LOADING

Type to search

அரசியல்

மலையாள நடிகையை பலாத்காரம் செய்த குற்றவாளி கேரள நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க முடிவு

Share

மலையாள நடிகையை பலாத்காரம் செய்து சிறையில் இருக்கும் குற்றவாளி சுனில்குமார், கேரள நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க முடிவு செய்துள்ளான்.

மலையாள நடிகையை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்தி, வரும் 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு போலீசுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும் இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உட்பட போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும் டைரக்டர் பாலச்சந்திரகுமார் கூறியதை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் திலீப் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகர் திலீப்பிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசார் 2 நாள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சுனில்குமார் சிறையில் இருந்து எழுதிய கடிதம் போலீசிடம் சிக்கி உள்ளது. இது வழக்கில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக எர்ணாகுளம் சிறையில் உள்ள சுனில் குமாருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த 2018ம் ஆண்டு மே 7 ம் தேதி சுனில்குமார் சிறையில் இருந்தபடியே நடிகர் திலீப்புக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கப் போவதாகவும், சாட்சிகளையும், வக்கீல்களையும் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடன் சிறையில் இருந்த சஜித் விடுதலையாகி செல்லும்போது திலீப்பிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி சுனில்குமார் அந்த கடிதத்தை கொடுத்து அனுப்பி உள்ளார். கடிதத்தின் ஒரு நகலை சுனில்குமார் தன்னிடம் வைத்திருந்தார். ஆனால் சஜித்தால் அந்த கடிதத்தை திலீப்பிடம் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் திலீப்புக்கு சுனில்குமார் சிறையில் இருந்து கடிதம் எழுதிய விவரம் போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த கடிதத்தின் நகல் மட்டுமே கிடைத்தது. இதுவரை போலீசிடம் கடிதத்தின் ஒரிஜினல் கிடைக்காமல் இருந்தது.

இதற்கிடையே திருச்சூர் அருகே குன்னம் குளத்தில் உள்ள சஜித்தின் வீட்டில் மார்ச்31 அன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுனில் குமார் எழுதிய கடிதத்தின் ஒரிஜினல் கிடைத்தது. இது நடிகை பலாத்கார வழக்கில் போலீசுக்கு கிடைத்த மிக முக்கியமாக ஆதாரமாக கருதப்படுகிறது.

சுனில்குமாருக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரைத் தனக்கு தெரியாது என்றும் திலீப் போலீசிடமும், நீதிமன்றத்திலும் கூறி இருந்தார். தற்போது சுனில் குமார் எழுதிய கடிதம் போலீசுக்கு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாக கடிதம் கருதப்படுகிறது. இது திலீப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.