அநுர அரசின் ஆட்டம் ஆரம்பம்
Share
”முன்னாள் ஜனாதிபதிகள் அரச சொகுசு மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அநுரகுமார அரசின் அறிவிப்பால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ”செக்”வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிரடியாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரான அநுர பிரியதர்சன யாப்பாவை அவரது மனைவியுடன் கைது செய்த அநுரகுமார அரசு மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்சவை அதிரடியாகக் கைது செய்ததுடன் அடுத்ததாக நாமல் ராஜபக்சவையும் இலக்கு வைத்துள்ளமை ராஜபக்ச குடும்பத்தையும் பொதுஜன பெரமுனவினரையும் ஆட்டம் காண வைத்துள்ளது”
கே.பாலா
நாட்டைபொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் ஆரம்பமாகவில்லையே என்று இத்தனை நாட்களும் நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த,விசனப்பட்டுக் கொண்டிருந்த ‘ஆட்டம்”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முழுநாடும் மக்களும் பரபரப்புடனும் ”அடுத்தது யார்” என்ற எதிர்வு கூறல்களுடனும் ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்துள்ளதுடன் இலங்கையின் அரசியல் களமும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மோசடி செய்த,குற்றங்கள் புரிந்த அரசியல் வாதிகள் எத்தரத்தில் இருந்தாலும் சிறை செல்வார்கள் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்த அநுர குமாரதிசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆணை வழங்கியிருந்தபோதும் இத்தனை நாட்களும் இவ்விடயத்தில் அடக்கி வாசித்து வந்த அநுரகுமார அரசு தற்போது ”கைது வேட்டை”ஆட்டத்தை ஆரம்பித்துள்ளமையே மக்களை குஷிப்படுத்தியுள்ளதுடன் குற்றங்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் அரசியல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் அரச மாளிகைகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அறிவிப்புடன் ராஜபக்சக்களை இலக்கு வைத்து அநுர குமார அரசு தொடங்கிய ஆட்டத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்டமிழக்கும் நிலையில் உள்ள சூழலில் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் முன்னாள் ஆட்சியாளர்களான பொதுஜன பெரமுனவினர் இலக்கு வைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர்களுடன் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களும் சிக்கியுள்ளதுடன் அடுத்துவரும் நாட்களில் இன்னும் பல பிரபல அரசியல்வாதிகளும் அநுரகுமார அரசின் ஆட்டத்தில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அநுரகுமார அரசின் முதல் கைது வேட்டையில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் ராஜபக்சக்களின் தீவிர விசுவாசியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சிக்கினார் .ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற நிலையில், வடிவமைக்கப்பட்ட அதிசொகுசு காரை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்க ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த வருட இறுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் , ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவும்,சதொச ஊழியர் குழுவை கடமையிலிருந்து நீக்கி, வேறு பணிகளில் ஈடுபடுத்திய வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்ததாலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.பின்னர் பிணையில் வெளியில் வந்தார்.
இந்தக் கைதின் பின்னர் மக்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு எந்த வித அரசியல் கைதுகளும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் அநுரகுமார அரசு மீது சற்று வெறுப்படைந்து விமர்சிக்கத் தொடங்கினர். இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் அரச சொகுசு மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அநுரகுமார அரசின் அறிவிப்பால் முன்னாள் மஹிந்த ராஜபக்சவுக்கு ”செக்”வைக்கப்பட்டது.இது ராஜபக்சக்களிடையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் பொதுஜன பெரமுனவினரை கொதிப்படையவும் வைத்தது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கொழும்பு -05 பகுதியில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த வீட்டின் நடைமுறை சந்தை பெறுமதி 2598.5 மில்லியன் ரூபா .நடைமுறை மாத வாடகை கட்டணம் 12,75000 ரூபா இந்த வீட்டில் இருந்து கோத்தபாய ராஜபக்ஷ வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு -07 பெஜ்ஜட் பகுதியில் வழங்கப்பட்டிருந்த வீடு 3132 மில்லியன் ரூபா பெறுமதியானது. இதன் நடைமுறை சந்தை மாத வாடகை கட்டணம் 29 இலட்சம் ரூபா .இந்த வீட்டில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாச கொழும்பு 07 இல் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான வீட்டில் வசித்தார். தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு -07 பகுதியில் 1005.5 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்பட்டது. இவர் இன்றும் இந்த வீட்டில் தான் வசிக்கிறார்.அந்த வீட்டின் நடைமுறை சந்தை மாத வாடகை 9 இலட்சம் ரூபா .முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு 1 ஏக்கர் 13.8 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 3128 மில்லியன் ரூபா பெறுமதியானது. 46 இலட்சம் ரூபா மாத வாடகை பெறுமதியானது.எனவே இவர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அநுரகுமார அரசு அறிவித்ததே ராஜபக்சக்களை கொந்தளிக்க வைத்தது.இதற்கெதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதுடன் அரசு தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தால் சொகுசு மாளிகையிலிருந்து வெளியேறத் தயார் எனவும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் அடுத்த அதிரடியாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரான அநுர பிரியதர்சன யாப்பாவை அவரது மனைவியுடன் கடந்த 22 ஆம் திகதி அநுரகுமார அரசு அதிரடியாகக் கைது செய்து அதிர்ச்சி கொடுத்தது. 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிங்கிரிய மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 6,146,110 ரூபாவை பெற்று, அந்தப் பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசாரம் செய்தமை மூலம் அரச சொத்துகள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின அடிப்படையில் அநுர பிரியதர்சன யாப்பாவும் அவரது மனைவியும் கைதானார்கள். பின்னர் பிணையில் வெளியே வந்தனர்.
