LOADING

Type to search

இலங்கை அரசியல்

மனோ சாட்சி | மனம் திறக்கிறார் மனோ கணேசன் | ஒரு மனித உரிமை போராளி உருவாகிறான்

Share

(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 2)

 

காலகட்டம்: 2007ம் வருடம். மகிந்த ஆட்சி. கோத்தா பாதுகாப்பு செயலாளர். அமெரிக்க அன்றைய ராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் அமெரிக்க அரசு சார்பில் எனக்கு “சுதந்திர காவலன்”விருதை அறிவித்தார். பொதுவாக சர்வதேச சமூகம் தொடர்பிலும், அதற்கு தலைமை தாங்கிய அமெரிக்கா பற்றியும் எனக்கு கடும் விமர்சனம் இருந்தது. ஆனால், விருதை ஏற்றுக்கொண்டேன். அன்றைய அமெரிக்க தூதுவர் பொப் என செல்லமாக அழைக்கப்பட்ட ரொபர்ட் பிளேக் எனக்கு ஓர் ஆலோசனை சொன்னார். “ஒன்றில் தலைமறைவு (அண்டர்-கிரவுண்ட்) வாழ்க்கையை வாழுங்கள். அல்லது மிகவும் பகிரங்கமாக செயற்படுங்கள்” என்றார். அதில் அர்த்தம் இருந்தது

எனக்கு மனித உரிமைகளை பிடிக்கும். என் உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்க நான் இசையேன். அதேபோல், அடுத்தவர் உரிமைகளை தட்டி பறிக்கவும் நான் இசையேன். இதுதானே மனித உரிமை என்பதன் எளிமை விளக்கம்?

நான் ஒன்றும் மனித உரிமையானாக பிறக்கவில்லை. யாரும் அப்படி பிறப்பதில்லைதான். ஆனால், நம்மில் சிலர் தம்மை அப்படி நினைக்கிறார்கள். மனித உரிமை பற்றிய அக்கறை, இது பற்றிய உலகளாவிய கோட்பாடுகளை பற்றிய அறிவு, என்பவை வேறு. களத்தில் நின்று போராடுவது என்பது வேறு.

முதலாவது சம்பிரதாய, பெரும்பாலும் சிவில் நிறுவன பணி. இரண்டாவது ஜனநாயக களப்போராளி. நாம் இரண்டாம் ரகம்.

எல்லோரையும் போல் வரலாறுதான் என்னையும் படைத்து பணித்தது. நான் இல்லாவிட்டால் அல்லது போயிருந்தால், இந்த இடத்திற்கு இன்னொருவரை வரலாறு உருவாக்கி, பணித்திருக்கும். அவ்வளவுதான். மிகவும் நெருக்கடியான வேளைகளில் தலை நிமிர்ந்து நின்று நெஞ்சை காட்ட முடிந்தால் மட்டுமே, மனித உரிமையாளர் முழுமை பெற முடியும்.

உயிருக்கு அஞ்சினால், உங்கள் மனித உரிமை அறிவு என்பது, “காட்டில் எரியும் நிலவு”. அவ்வளவுதான்.      

சிலருக்கு வரலாறு முழுக்க நெருக்கடி வேளைகள் வராது. அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நான் இதில் துரதிஷ்டசாலி.   

சகோதரன் ரவியின் கொலை, அரச பயங்கரவாதம் என உறுதிபட தெரிந்தது. மனித உரிமைகளுக்காக போராடிய எங்களை அரச மற்றும் பேரினவாத அரசியல்வாதிகள், ஊடகங்கள் நேரடியாகவே “புலி”, “பயங்கரவாதி”, “அமெரிக்க ஏஜன்ட்” என கரித்துக்கொட்டினார்கள்.  

 வெள்ளை வேன் கடத்தல், கைதாகி காணாமல் போதல், படுகொலை, வகைதொகையற்ற சுற்றி வளைப்பு என்ற கைதுகள், கப்பம், மிரட்டல் ஆகிய அரச மற்றும் துணைக்குழு பயங்கரவாத நடவடிக்கைளை எதிர்த்தே  மக்கள் கண்காணிப்பு குழு என்ற மனித உரிமை அமைப்பை நிறுவினோம். 

