LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘ஊடகத்துறை படுகொலைகள்’ சர்வதேச விசாரணை வேண்டும்.

Share

வி.தேவராஜ்

மூத்த ஊடகவியலாளர்

 

  • ‘உண்மைகளை’ சாகடிப்பதற்காகவே ஊடகவியலாளர்கள் படுகொலை!
  • தமிழ் மக்களின் அபிலாiஷகுறித்து பேசுவது இனவாதமாகுமா?

 

இலங்கையில் ஊடகத்துறை இன மத மொழி ரீதியாக பிரிந்து கிடக்கின்றது.இந்த பிளவு பிரிவு என்பன இன்று நேற்று உருவாகியதல்ல. சுமார் 100 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பிளவுகளும் முரண்பாடுகளும் கோலோச்சி வருகின்றன.துரதிஷ;டவசமாக இந்த முரண்பாடுகளும் பிளவுகளும் சாகா வரம் பெற்றதாக ஊடகத்துறையையும் ஊடகவியலாளர்களையும் தின்று கொண்டிருக்கின்றது.

இதுபற்றி ஊடகத்துறை சார்ந்தோர் சிந்தித்ததாக இல்லை.

ஆனால் ஊடகத்துறை சார்ந்த ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளுக்கு ஊடகத்துறையில் நிலவுகின்ற பிளவுகளும் முரண்பாடுகளும் ஊடகத்துறை சார்ந்தோரை பிரித்தாள்வதற்கு உதவுகின்றது என்ற உண்மையை ஊடகத்துறையினர் அறிந்தும் அறியாதது போல் உள்ளனர்.

அதுமாத்திரமல்ல ஊடகத்துறையினர் பிரிந்து நின்று பேசுகின்ற இன ,மொழி ,மத ரீதியிலான  பேதங்கள் பன்முகப் பரிமாணங்களாக சிதறி நிற்கின்றன. ஆனால் ஊடகத்துறைக்கு எதிரான சக்திகள் பேசுவது ஒரு மொழிதான். அது கருத்தியலுக்கு எதிரான போர். இந்த கருத்தியல் போரினையே ஊடகத்துறைமீது இனம் தெரியாத எதிரிகள் பிரகடனப்படுத்தி செயலாற்றுகின்றனர்.

கருத்தியலை கருத்தியலால் வெல்ல திராணியற்ற இந்த சக்திகளிடையே இன ,மத, மொழி ரீதியில் எந்தப் பேதங்களும் இல்லை.அங்கே தமிழர்கள் இருப்பார்கள் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இருப்பார்கள். அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற  ஏவல் நாய்கள் அல்லது கூலிப் படைகள் தயாராகவே இருக்கும்.அதாவது உண்மைகள் சாகடிக்கப்பட வேண்டும் என்பதே இவர்களது இலக்காகும்.

இந்தச் சக்திகளினால் ஊடகத்துறையினர் 

  • இலக்கு வைக்கப்படுகின்றனர்
  • காணாமல் ஆக்கப்படுகின்றனர்
  • கடத்தப்படகின்றனர்
  • படுகொலை செய்யப்படுகின்றனர்
  • பயமுறுத்தப்படுகின்றனர்
  • நாட்டைவிட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்

மேற் குறிப்பிட்டவைகளில் ஏதாவது ஒன்றோ பலவோ நடைபெற்றால் 

  • ஊடகத்துறையினரும் இதுபற்றி பேசுகின்றனர்.
  • செய்திகளாக அறிக்கையிடுகின்றனர்
  • இறுதியில் இதுவும் ஒரு பரபரப்புச் செய்தியாகி குறுகிய காலத்திலேயே மறந்து போய் ஊடகத்துறையினரும் தமது போனாக்களுடன் அன்றாட வேலைகளில் மூழ்கிப் போகின்றனர்.
  • அடுத்த ஒரு கொலையோ பயமுறுத்தலோ அல்லது கடத்தல் காணாமல் ஆக்கப்படுதலோ நடைபெறும்வரை இன்னொரு செய்திக்காக ஊடகத்துறையினரை தட்டி எழுப்பும்;வரை ஊடகவியலாளர்களும் ஊடகத்துறையும் தம்மை மறந்து பணிகளில் மூழ்கிவிடுகின்றனர்.
  • வருடத்துக்கு ஒருமுறை மண்ணுள் புதையுண்ட தமது சகாக்களில் ஒரு சிலருக்காக கண்ணீர் சிந்துகின்றோம்
  • நினைவேந்தல் நடத்தி தீபம் ஏற்றி அல்லது மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றோம்.
  • இதற்கும் அப்பால் ஊடகத்துறையினர்போவதும் இல்லை: சிந்திப்பதும் இல்லை.

