பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளம்பெண் மீது புகார் அளித்த பள்ளி மாணவர்
Share
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை கடந்த மாதம் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள சிறுவன் ஒருவர் தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி புகார் அளித்த இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர், போக்சோ நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர்நீதிமன்ற பதிவாளர், உள்துறைச் செயலர், ஐஜி, டிஐஜி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், மாவட் சட்ட உதவி மைய தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், “ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அவர் எங்களை மிரட்டினார்.
ஆனால், போலீஸார் எங்களை கைது செய்தபோது விவரத்தை கூறினேன். இளம்பெண்ணின் அலைபேசியை பார்த்தால் உண்மை தெரியும் என்றும் கூறினேன். ஆனால், போலீஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு சென்ற பின்னரும் சிபிசிஐடி போலீஸாரிடமும் இதை தெரிவித்தேன். ஆனால், இந்த விபரத்தை வெளியில் தெரிவிக்கக் கூடாது என என்னை மிரட்டினார்கள். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிறுவர் சிறையில் இருந்தபோது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன். நான் 18 நாள்கள் சிறையில் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மன வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என அந்த மனுவில் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.
இதற்கிடையே இந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜுனத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோர் நீதிமன்ற காவல் முடிந்ததால் காவல் நீட்டிப்புக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மே 2-ம் தேதி வரை 4 பேரின் காவலையும் நீட்டிப்பு செய்து சிறையில் அடைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். அதையடுத்து, ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.