ரவி, எங்களது மக்கள் கண்காணிப்பு குழுவிலே பதவி வகித்தார் என்ற காரணத்தினாலே என்மீது அழுத்தம் அதிகரித்தது. அடுத்து நான்தான் கொல்லப்படுவேன் என கொழும்பிலே பெருவாரியான தமிழ் மக்கள் கவலையுடன் நம்பி, அதிரடி செய்தியை (ப்ரேகிங் நியூஸ்) எதிர்பார்க்கவே தொடங்கி விட்டார்கள். 

வேடிக்கை என்னவென்றால் அதை நானே நம்ப தொடங்கினேன்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வெளியில் செல்லும் பொழுது மாலை உயிருடன் வீடு திரும்புவேனா என நானே சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டேன்.  

மாலையில் வீட்டுக்கு வரும் நான், எனது பாதுகாப்பு அதிகாரிகளை எனது வீட்டில் அவர்களது அறையிலே இருக்கவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் பின்புற மதில் சுவர் ஏறி குதித்து, பக்கத்து தெருவிற்கு வந்து, அங்கே காத்திருக்கும் நண்பர்களின் வாகனங்களில் ஏறி, இரவில் வேறு இடங்களில் தங்குவது வழக்கம். 

சில சந்தர்ப்பங்களில் இரவுகளை  வாகனத்திலேயே கடத்தியிருக்கின்றேன்.
இவ்வேளையில் கொழும்பில் அமெரிக்க தூதுவராக இருந்த ரொபர்ட் ப்ளேக் என்ற “பொப்” எனது நண்பரானார். அமெரிக்க தூதரக அரசியல் செயலாளர் மைக் என் நெருங்கிய நண்பரானார். 

அமெரிக்க அரசாங்கம், “சுதந்திர காவலன்” என்ற விருதை எனக்கு வழங்கியது. அதாவது அந்த விருதுக்கு என்னை தெரிவு செய்து, அமெரிக்காவின் அன்றைய ராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் அறிவித்தார். அந்த விருதைப் பெறுவதற்கு நான் அமெரிக்கா சென்றதாகவும், அந்த விருதுடன் பெருந்தொகை அமெரிக்க டாலர்கள் பரிசும் எனக்கு வழங்கப்பட்டதாகவும், பாராளுமன்றத்தில் பேச தொடங்கினார்கள். அரசு ஆதரவு ஊடகங்கள் கொச்சையாக இப்படியே எழுதின.

உண்மையில் அந்த விருதுடன் பணப்பரிசு தொகை எதுவும் கிடையாது. அங்கீகாரம் மட்டுமே. 

அந்த விருதை வாங்க நான் அமெரிக்கா போயிருக்கலாம். ஆனால் போகவில்லை. ஏனென்றால் அமெரிக்கா பற்றி எனக்கு விமர்சனம் இருந்தது. 

அமெரிக்காவின் நலன்களுக்காவோ அல்லது அமெரிக்கா சொல்லியோ நான் மக்கள் கண்காணிப்பு குழுவை ஆரம்பிக்கவில்லை. 

ஆனால் இந்த விருதை பெற்றுக்கொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்த காரணத்தை நண்பர் ரொபர்ட் ப்ளேக்தான் எனக்கு தெளிவாக சொல்லித்தந்தார். அரச பயங்கரவாதத்தை எதிர்த்து செயற்படும் பொழுது ஒன்றில் “அண்டர் கிரவுண்ட்” என்ற தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டும். அல்லது மிகவும் பகிரங்கமாக செயற்பட வேண்டும். இடைநடுவில் நின்றுவிட கூடாது. இடைநடுவில் நின்றால் அது பேராபத்தை தரும் என்று தெளிவாக எடுத்து கூறினார். 

