LOADING

Type to search

இலங்கை அரசியல்

விநாயகர் விமர்சனம் | கிழிந்த கோவணத்தை மறைக்க பட்டுச் சட்டை

Share

(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 3)

கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி

இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவம் சோபையிழந்து சோகைபிடித்த நோயாளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டி பவனிவருவது போல நடந்து முடிந்திருக்கிறது.

200மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவழித்து அப்படி ஒரு கொண்டாட்டத்தை இப்போது நடத்த வேண்டுமா என்ற கேள்விக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க அப்படி சுதந்திர தினத்தைக் கொண்டாடாமல் விட்டால் அதற்குக் கூட வக்கில்லாத நாடு என்று உலக நாடுகள் கேலியாக நினைக்கும் ஆகவே கட்டாயம் கொண்டாட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து பணத்தை வீணாக்கியமை கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

இது மட்டுமன்றி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்குப் பணமில்லை என்று கூறிக் கொண்டு வங்குரோத்தாகி தெருவில் நிற்கும் நிலையில் கடன்வாங்கி கல்யாண விருந்து நடத்துவது போல கொண்டாட்டம் நடத்தினால் உலக நாடுகள் வாயினால் மட்டும் தான் சிரிக்குமா? ஏன்று வெளுத்து வாங்குகிறார்கள் விமர்சகர்கள். எவ்வாறாகினும் சுதந்திர தின உரையில் இலங்கையின் இந்த இழிநிலைக்கு ஆட்சி செய்த அனைவரும் மட்டுமன்றி அவர்களைத் தெரிவு செய்த மக்களும் தான் காரணம் என்று ரணில் வியாக்கியானம் கூறி இருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையருக்கு வாக்குரிமை வழங்குவது பற்றிய கலந்துரையாடல்கள் நடந்த போது மக்கலம் தேசாதிபதி இலங்கையருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் அளவுக்கு அவர்கள் அரசியல் ரீதியில் முதிர்ச்சியடையவில்லை என்றும் அவ்வாறு செய்தால் ஒரு சில குடும்பங்களில் கைகளிலேயே அதிகாரம் குவிந்திருக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அவரது எதிர்வு கூறல் அப்படியே பலித்திருக்கிறது. வெள்ளைக்காரனிற்கு தனக்கே எல்லாம் தெரியும், தாமே உலகளவில் முதிர்ச்சியடைந்தவர்கள் என்கிற தலைக்கனம் உண்டு என்கிற விமர்சனம் இருந்தாலும் அவர் அறிந்தோ அறியாமலோ கூறியது இன்று பலித்துவிட்டது என்றே கூற வேண்டும்.

சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் கழிந்த பின்னரும் ஒருசில குடும்பங்களின் கரங்களிலேயே அதிகாரம் பெரும்பாலும் செறிந்திருக்கிறது. சேனநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் ராஜபக்ச குடும்பங்கள் என்று சில சிலருரிமைச் சக்திகள் (oligarchies) இலங்கையின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்துகின்றன. உதாரணமாக ராஜபக்ச  ஆட்சிக்காலத்தில் வரவு செலவுத்திட்டத்தின் 70 சதவீதத்திற்கும் அதிகமான நிதி பெரும் எண்ணிக்கையிலான அமைச்சுப் பொறுப்புகளை வகித்த ராஜபக்ச குடும்பத்தின் கரங்களிலேயே இருந்தது. அவர்களால் எதனையும் செய்யக்கூடிய நிலைமை இருந்தது. நாட்டின் சொத்துகள் வெளிப்படையாகவே இக்குடும்பங்களால் கையாளப்பட்டமை இரகசியமான ஒரு விடயமல்ல. சேனாநாயக்க குடும்பம் அல்லது பண்டாரநாயக்க குடும்பம் அரசியல் செல்வாக்கு மிக்கதாக இருந்தபோதிலும் பொருளாதார ரீதியில் பிரபுத்துவக்குடும்பங்களாக இருந்ததுடன் பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்ததான குற்றச்சாட்டுகளுக்கு உட்படவில்லை.

கீழ்மட்டத்தில் இருந்து வந்த ரணசிங்க பிரேமதாச கூட நாட்டைக் கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகவில்லை. 2005இன் பின்னரே இத்தகைய குற்றச்சாட்டுகள் முனைப்புடன்  கூர்மையடைந்தன. இன்று மக்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த/இருக்கின்ற அரசியல்வாதிகளே  அரச வளங்களைக் கொள்ளையடித்து நாட்டைக் குட்டிச் சுவராக்கினர் என்ற குற்றச்சாட்டே தீவிரமடைந்துள்ளது . இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியவர்கள் இவையெல்லாம் பொய், முடிந்தால் நிரூபித்துக்காட்டு என்று தைரியமாகச் சவடால் விடுகிறார்கள். இலங்கையில் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் தமக்கு எதிராக விசாரணை செய்யத் துணியாது என்ற அசட்டுத் தைரியமே அது.

பண்டோரா பேப்பர்ஸ் பனாமா பேப்பர்ஸ என்று உலகின் எந்த மூலையில் நிகழும் நிதி மோசடிகளையும் வெளிக்கொணரக் கூடிய புலனாய்வு முறைமைகள் (forensic investigation) மூலம் இவற்றைக் கண்டுபிடித்து நிரூபிக்கலாம். அதைவிட இலகுவாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பினாமிகளின் பெயரில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் குறுகிய காலத்தில் எவ்வாறு  சம்பாதிக்கப்பட்டன என்ற விளக்கத்தைக் கூறுமாறு சட்டரீதியாக நிர்ப்பந்தித்தாலே வினாக்கள் பலவற்றுக்கான விடை கிடைத்துவிடும்.