ஆனால் எதிரிகள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் ஊடகத்துறையினரை கழுகுக் கண் பார்வையுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஊடகவியலாளர் அமந்தபெரேரா தனது கட்டுரை ஒன்றில் 

லசந்த தனது சொந்தப் பாதுகாப்பில் அக்கறை கொள்ளாதிருந்தமை குறித்து அவர் மீது கோபம் கொள்வதாக எழுதியிருந்தார்.

இதே கோபம் தராக்கி சிவராம் நடேசன் சுகிர்தராஜ் சுப்ரமணியம் நிமலராஜன் மீதும் எனக்கும் இருந்தது. ஏனெனில் இவர்கள் என்னுடன் நெருங்கிப் பணியாற்றியவர்கள். இவர்களது இழப்பின் வலியை இன்றும் என்னுள் சுமந்து கொண்டிருக்கின்றேன். இவர்களின் மரணத்தை இன்றும் ஜீரணிக்க முடியாதவனாக உள்ளேன்.

நடேசன்

நடேசனின் உயிரைக் காப்பாற்ற அணைத்து முயற்சிகளையும் தனிப்பட்டமுறையில் எடுத்தேன். கொழும்பில் பணியாற்றுவதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்ததுடன் நான் தங்கியிருந்த வீட்டிலேயே தங்குவதற்கும் ஏற்பாடு செய்தேன். மட்டக்களப்பிற்குப் போய்விட்டு வருவதாகசவக் களையுடன் விடை பெற்றுச் சென்ற நடேசன் போகும் வழியில் வெலிக்கந்தையில் இருந்த உங்களுடைய நண்பன் தம்பையாவை சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தியைக் கூறிவிட்டு மட்டக்களப்பிற்குச் சென்றவன் திரும்பவே இல்லை. வந்தாறுமூலை பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளர்

 கு. தம்பையாவின் கொலைச் செய்தியை எழுதிய பேனா மை காய்வதற்குள் நடேசனும் செய்தியாகிவிட்டான்.

சுகிர்தராஜ் சுப்ரமணியம்

திருகோணமலை ஐந்து மாணவர்களின் படு கொலைச் செய்தியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த சுகிர்தராஜ் சுப்ரமணியம் மரண அச்சம்தோய்ந்த முகத்துடன் கொழும்பில் என்னைச் சந்தித்தபோது கொழம்பில் இருந்து கொண்டு பணியாற்ற கேசரி நிர்வாகத்துடன் பேசி ஒழுங்கு செய்வதாக கூறியபோதும் குடும்பச் சுமை பின்னணி வேலை மாற்றம் செய்ய முடியாத நிலை பொருளாதார நிலை என்பன எனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர் இருக்கவில்லை. பிரியும்போது விடை கொடுக்கும் மன நிலையில் நான் இல்லை. விடை பெறும் நிலையில் சுகிர்தராஜ் சுபரமணியமும் இல்லை. ஆனால் அதுவே கடைசி சந்திப்பாகப் போய்விட்டது.

நிமலராஜன்

நிமலராஜன் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதுவதற்கான அனுமதியை நேரில் வந்து பெற்றுச் சென்றதற்குப் பிறகு தொலைபேசித் தொடர்புடன் அவரது உறவு மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. யாழ் குடா நாடு எந்த பாதுகாப்பு இரும்புக் கவசத்திற்கள் முடங்கிக் கிடந்ததோ அதே கவசத்திற்குள் பாதுகாப்பற்ற நிலையில் நிமலராஜனின் உயிரும் பறிக்கப்பட்டுவிட்டது.

தராக்கி சிவராம்

நண்பர் தராக்கி சிவராம் மண்டையில் போட்டுவிடுவார்கள் அதற்குள் எழுதக் கூடியதை எழுதி முடித்துவிட வேண்டும் என்ற வெறியில் தனது தனிப்பட்ட பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது பணியாற்றினார். இறுதியில் அவரது உயிரும் பறிக்கப்பட்டுவிட்டது.

மொத்தத்தில் இந்தக் கொலைகள் ஒரு உண்மையை உணர்த்தி நிற்கின்றது.ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் இன மத மொழி பேதங்களுக்க அப்பால்பிரகடனப்படுத்தப்படாத மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாகசமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

  • இந்த நிலையில் ஊடகத்தறை சார்ந்தோர் எங்கே பாதுகாப்பைத் தேடுவது?
  • எவரிடம் பாதுகாப்பைக் கோருவது?
  • யார் பாதுகாப்பை வழங்குவார்கள்?

