LOADING

Type to search

கனடா அரசியல்

அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் கனடாவைத் தொடர்ந்து பல நாடுகளிலும் வெளியிடப்பெறவுள்ளன

Share

கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஐபிசி புகழ்

எஸ். கே. ராஜன் உற்சாகத்துடன் தெரிவிப்பு

(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மக்களால் அதிகளவில் விரும்பப்பெறும் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ எதிர்வரும் 12–8-2022 அன்று வெள்ளிக்கிழமை கனடாவில் வெளியிடப்பெறவுள்ளது. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழர் சங்கங்களின் சம்மேளனம் நடத்திய ‘பெட்னா’ விழாவில் முதற் தடவையாக வெளியிடப்பெற்ற இந்த நூல். கனடாவைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் வெளியிடப்பெறவுள்ளன. இந்த நூலை அனுபவித்து வாசிக்க அவரது அன்பு ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள் என்றே நான் நம்புகின்றேன்.

இவ்வாறு நேற்று வியாழக்கிழமையன்று கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஐபிசி புகழ் எஸ். கே. ராஜன் உற்சாகத்துடன் தெரிவித்தார். அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் எழுதிய இந்த ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் நூல் வெளியிடப்பெறும் நிகழ்வில் பிரதான தொகுப்பாளராக விளங்கவுள்ள எஸ். கே. ராஜன் அவர்கள் தற்போது லண்டனை தலைமையகமாகக் கொண்ட ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நேர்காணலின் போது, அவரது கனடா வருகை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் தொடர்ந்து கூறியதாவது;-

தனது இலங்கை வானொலியின் ஆரம்பம் எப்படி அமைந்தது என்பது முதல் வானொலியின் ஆளுமையாளர்கள், அவர்களின் ஒலிபரப்புத் துறைக்கான அர்ப்பணிப்புகள் இந்த நூலில் பதிவாகி இருக்கின்றன.

இலங்கை ஒலிபரப்புத்துறை சார்ந்து நாம் அறிந்திராத பல தகவல்கள் இந்த நூலில் உள்ளடங்கியிருக்கின்றன. மேலும். ஒலிபரப்புத்துறையில் ஈடுபட்டுள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கு மாத்திரமல்ல நாளைய புதிய தலைமுறைக்கும் உகந்த ஒரு நூல். ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்றே நான் கூறுவேன் என்றார் எஸ். கே. ராஜன்

சரி! எதிர்வரும் 12-08-2022 அன்று வெள்ளிக்கிழமையன்று அந்த நூல் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொள்வோம் என்ற வார்த்கைகளைப் அவருடன் பகிர்ந்து கொண்டு. “யாழ்ப்பாணத்தில் ஒரு விளம்பர ஒலிபரப்பாளராக தங்கள் பயணத்தை ஆரம்பித்து தொடர்ந்து இலங்கைத் தீவை மாத்திரமல்ல தமிழ்நாட்டு தமிழர்களையும் வானலைகள் ஊடாக இணைத்துக் கொள்ளும் ‘இலங்கை வானொலியோடு தங்களை இணைத்துக் கொண்டீர்கள். இந்த ஒலிபரப்புத் துறை பயணம் பற்றி சொல்லுங்களே” என்றோம்

“பாடசாலையில் மாணவனாக இருக்கும் பொழுதே ஒலிவாங்கியுடனான உறவாடல் ஏற்பட்டது.
கலை விழாக்கள் ஆலயத்திரு விழாக்கள் என்பனவற்றில் ஒலி வாங்கியில் அறிவிப்புக்களை மேற்கொண்டு ஆரம்பித்த பயணம் இன்று வானொலிக்கலைஞனாக வலம் வரவைத்துள்ளது.
வட இலங்கையில் வாகன விளம்பர ஒலிபரப்பின் முன்னோடியான சி.சு.புனிதலிங்கன் அவர்களின் ‘மக்கள் குரல்’ விளம்பர சேவையில் விளம்பர அறிவிப்புப் பணி தொடங்கியது.
யாழ்.நவீன சந்தையில் ஆரம்பத்தில் ‘மணிக்குரல்’ விளம்பரசேவை ஒலிபரப்பாகியதை அடுத்து ‘மக்கள் குரல்’ விளம்பரசேவை இயங்கியது. அதனை அடுத்து ‘விக்ரர் அன்ட் சன்’ விளம்பரசேவை ஒலிபரப்பானது.

