LOADING

Type to search

மலேசிய அரசியல்

இந்திய ஆய்வியல் துறை ஆதரவில் பாதாசனின் ‘தலையங்க கவிதைகள்’ நூல் வெளியீடு

Share

முதல் பிரதியை டத்தோ சகாதேவன் பெற்றார்

-நக்கீரன்

கோலாலம்பூர், செப்.02:

மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தின் பாரம்பரிய மரபுக் கவிஞர்களில் ஒருவரான பாதாசனின் ‘தலையங்க கவிதைகள்’ என்னும் நூல், மலாயாப் பல்கலைக்கழக டி.கே.எஃப். மண்டபத்தில் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது.

இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டு ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அங்கமான நூல் வெளியீட்டின்போது, தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிருவாக இயக்குநரும் செயலாளருமான டத்தோ பா.சகாதேவன் அவர்கள் முதல் நூலைப் பெற்றார்.

கல்வியாளர் பி.எம். மூர்த்தியின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நூல் வெளியீட்டு விழாவில், காவல் துறை ஓய்வுபெற்ற அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன், வள்ளல் பா.சகாதேவன், உமா பதிப்பகத்தின் டத்தோ ஆ.சோதிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் மணிமாறன் நூலாய்வுரை வழங்கினார்.

நாளேட்டில் தலையங்கம் தீட்டி வந்த பாதாசன், நாளேட்டுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றபின், அதே வீச்சுடன் தலையங்கச் செய்திகளை கவிதைகளாக இயற்றி வந்தார்.

அரசியல், கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளையும் சார்ந்து நல்ல அம்சங்களைப் பாராட்டியும் நன்றல்லனவற்றை இடைத்துரைத்தும் புனையப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டு, ‘தலையங்க கவிதைகள்’ என்னும் பெயரில் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்ட முனைவர் மணிமாறன், அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய நூல் இது என்றார்.

நிறைவாக, மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரை ஆற்றி நூலை அறிமுகம் செய்தார்.

ஒரு நூலை வாசிக்கும்பொழுது அந்த நூல் ஒருவரின் சிந்தனையைக் கிளர வேண்டும். அதன் மூலம் உயர்வான எண்ணங்கள் தோன்றி, அந்த எண்ணங்கள் நல்ல செயல்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும் என்று தானாற்றிய தலைமையுரையில் சரவணன் சொன்னார்.

இப்போதெல்லாம் சமூக வளைதல ஊடகங்களில் வன்முறை அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு நீடித்தால், நல்லவர்களும் படித்தவர்களும் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்வார்கள் என்று சரவணன் தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து நூலை வெளியீடு செய்தபோது, டத்தோ சகாதேவனை அடுத்து 2-ஆவது நூலினை டத்தோஸ்ரீ தெய்வீகனும் அடுத்ததாக டத்தோ சோதிநாதனும் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட தொகையை வழங்கி நூல்களைப் பெற்றுச் சென்றனர்.

பேராசிரியர் டத்தோ என்.எஸ். இராஜேந்திரன், டான்ஸ்ரீ மாரிமுத்து, முனைவர் எம்.இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான கல்வியாளர்கள், மாணவர்கள், பொது இயக்கத்தினர், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பாதாசனின் நண்பர் கவிஞர் ‘பாத்தேறல்’ இளமாறன் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்தார்.