெண்களுக்குமான ‘வதனம்’ சஞ்சிகையின் முதலாவது ஆண்டுமலர் வெளியீட்டுரையை எழுத்தாளரும் முதன்மை ஆசிரியருமான குரு அரவிந்தன் நிகழ்தி வைக்க, இளைய தலைமுறை இணையாசிரியர் ஆகாஸ் ஞானவேலு அவர்களால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. திருமதி கேதா கிருபராஜனின் இதழ் ஆய்வுரையைத் தொடர்ந்து, முதல் பிரதியை பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து கிராமிய நடனமும், இளைய தலைமுறையினரின் கும்மி நடனமும், பண்டாரவன்னியன் நாடகமும் இடம் பெற்றன. தொடர்ந்து பொங்கல் பாடல், முக்கனிகள் பற்றிய பாடல், ஆதித்தமிழரின் அறிவியல், திருக்குறள் கூறும் அறிவியல், அறிவுக்கூர்மை, தற்பாதுகாப்புக் கலையான கராட்டி போன்ற சிறுவர் நிகழ்வுகளும் இடம் பெற்றன. காப்பாளர் திரு. நவாகருணரட்ணராசா அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து செயலாளர் திருமதி யோகநாயகி நித்தியானந்தமூர்த்தியின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது. நவகீதா முருகண்டி நிகழ்ச்சிளைத் தொகுத்து வழங்கினார்.

கனடாவில் பல அமைப்புக்களால் மரபுத்திங்கள் விழா கொண்டாடப் பட்டாலும், இரண்டு விதமான தமிழ் மரபுத் திங்கள் விழா கொண்டாடப் படுவதைப் பொதுமக்களால் அவதானிக்க முடிகின்றது. ஒன்று சில அமைப்புகள் தங்கள் அங்கத்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, தமிழ் வளர்க்கும் நோக்கத்துடனான நிகழ்ச்சிகளுடன், தங்கள் பணத்தில் கொண்டாடுவது. மற்றது மாகாண அரசின் நிதி உதவி பெற்று நிதி வசதிக்கு ஏற்ப நிகழ்ச்சிக் குழுக்களுக்குப் பணம் கொடுத்து பிரமாண்டமாகக் கொண்டாடுவது. அரசியல் பிரமுகர்கள் மேடையை ஆக்கிரமித்து இருப்பதில் இருந்து எப்படியான மரபுத் திங்கள் விழா நடக்கிறது என்பதை இலகுவில் புரிந்து கொள்வது மட்டுமல்ல, தமிழ் வளர்ப்பதில் யார் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதையும் இத்தகைய நிகழ்வுகளில் பொதுமக்களால் அவதானிக்கவும் முடிகிறது.