‘விக்ரர் அன்ட் சன்’ விளம்பரசேவையில் நானும், மணிக்குரல் மேஜர் சண்ணும் பணியாற்றினோம். அதிலிருந்து யாழ் பேரூந்து நிலையத்தில் பெஸ்ரோன் ஒலிபரப்பு சேவையை (1978)ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நானும், மணிக்குரல் மேஜர் சண்ணும் பணியாற்றினோம்.
பின்னர் பெஸ்ரோன் ஒலிபரப்பு சேவையில் பல அறிவிப்பாளர்களுக்குக் களமமைத்துக் கொடுத்தேன்.

1982 வரை பெஸ்ரோன் ஒலிபரப்பில் பணியாற்றிய பின்னர், இலங்கை வானொலியை நோக்கிய பயணம்.

இதனால் 1982 தொடக்கம் , கொழும்பில் வாழ்க்கை தொடர்ந்தது.
1983 டிசம்பரில் இலங்கை வானொலியில் பணியாற்ற. வாய்ப்புகள் கிடைத்தன.
1983 ஜூலை கலவரம், கொழும்பு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்திய நிலையில் 1984ம் ஆண்டில் புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் புகலிடம் பெற்றேன்.
பிரான்ஸில் 1988ஆம் ஆண்டு ‘தமிழமுதம்’ என வாரத்தில் ஒரு மணி நேரம் வானொலி ஒலிபரப்பை நடத்தி வந்தேன்.

1997ஆம் ஆண்டு லண்டனில் நாடகப் பேராசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் ஐபிசி தமிழ் வானொலியை ஆரம்பிக்கும் பொழுது அடியேனுக்கும் அழைப்பு விடுத்து ஐபிசி தமிழ் வானொலியில் இணைத்துக்கொண்டார்.

இப்பொழுது ஐரோப்பாவில் வானொலிக்கலைப்பயணம் எனது வெள்ளி விழாவையும் தாண்டிச்செல்கிறது” என்று மிகுந்த தெளிவுடன் எம்மிடம் தெரிவித்தார் எஸ். கே. ராஜன்.

“வானொலிக்கலை தங்களை ஈர்த்ததற்கு என்னென்ன விடயங்கள் அல்லது எந்த தனி நபர்கள் காரணமாக இருந்தார்கள்” என்று அவரிடம் அடுத்த கேள்வியாகக் கேட்டோம்

நான் இலங்கை வானொலியில் பணியாற்றத் தொடங்கிய நாட்களிலும் அதற்கு முன்னரும் வானொலி அறிவிப்பாளர்களின் குரல்கள் தான் என்னை வானொலியின் பக்கம் ஈர்த்ததன.
எஸ்.பி.மயில்வாகனன், எஸ்.கே.பரராஜசிங்கம்,

ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம், பி.எச். அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, விமல் சொக்கநாதன், சரா இம்மானுவேல், கே.எஸ்.ராஜா,கோகிலா சிவராஜா, புவனலோஜனி போன்ற பல அறிவிப்பாளர்களின் குரல்களும், வி.ஏ. கபூர், எஸ்.புண்ணியமூர்த்தி, சுந்தரலிங்கம், சற்சொரூபவதிநாதன், வி.பி.தியாகராஜா, என்.சிவராஜா, நடேச சர்மா, சில்வஸ்ரர் பாலசுப்ரமணியம், வி.என்.மதி அழகன் போன்ற செய்தி வாசிப்பாளர்களின் குரல்களும் வானொலிக்கலை ஈடுபாட்டுக்குத் தூண்டுதலாக அமைந்தன. என்று கூறுவதில் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியடைவேன்” என்றார்

வானொலி துறையில் வெறுமனே செய்திகள் மாத்திரம் அடங்குவதில்லை தானே? பொதுவாக தமிழ் வானொலிகளில் கலை-இலக்கியத் தொடர்பான விடயங்களும் இடம்பெறுகின்றன தானே? அவ்வாறு தாங்கள் பணியாற்றிய காலத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் கவிஞர்கள் ஆகியோரோடு எவ்வாறான தொடர்பைப் பேணி வந்தீர்கள்’ என்ற அடுத்த கேள்வியை நாம் முன்வைத்தோம்.

