LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

Share

கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் – ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் – 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது.

கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவு வழங்கப்பட்டது.

மதிய உணவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான ஓட்டப்போட்டி, பந்தெறிதல், கயிறு இழுத்தல், வேகநடை போன்ற பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றன. அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் உளரீதியாகவும் ஒன்றுகூடி மகிழ்வதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களின்பின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு உரையாட முடிந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்திருந்த பழைய மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.

மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்கள் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் போன்ற குழுக்களை ஆரம்பித்து அவர்களைப் பயிற்றுவித்து கடனாவில் நடக்கும் போட்டிகளிலும் பங்கு பற்றி விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இதைவிட இளைய தலைமுறையினருக்கான பயிற்சிப் பட்டறைகள், கணித, பொது அறிவு, தமிழ் மொழி பரீட்சைகளும் கடந்த பல வருடங்களாக நடத்தி அவர்களை ஊக்குவித்து வருகின்றனர். மற்றும் ‘மகாஜனன்’ வருடாந்த மலரிலும் இளைய தலைமுறையினரின் ஆக்கங்களை வெளியிட்டு அவர்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வருவதுடன், கோயிற் திருவிழாக்களும் செய்து வருகின்றார்கள்.

தாயகத்தில் உள்ள கல்லூரியின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர். யுத்தத்தால் பழுதடைந்த கட்டிடங்களையும் நூலகத்தையும் திருத்தி அமைக்கவும், கணனி பாவனையை அறிமுகம் செய்தும், விளையாட்டுப் போட்டிகள், நினைவுகூரும் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு உதவி செய்தும் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு இங்குள்ள பழைய மாணவர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள். மகாஜனக் கல்லூரியின் சர்வதேச நூற்றாண்டு நினைவு மலர் கனடா பழைய மாணவர் சங்கத்தால் கனடாவில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

LJI – ARJUNE