LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசிய வரலாற்றில் முதல் முறை! ஓரு முன்னாள் பிரதமருக்கு சிறை!!

Share

அன்வாரின் ‘காஜாங் நகர்வை’ முறியடித்த நஜீப்

இப்போது காஜாங் சிறையில்.. !

*-நக்கீரன்

கோலாலம்பூர், ஆக.24:

அபூபக்கர் என்னும் பெயரைத் தவிர்த்துவிட்டு இஸ்லாமிய வரலாற்றையும் இலக்கியத்தையும் முழுமைப்படுத்த முடியாது. இஸ்லாத்தில் அளவற்ற அருளாளராகவும் நிகரற்ற அன்பாளராகவும் போற்றப்பட்டும் நபிகள் நாயகம் அவர்களின் உற்ற தோழராகவும் அவருக்குப் பின் முதல் கலீபாவாகவும் திகழ்ந்த அபூபக்கரின் நினைவு நாளான ஆகஸ்ட் 23-இல் மலேசியாவின் 6-ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சிறைவாசம் புகுந்துள்ளார்.

மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் தலைவர் நஜீப். இவரின் அரசியல் வாழ்க்கை இன்னும் மூன்று ஆண்டுகளில் பொன் விழாவைக் காணும்.

1976-இல் 23-வயதில் புதுமாப்பிள்ளையாகி, அந்த மாப்பிள்ளைக் கோலத்துடன் நாடாளுமன்றத்திற்கு நுழைந்தவர் நஜீப். நாட்டின் 2-ஆவது பிரதமராக இருந்த துன் அப்துல் ரசாக், உடல் நலம் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் இறந்ததால், ரசாக் வென்ற பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நஜீப்பை எதிர்த்து களம் காண ஒருவரும் இல்லாததால் தேர்தலே நடைபெறவில்லை.

மக்களிடம் வாக்கு பெறாமலேயே முதன் முதலாக நாடாளுமன்றத்தில் நுழைந்த பெருமையும் இவருக்கு உண்டு. அதிலிருந்து இதுவரை பெக்கான் தொகுதியின் அசைக்க முடியாத நாயகனாக வலம் வருகிறார் இவர்.

துன் மகாதீருக்குப் பின் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான் பிரதமராக வருவார் என்று மலேசியா மட்டுமல்ல; அரபு உலக வளைகுடா நாடுகளும் மேலை நாடுகளும்கூட எதிர்பார்த்திருந்த சூழலில், மகாதீர் புரிந்த வஞ்சகத்தால் அன்வாருக்குப் பதிலாக துன் அப்துல்லா படாவி பிரதமர் ஆக நேர்ந்தது.

அவருடைய போதாத காலம், 2004-இல் நடைபெற்ற 11-ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சியே இல்லை யென்று சொல்லும் அளவிற்கு அடித்து நொறுக்கும் விதமாக இமாலய வெற்றிபெற்ற படாவி, அடுத்த 12-ஆவது பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராஃப் எழுச்சி என்னும் மலேசிய இந்தியர் உரிமை முழக்கப் போராட்டத்தின் தாக்கம் பிரதிபலித்ததால் ‘தப்பித்தோம்-பிழைத்தோம்’ என்று சொல்லும் அளவுக்கு தட்டுத் தடுமாறி கரைசேர்ந்தார்.

இதன் விளைவாக, கட்சியிலும் ஆட்சியிலும் படாவியின் நிலைமை பலவீனமானது; அதை நஜீப்பும் நஜீப்பின் அப்போதைய கூட்டாளியும் இப்போது நஜீப் சிறைபுகுந்துள்ளதை கொண்டாடும் எதிரியுமான டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் வகையாக பயன்படுத்திக் கொண்டு, படாவிக்கு எதிராக வசைபாடினர்.

அந்த அமைதியான மனிதர், அரசியலில் இருந்தே ஒய்வு பெற முனைந்த வேளையில், நாட்டின் ஆறாவது பிரதமரானார் நஜீப்.

மலேசியாவில் தொடர்ந்து 47 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இந்தத் தலைவர், கடந்த ஜூலை 23-இல்தான் தன் 69-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

70-ஆவது வயதைத் தொட்டு சரியாக ஒரு மாதத்தில் இந்த 23-இல் காஜாங் பட்டணத்து சிறைச்சாலை நஜீப்புக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. 23-ஆம் எண்ணுக்கும் நஜீப்பிற்கும் நெருங்கிய தொடர்பு போலும்!

இந்த இடத்தில்தான், 2,000 ஆண்டுகளுக்கு முன் துறவறம் பூண்ட அரசிளங்குமாரனும் பெரும்பாவாலருமான இளங்கோ அடிகளின்

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”;

“ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்” என்ற வரிகள் மனதைத் தொடுகின்றன.

அரசியல் தலைவர்கள், தங்களின் எதிரிகளை வீழ்த்த பற்பல வஞ்சக செயல்களை மேற்கொள்வதுண்டு;

ரஷ்யா போன்ற நாடுகளில் வாகனத்தை ஏற்றி அரசியல் எதிரியைத் தீர்த்துக் கட்டுவார்கள்; இந்தியா போன்ற நாடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவிவிட்டு பழிதீர்ப்பார்கள் அல்லது நீதிமன்ற தீர்ப்புகளை தூசிதட்டி எடுத்து எதிரிக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்; பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வெடிகுண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் பரிசளிப்பார்கள்; மியன்மார் போன்ற நாடுகளில் வீட்டுக் கைதியாக சிறை வைப்பார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் மற்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவை கூலிக்கு அமர்த்தி பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; மலேசியா போன்ற நாடுகளிலோ அரசியல் எதிரியை வீழ்த்த பாலியல் வழக்கை கையில் எடுப்பார்கள்.