ஈழத்துக் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் கலைஞர்களுடன் எனது தொடர்பாடல் மிக நீண்டது. வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் என வலம் வருவோருடன் தொடர்பு பட்டிருக்கிறேன்.

நான் சார்ந்துள்ள துறை கலைஞர்களைக் கொண்டது என்பதால் கலைப்பெருமகன் ஏ.ரகுநாதன் போன்ற மூத்தவர்கள் முதல் இன்றைய இளைய தலைமுறையினர் வரை கலைஞர்கள் தொடர்பு நிறைவாகவே உள்ளது. இலக்கியத்துறை சார்ந்தவர்களும் அவ்வாறே.

முதுபெரும் எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் முதல் இன்றைய இளைய தலைமுறையினர் வரை தொடர்புகள் நீண்டு செல்கின்றன” என முகத்தில் புன்னதை தவழ பதிலைப் பகிர்ந்து கொண்டார் எஸ். கே. ராஜன்.

“தற்பொழுது தாங்கள் மேற்கொண்டுள்ள கனடாவிற்கான விஜயத்தில் எவ்வாறான நிகழ்ச்சிகளில் தாங்கள் பங்கெடுக்க உள்ளீர்கள்” என அவரிடம் வினாவினோம்
” அதற்கு பதிலளிக்கையில் எஸ. கே ராஜன் அவர்கள் பின்வருமாறு தனது பதிலைப் பகிர்ந்து கொண்டார்.

‘தமிழோசை-சினி மீடியா சிறிகாந்தா அவர்களின் அழைப்பு. அவர் நடத்தும் கோடைக்கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறேன்.
உங்களுக்கு- உதயன் பத்திரிகைக்கு ஒரு விசேடமான தகவலைக் கூறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். .

என்னை முதன் முதலில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து முயற்சித்தவர் நண்பர் சிறிகாந்தா.தான்.

2020ல் கனடாவுக்கு வருகைதந்த பொழுதிலும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சிறிகாந்தா அவர்களின் இந்த நிகழ்ச்சியிலே தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதை நாம் பெருமையுடன் பகிர்ந்து கொள்கின்றேன்’

நன்றி எஸ். கே. ராஜன் அவர்களே இறுதியாக தங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம். அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களுடனான தொடர்பு தங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது? என்று கேள்வியோடு அவரைப் பார்க்கின்றோம்.

“எனது முதல் மரியாதைக்குரிய மூத்த ஒலிபரப்பாளர், அன்புச் சகோதரர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களுடனான தொடர்பு அல்ல உறவு நான்கு தசாப்தங்களுக்கு மேலானது.

ஒலிபரப்புக்கலையின் பல்கலைக் கழகம். அங்கே நான் ஒரு மாணவனாக ஒலிபரப்புக் கலை நுணுக்கங்களை தொடர்ந்து கற்று வருகிறேன்.

அவரை முதன் முதலில் கலை நிகழ்ச்சி நடத்த பரிஸ் நகருக்கு 1988ஆம் ஆண்டு அழைத்தேன்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் கலைக்குழுவாகவே ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்கள் அமைந்தன.

31.07.2004ல் லண்டன் மாநகரில் அவருக்கு ஒரு பாராட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

நாடகர் ஏடகர் ஊடகர் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.
இவ்வாறு எமது கலைப்பயணம் தொடர்கிறது”

இறுதியாக எஸ். கே. ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி அவரை வழியனுப்பி வைத்தோம்.