இதன் அர்த்தம் என்ன?
ஒன்றில்; 

நான் போராட்ட குழுக்களை போல தலைமறைவாக இருந்தால் அரச பயங்கரவாதத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். அதாவது அரச பயங்கரவாதத்தால் சுலபமாக என்னை போட்டுத்தள்ள முடியாது. 

அல்லது; 

தேசிய மற்றும் உலக அங்கீகாரம் பெற்று வெளிப்படையாக, பகிரங்கமாக செயற்பட வேண்டும். இப்படி இருந்தால் அரச பயங்கரவாதம் என்னை அணுகுவதற்கு ஒருமுறைக்கு பல முறை யோசிக்கும். 

நான் கொல்லப்பட்டால் அந்த குற்றச்சாட்டு முழுமையாக அரசாங்கத்தின் மீது விழுந்துவிடும் என்பது மட்டும் அல்ல, வேறு எவராவது என்னைப் போட்டு தள்ளினாலும் கூட அதுவும் அரசாங்கத்தின் கணக்கிலே விழுந்துவிடும் என்பதால் அரசாங்கம் பல்லை கடித்துக்கொண்டு, வேறு யாராலும் கூட எனக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

தலைமறைவிற்கும் செல்லாமல், பகிரங்கமாக, வெளிப்படையாகவும் செயற்படாமல் இடைநடுவிலே இருந்தால்தான் போட்டு தள்ளுவதற்கு அரச பயங்கரவாதத்திற்கு வாய்ப்பு ஏற்படும் என்பது உலகளாவிய பொது விதி என எனக்கு கொழும்பிலிருந்த பல வெளிநாட்டு தூதர்களும்  சொல்லித்தந்தார்கள். 

தலைமறைவில் வாழ எனக்கு வாய்ப்பில்லையே. ஆகவே பகிரங்கமாக பேசி, எழுதி, போராடினேன்.   

ஆனாலும் இது எனது அம்மாவை (இப்பொழுது உயிருடன் இல்லை) திருப்திப்படுத்தவில்லை. “ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் கூட வீட்டுக்கு பிள்ளை” என்ற காரணத்தினாலே, அவர் என்னை நாட்டைவிட்டு வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். 

எனது அம்மாவைப் பற்றி வேறொரு இடத்தில் சொல்வதால், அவர் பற்றி இப்போது பேசப்போவதில்லை.

இருமுறை நாட்டை விட்டு வெளியேறி, ஒரு முறை அரை மாதமும், அடுத்த முறை ஒரு மாதமும் வெளிநாட்டில் வாழ்ந்தேன். 

வெளிநாடு என்றால் அமெரிக்கா, ஐரோப்பா அல்ல. நம் தந்தையர் நாடு தமிழகத்தில், நான் விரும்பும் சென்னை பட்டணத்தில், நான் இப்படி தற்காலிகமாக தங்கி இருந்தேன். 

இரண்டாம் முறை வெளியேற்றத்திற்கு முன், நான் கட்டாயமாக நாட்டில் இருக்க கூடாது என என் தாயுடன் சேர்ந்து கொழும்பிலிருந்த பிரபலமான வெளிநாட்டு தூதுவர்கள் குழுவும் சொன்னது. 

ஐரோப்பிய யூனியனின் தூதுவராக அப்போது இருந்த நண்பர் ஜூலியன் என் வீட்டில் வந்து என்னை சந்தித்தார்.

“எங்கள் தூதுவர்களின் வாராந்த கூட்டத்திலே உங்களைப் பற்றி பேசி நாங்கள் ஒரு முடிவெடுத்திருக்கின்றோம். அதை சொல்லத்தான் இங்கே வந்தேன். நீங்கள் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும். ஐரோப்பாவில் நீங்கள் விரும்பிய நாட்டில் எங்கள் விருந்தாளியாக இருக்கலாம். குறைந்த பட்சமாக இரண்டு வருடங்களாவது  நீங்கள் நாட்டுக்கு வெளியில் வாழவேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம்.” என்று கூறினார்.

நான் சிரித்து விட்டு ஒரு கணமும் யோசிக்காமல் அவரது யோசனையை மறுத்துவிட்டேன். 