இவ்வாறு பதில் கிடைக்காத கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

  • அரச பயங்கரவாதம்
  • பல்தேசியக் கம்பெனிகள்
  • அரசியல்வாதிகள்
  • மேற் கூறிய சக்திகளின் அம்பு  ‘இனந் தெரியாத நபர்கள்என ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தீப்பிழம்பு சூழ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலுக்கள் எவருடைய பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை. எனவேதான் ரிச்சர்ட்டி சொய்சா முதல் தராக்கி சிவராம் லசந்த விக்ரமதுங்கவரை படு கொலைகள் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டுள்ளன
  • ஊடகத் தறையிலும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்து கிளைவிட்டு வளர்ந்துள்ள நண்பர்களின் கழத்தறுப்புகளுக்கும் காட்டிக் கொடுப்புக்களுக்கும் ஊடகத்துறையினரும் ஊடக நிறுவனங்களும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

காட்டில் நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன.அதுபோல் ஊடகத்துறையில் நேர்மையானவர்கள் உண்மைக்காக சமூகத்திற்காக  ஊடகத்தறையில் சத்திய வேள்விக்குள் வாழத்தலைப்பட்டவர்கள் குருதி வெள்ளத்திற்குள் வேருடன் பிடுங்கிச் சாய்க்கப்படுகின்றனர்

சிஜ்சர்டி சொய்சா முதல் தராக்கி சிவராம் லசந்த விக்ரமசிங்கவரை இந்த வரலாறுதான் தொடர்கின்றது. அதுமாத்திரமல்ல கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தருகின்ற அச்சுறுத்தல் பயமுறுத்தல் அந்த சக்திகள் கொடுக்கின்ற மரணபீதி எனபன ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் பய பீதிக்குள் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றன

ஏனெனில் பாதிக்கப்பட்ட ஊடகத்துறையினருக்கு நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகவே இதுவரை உள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான ஊடகத்துறைக்கே இந்த நிலையா என பதில் கிடைக்காத கேள்வியுடன்தான் ஊடகத்துறை நகர்ந்து கொண்டிருக்கின்றது

அதிஷ;டவசமாக இன்று சர்வதேச சமூகத்திடம் இருந்து இதற்கான ஒளிக்கீற்று தெரிவது சற்று ஆறுதலாக உள்ளது

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்கள் அனைவரும்உண்மைகளைவெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததினால் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

  • முன்னாள் சபாநாயகர்கரு ஜயசூரிய

1981 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 117 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் மற்றும் எண்ணற்றோர் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர் என இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்கரு ஜயசூரிய அண்மையில் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் முன்னாள் சபாநாயகர் ஜெயசூர்யாவின் 117 எண்ணிக்கை எங்கிருந்து பெறப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் பல அமைப்புகள் ஊடக ஊழியர்களின் கொலைகள் மற்றும் காணாமல் போனதை பதிவு செய்துள்ளன. இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு

 (JDS) 2004 முதல் 2010 வரை மட்டும்  குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று பதிவு செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவார்கள் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களாகும்.இந்தக் காலகட்டத்தில் 41 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உண்மையான எண்ணிக்கை 

அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறதுஎன  ‘தமிழ் கார்டியன்தெரிவிக்கின்றது

இன்றுவரை இந்தப் படுகொலைகளுக்கான நீதி கிடைக்கவில்லை

  • லசந்த விகரமதங்கவின் படுகொலைக்கு நீதி கோரிய பயணம் 14 வருடங்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது.
  • ஊடகவியலாளர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னெலிகொட 13 வருடங்களுக்கு முன்னர் 24 ஜனவரி 2010 இல் காணாமல் போனார். அவரது மனைவி சந்தியா 13 வருடங்களாக நீதிகோரிய நெடும் பயணத்தில் உள்ளார்.
  • தனது கணவரைக் கடத்தியவர்கள் கடத்தியதாக ஒப்புக் கொண்டால் மன்னிப்பு வழங்கத் தயார்‘;என ஊடகங்கள் வாயிலாக அவர் அறிவித்துள்ளார்.
  • பிரேமகீர்த்தியின் மனைவி புற்று நோயையும் சுமந்து கொண்டு 14 வருடங்களாக உண்மையைத்தேடி நீதிக்காக பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
  • இதேபோல்தான் எத்தனையோ ஊடகவியலாளர்களின் உறவுகள் நண்பர்கள் என ஊடக உலகமே நீதிக்காக காத்திருக்கின்றனர்.