இவ்வாறான நிலையில்தான் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்சவை அதிரடியாகக் கைது செய்து ராஜபக்ச குடும்பத்தையும் பொதுஜன பெரமுனவினரையும் ஆட்டம்காண வைத்துள்ளது அநுரகுமார அரசு. இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு தற்போது அவரும் பிணையில் வெளியில் வந்துள்ளார்.
அடுத்துவரும் நாட்களில் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பொதுஜன பெரமுன எம்.பி.யுமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளன. இதனை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான சட்டத்தரணி மனோஜ் கமகேயும் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே நாமல் ராஜபக்சவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்னாள் அரசியல்வாதிகள் ,பிரபலங்கள் கைது என ஆட்டத்தை அநுரகுமார அரசு ஆரம்பித்துள்ள நிலையில் இக்கைதுகள் தொடர்பாக ”அரசியல் பழிவாங்கல் ” என்ற வகையிலான தீவிர எதிர் பிரசாரங்களும் எதிர்கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த அரசாங்கம் வழக்குகளை ஜோடித்து சாட்சியங்களை உருவாக்கி பழிவாங்க முயற்சிக்கின்றது. யாரை கைது செய்ய வேண்டும் என்பது குறித்து இரவு கலந்துரையாடி கைது செய்யும் நிலை காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் நாம் மக்களுக்காக குரல் கொடுத்து விமர்சனங்களை வெளியிடும் நிலையில் எமது குடும்ப உறுப்பினர்களை அரசாங்கம் பழிவாங்குகின்றது. எனது சகோதரர் யோஷிதவை கைது செய்வதற்கு பெலியத்த வரையிலும் பல வாகனங்களுடன் விரட்டிச் சென்று கைது செய்தமை அநாவசியமான விடயம். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்கு வருமாறு அழைத்திருந்தால் தாமாகவே முன்வந்து வாக்குமூலம் அளித்திருப்பார் . இதற்கு எரிபொருள் செலவிட்டு வாகனங்களில் பெலியத்த வரைச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை இந்த அரசியல் கைதுகளின் பின்னணியில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு குழுவின் செயலாளராக பதவி வகித்த தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இருப்பதாகவும் தற்போதைய கைதுகள் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவில்லை என்றும் முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெலஉறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முக்கிய பதவி வகித்தவரே தற்பொழுது பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கின்றார் . அவர் தனது அரசியல் பழிவாங்கல்களை தொடர்கின்றார் என நாமல் ராஜபக்சவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ளது அநுரகுமார அரசு.அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதில், ஜனாதிபதி அநுரகுமார விற்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டமை அநுர அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் என ராஜபக்சக்களுக்கு ஆதரவான மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். எவ்வாறாயினும், யோஷித ராஜபக்சவின் கைதில் ஜனாதிபதி அநுரகுமார விற்கோ அல்லது அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எந்த வித நியாயமான குற்றச்சாட்டுக்களோ ஆதாரங்களோ இல்லாமல் முன்னாள் அரசியவாதிகளை ,பிரபலங்களை அநுரகுமார அரசு கைது செய்வதனால்தான் கைதான ஒரு சில நாட்களுக்குள் அவ்வாறு கைதானவர்களுக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்கி வருவதாகவும் எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் பிணையில் அனுமதிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல, மாறாக அவர்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதே நோக்கம்.குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பிணை கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.அதுதான் சட்டம்.எனினும், புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விசாரணைகளைத் தொடரலாம். வழக்குத் தாக்கல் செய்வதன் மூலமே சந்தேக நபர் ஒருவரை தண்டிக்க முடியும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டதே தவிர வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் தெளிவுபடுத்தியுள்ளார்.நிதிச் சலவை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் இதுவரையில் யோஷித ஓர் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை.யோஷித தொடர்பான சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்றது.மேலும், நபர் ஒருவருக்கு மேல்நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமானால் அதற்கு முன்னர் சந்தேக நபர் என்ற அடிப்படையில் அவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் இந்த நபரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.இது ஓர் சாதாரண நடைமுறை. பிணை சட்டத்தின் பிரகாரம் சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாவிட்டால், விசாரணைகளுக்கு இடையூறு இல்லையென்றால் பிணை வழங்கப்படுவது வழமையானதாகும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது அநுரகுமார அரசு மேற்கொள்ளும் கைதுகள் .நீதிமன்றங்கள் வழங்கும் பிணைகளைப் பொறுத்தவரையில் ” எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்” என்பதே மக்களின் நிலைப்பாடாகவுள்ளது