ரொம்ப தூரத்தில் சென்று வாழ்ந்தால் நாட்டு நடப்புகளை கண்காணிக்க முடியாது. எனது மக்கள் இங்கே இருக்கின்றார்கள். ஆகவே உங்களுக்கு நன்றி. என் அம்மாவின் தொல்லை தாங்க முடியலை. நான் இந்தியாவிற்கு போய் ஒரு மாதம் இருந்துவிட்டு வருகிறேன் என்று சொன்னேன்.

அவ்வேளையில் என் வீட்டை விட்டு வெளியேற முடியாத கடும் நிலைமை. என்னை தனது மெய்ப்பாதுகாவலருடன், தனது குண்டு துளைக்காத வாகனத்தில் ஜூலியன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து சென்றார். 

அங்கே விசேட விருந்தினர் அறையிலே நானும், அவரும் இருந்த போது, ஒரு வேடிக்கை.  

அவ்வேளை வெளிநாடு செல்வதற்காக அங்கே அமைச்சர் மகிந்த சமரசிங்க வந்தமர்ந்தார். 

வேடிக்கை, அன்றைய மகிந்த அரசில் மகிந்த சமரசிங்கவிற்கு மனித உரிமை துறை.

“மனித உரிமை அமைச்சர் அவர்களே, உங்கள் நாட்டின் மனித உரிமை போராளியை, அவர் உயிர் வாழ வெளிநாட்டுக்கு வழி அனுப்பவே நான் இங்கே வந்தேன்.” என்று ஜூலியன், மகிந்த சமரசிங்கவின் முகத்துக்கே சொல்லியது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. 

முகத்தில் அசடு வழிய சமரசிங்க சிரித்துவிட்டு சும்மா இருந்துவிட்டார். 

இப்போது மகிந்த சமரசிங்க இலங்கையின் அமெரிக்க தூதுவராக வோஷிங்டனில் பணி செய்கிறார். 

இதுதான் மனித உரிமை போராளி என்ற எனது ஆரம்பம். இப்போது அன்றைய நெருக்கடி இல்லை. ஆகவே சம்பிரதாய மனித உரிமையாளர்கள் செயற்படுகிறார்கள். நான் அரசியலில் இருக்கிறேன். 

2005-2009 கட்டத்தில் கொழும்புக்கு எம்மை நம்பி வந்த, வட கிழக்கை சேர்ந்த உடன்பிறப்புகளுக்கே, என் பணி அதிகம் பயன்பட்டது. 

பலவேளைகளில் தகவல் கிடைத்து, பொலிஸ் நிலையங்கள், தெரு காவல் சாவடிகள் இவற்றுக்கு நேரடியாகப் போய் தமிழர்களை மீட்டு வந்திருக்கிறேன். 

இதில் ஒரு விஷயம் உள்ளது. காணாமல் போனவர்களை மீட்பது என்பது வேறு. காணாமல்  போவதை தடுப்பது என்பது வேறு. சிலருக்கு இது புரியாது. “காணாமல் போன எல்லோரையும் மீட்க முடிந்ததா?” என அப்பாவித்தனமாக கேட்பார்கள். 

எமது இயக்கம் காரணமாக, மேல் மாகாணத்தில் ஐயாயிரம் பேர் காணாமல் போகவேண்டிய நிலைமை, ஆயிரம் பேருடன் முடிந்தது. 

நாம் சும்மா இருந்திருந்தால் இது நடந்திருக்கும். 

ஏனென்றால், அரசியல் காரணமாக கடத்துவது முடிந்து, கடைசியில் கொழும்பில் துணைக்குழுக்கள், கிரிமினல்கள்  இனவாதம், கப்பம், பணம், தனிப்பட்ட பழிவாங்கல் … என்று பல்வேறு காரணங்களுக்காக சாதாரண தமிழர்கள், வர்த்த தமிழர்கள், ஏன்…, கடைசியில் முஸ்லிம் வர்த்தகர்களைக்கூட கடத்த, மிரட்ட தொடங்கி விட்டார்கள்.