அப்படி வீழ்த்தப்பட்டு, பிரதமர் நாற்காலிக்கு அருகில் கால் நூற்றாண்டாக காத்திருப்பவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

மகாதீரால் பழிவாங்கப்பட்டு சிறைவாசமும் முடிந்த நிலையில், மீண்டும் 2014-இல் நஜீப் பிரதமராக இருந்தபோது மேலும் ஒரு பாலியல் வழக்கு தொடரப்பட்டது.

அன்வாரிடம் உதவியாளராக இருந்தபோது தன்னிடம் குதப் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்று ஒருவர் சொல்ல, அதன் பின்னணியில் மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வேளையில், அன்வாருக்கு எதிராக நஜீப், அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் இந்த சதிவலை பின்னப்படுகிறது என்று அன்வாரின் ஆஸ்தான வழக்கறிஞரும் மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் தலைவர்களில் ஒருவருமான சிவராசா கொதித்தெழுந்தார்.

ஆனால், தக்க ஆதாரம்-சாட்சிகளின்படியே நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் கீழ்நிலை நீதிமன்றத்தில் அன்வார் விடுவிக்கப்பட்டார். வழக்கு நடைபெற்ற இடைக்காலத்தில் அன்வார் தன் நாடாளுமன்ற பதவியைத் துறக்க நேர்ந்தது.

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பும் இல்லாததால், நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநில அரசியலில் ஈடுபட விரும்பி, அதன் தொடர்பாக தன் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலக, அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அன்வார் போட்டியிட முயன்றபொழுது, ஏற்கெனவே உயர்நீதி மன்றத்தில் அன்வார் விடுவிக்கப்படடதை எதிர்த்து நஜீப் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அதன்வழி மீண்டும் அன்வார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

மலேசியாவின் அண்மைக் கால அரசியல் வரலாற்றில் இந்த ‘காஜாங் நகர்வு’க்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதில், அன்வாருக்கு எதிராக சொல்லி அடித்து வென்ற நஜீப், இன்று அதேக் காஜாங்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத்தான் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்னும் இளங்கோ அடிகளின் பாவரி நினைவுபடுத்துகிறது.

தவிர, கடந்த 2018 பொதுத் தேர்தலின்போது, தேர்தல் களத்தில் தனக்கு மருட்டலாக விளங்கிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் இருக்கும்படி வகையாகப் பார்த்துக் கொண்டது நஜீப் தலைமையிலான தேசிய முன்னணி அரசு. நீதிமன்றத் தீர்ப்பும் உள்துறை அமைச்சின் முடிவும் அதற்கு ஏதுவாக அமைந்தன.

இந்த முறை பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதே நீதிமன்றத்தின் தீர்ப்பால் நஜீப் சிறைக்கு சென்றுள்ளார்.

அரசாங்கத்தின் நிதி மேலாண்மை நிறுவனமான ‘1எம்டிபி’ நடவடிக்கை தொடர்பில் ‘எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல்’ நிறுவனத்தில் வெ.4கோடியே 20 இலட்சத்திற்கு ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நஜீப்பிற்கு எதிராக தொடரப்ப்பட்ட வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற விசாரணை நீதிபதி அளித்த 12 ஆண்டு சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்ததால் நஜீப் உடனே சிறைக்கு அனுப்பப்பட்டார். வெ.21 கோடி தண்டமும் நிலைநிறுத்தப்பட்டது.

கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் தலைமையில், சபா-சரவாக் மாநிலங்களின் தலைமை நீதிபதி அபாங் இஸ்கந்தார் அபாங் ஜொகாரி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் நளினி பத்மநாதன், மேரி லிம், முகமட் ஜாபிடின் டியா ஆகிய நால்வர் அடங்கிய ஐவர் விசாரணைக் குழு ஒருமனதாக நஜீப்பிற்கு எதிரான தண்டனையை மறுஉறுதி செய்தது.

சுமார் 9 ஆண்டுகள் நாட்டை ஆண்ட நஜீப், அதேக் காலக்கட்டதிற்கு அம்னோ கட்சியையும் வழிநடத்தினார். வரும் பொதுத் தேர்தலில், வாக்காளர்களை கவருவதற்காக நஜீப்பின் திருமுகத்தை அந்தக் கட்சி அடையாளம் கண்டிருந்த நிலையில், இப்பொழுது அவர் சிறை சென்றிருப்பதால், திடீர்ப் பின்னடைவை எதிர்கொண்டுள்ள அம்னோ, கொஞ்ச காலத்திற்கு அமைதியாக இருக்கும். உடனடி தேர்தலையும் வலியுறுத்தாமல் பின்வாங்க நேரிடும்.

மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முன்னாள் பிரதமர் சிறை செல்வது இதுவே முதல்முறை; ஆனாலும், நஜீப் 12 ஆண்டுகளை சிறையில் கழிப்பாரா என்பதும் 21 கோடி வெள்ளியை அபராதமாக செலுத்துவாரா என்பதும் ஐயமே!

காரணம், நஜீப்பின் வழக்கறிஞர்கள், இந்தத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படி சிராய்வு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்; அல்லது மாமன்னரிடம் பொது மன்னிப்பு கோரலாம். அந்த சந்தர்ப்பங்களில் முடிவு மாறலாம்; காட்சியும் மாறலாம்; நஜீப்பும் ஆறுதல் பெறலாம்;

காத்திருப்போம், அடுத்தடுத்த காட்சிகளைக் காண.. .!