இவ்வேளையில் தமிழ் ஊடகத்தறையினரின் சார்பில் ஒரு செய்தியைக் கூற வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.

பெரும்பாலான தெற்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும்  தமிழ் ஊடகத்துறையினரை 

  • இனவாதிகளாகப் பார்க்கின்றனர்.
  • பிரிவினைவாதிகளாக நோக்குகின்றனர்.

தராக்கி சிவராம் ஆங்கில ஊடகங்களில் எழுதியபோது அவர்இனவாதியாக”பிரிவினைவாதியாக” தெற்கில் பார்க்கப்படவில்லை. ஆனால் தமிழ் மொழியில் தேசியப் பத்திரிகைகளில் எழதத் தொடங்கவே அவர் தெற்கிற்கு இனவாதியானார்;பிரிவினைவாதியாகப் பார்க்கப்பட்டார்

உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷயை அதன் நியாயத்தன்மையை ஆங்கிலத்தில் எழுதுவதன்மூலம் தெற்கின் ஆளும்தரப்பிலும் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும் செல்வாக்கு செலுத்தலாம் மனமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று முழுமையாக நம்பியே ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். ஆனால் தனது ஆங்கில எழத்துக்கள் மூலம் தெற்கில் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை: ஆங்கிலத்தில் தொடர்ந்தும் எழுதுவதால் பலனில்லை என்ற கசப்பான ஜீரணிக்க முடியாத ஏமாற்றத்தைத் தொடர்ந்தே அவர் தமிழில் எழுதத் தொடங்கினார் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

  • தமிழ் மக்களின் அரசியல் அபிலாi குறித்து எழுதுவது எவ்வாறு பிரிவினைவாதமாகும்? இனவாதமாகும்? என்ற கேள்விகளை தெற்கின் ஊடகத்தறையின் முன் வைக்கின்றேன்.
  • அதுமாத்திரமல்ல ஊடக தர்மம் என்றவகையில் தெற்கின் கருத்துக்களை தமிழ் ஊடகத்துறையினர் தமிழ் மக்கள் மத்தியில் நிறையவே கொண்டுபோய்ச் சேர்த்துள்ளோம்.
  • தமிழீழ விடுதலைப் புலிகள் உற்பட அணைத்து இயக்கங்கள்குறித்த விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துள்ளோம்.
  • தெற்கு ஊடகத்துறையினருக்கு ஒரு பக்க அடி. ஆனால் தமிழ் ஊடகத்துறையினருக்கு மத்தளத்திற்குப் போன்று இரு பக்க அடிகளை வாங்கினோம் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
  • தமிழ் ஊடகத்துறையில் பலரது உயிர்கள் பறிக்கப்படஎம்மவர்களும்காரணமாக இருந்துள்ளார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன்;.
  • தமிழ் ஊடகவியலாளர்களை வஞ்சிப்பதில் பழிவாங்குவதில்மிதவாதத் தமிழ்த் தலைமைகளின்பங்களிப்பும் அளப்பரியது என்பதையும் இங்கு பதிவ செய்ய விரும்புகின்றேன்.

இனிவரும் காலத்திலாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

இன்றைய நிலையில் 

  • பல தசாப்தங்களாக மறைக்கப்பட்டுக் கிடக்கின்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு எமது ஒன்றுபட்ட குரலை உயர்த்தி .நா மற்றும் .நா. மனித உரிமைப்பேரவை நோக்கி எமது பயணத்தை தொடங்க அணைத்து ஊடகத்துறையினருக்கும் தமிழ் ஊடகத்துறையினரின் சார்பில் அழைப்புவிடுக்கின்றேன்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக சர்வதேச நீதிகோரி பயணிக்காவிடில் இலங்கையின் ஒட்டு மொத்த ஊடகத்துறையும் தொடர்ந்தும் இருள் சூழ்ந்த பாதைக்குள்ளேயே பயணிக்க வேண்டிவரும்.

  • இறுதியாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தனி நபர்கள் அல்ல. அவர்களுடைய குடும்பத்தினரை தனித்துவிட்டே சென்றுள்ளனர். அவ்வாறான குடும்பங்கள் பல தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த இயலாத நிலையிலும் உள்ளனர்.

 இவர்களின் நிலைகுறித்து திட்டங்கள்வகுத்து செயற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் ஒட்டுமொத்த ஊடகத்துறைக்கும் உள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

(உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கடந்த ஜனவரி 27ஆம் திகதி இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூருமுகமாக கறுப்பு ஜனவரிமாதத்தை நினைவு கூர்ந்தனர்..கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் ஆற்றிய சிறப்பு உரை.)