ஆனால் பூனைக்கு யார் மணிகட்டப்போகிறார்கள் என்பதே பிரதானமான கேள்வி. குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர் பதவிகளில் உள்ளவர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென்ற சட்டம் உள்ளது. ஆனால் அவ்வாறு வெளியிட்டவர்கள் எத்தனை பேர்? மறுபுறம் இப்படிப்பட்டவர்களை மக்கள் ஏன் தெரிவு செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாதவராக இலங்கை அதிபரைக் கருதினால் அது மாபெரும் தவறு. ஒருபுறம் இலங்கை மக்களின் எழுத்தறிவு மிக உயர்வாக இருந்தபோதிலும் அவர்களது அடிப்படை அரசியல் அறிவு இன்னும் அடிமட்டத்திலேயே இருக்கிறது. அதனால் தான் முதிர்ந்த ஒரு ஜனநாயகத்திற்குப் பதிலாக புரையோடிய ஒரு ஜனநாயகமாகத் தெரியும் ஒரு ஆட்சி முறைக்குள் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சண்டியர்களுக்கும், சாராய வியாபாரிகளுக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் வாக்களிப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள். பணம் இருக்கவேண்டும், சண்டித்தனம் காட்டவேண்டும் எதிர்கட்சிக்காரனை சத்தமாக கெட்டவார்த்தையில் திட்டவேண்டும் தங்களுக்கு அவர்கள் சில எலும்புத்துண்டுகளையும் போடவேண்டும். அவர்களையே தமது பிரதிநிதிகளாக நினைக்கிறார்கள். இந்த கட்டுரையை வாசிக்கும் போது மெர்வின் சில்வா போன்றவர்களின் நினைப்பு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுவது போல ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்திருந்தாலும் கூட அதனை நியாயப்படுத்தி அவர் கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காத்த தலைவர் கொள்ளையடித்தால் என்ன பிழை என்று கேட்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அந்தளவிற்கு இனவாதம் அவர்களின் இரத்தத்தில் ஊறிபோயுள்ளதகாவே நினைக்க வேண்டியுள்ளது.

இப்போது ரணில் பொதுமக்களை நோக்கி ”நீங்கள் பிழையாகத் தெரிவு செய்தபடியால் தான் தவறுகள் நடந்திருக்கின்றன ஆகவே வாக்காளப் பெருமக்களும் நாட்டின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்புக் கூறவேண்டும்” என்கிறார். ஆகவே நடந்த பிழைக்குப் பொறுப்பெடுத்து வரிகளைச் செலுத்துங்கள் 2048 வாக்கில் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்யலாம் என்கிறார். ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது நாட்டில் நடந்த ஊழல் மோசடிகள் பற்றியோ பொருளாதார வீழ்ச்சிக்கு நேரடிப் பொறுப்புக் கூற வேண்டியவர்களை விசாரிப்பது பற்றியோ அதன் மூலம் இழந்த நாட்டின் செல்வத்தை மீளப்பெறுவது பற்றியோ எவ்வித குறிப்பும் அவரது உரையில் இருக்கவில்லை. ஏதோ நடந்தது நடந்து விட்டது அதற்கான பொறுப்பை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தொனியிலேயே அவரது உரை இருந்தது.

நாட்டுமக்களில் பலர் நல்லதொரு அரசியல் கலாசார பாரம்பரியத்தை உருவாக்கும் நோக்கில் வாக்களிக்கவேண்டும் என்று கருதினாலும் தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக எவரை நிறுத்துகிறார்களோ அவர்களுக்கே வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய துர்பாக்கியம் உள்ளது. கட்சி வேட்பாளர் பட்டியலை நோக்கினால் முன்னர் இருந்த அதே கொள்ளைக் கூட்டம் மீண்டும் இடம் பெற்றிருக்கும். ஆகவே வாக்காளர்கள் தம் முன்னே நிற்கும் பத்தாவது அல்லது பதினோராவது சிறந்த தெரிவுகளில் ஒன்றையே அழுகிய பழங்களில் எது குறைவாக அழுகியது என்று பார்த்துத் தெரிவு செய்யவேண்டியிருக்கிறது. எனவே மக்கள் பிழையானவர்களைத் தெரிவு செய்தார்கள் என்று முற்றிலும் குற்றஞ்சுமத்த முடியாது. வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கவேண்டிய பலர் பாராளுமன்றத்தை ஓய்விடமாகக் கருதி தூங்கி வழிவதை பலதடவை பார்த்திருக்கிறோம்.

கனடாவில் உள்ளது போல நியூஸிலாந்தில் மற்றும் சிங்கப்பூரில் உள்ளது போல் இளைஞர்களை அதிகளவில் உள்ளடக்கிய பாராளுமன்றங்கள் சிறப்பாக இயங்கமுடியும் அதற்கு அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். கற்றவர்களும் தொழில் நிபுணத்துவம் பெற்றவர்களும் பாராளுமன்றத்தில் அதிகளவில் இடம் பெற்றால் சிறப்பான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். மாறாக பாட்டன்-தகப்பன்-மகன்-பேரன் என மந்திரிப்பதவி தொடர்ந்து செல்லுமாயின் சீரழிவு தொடரும். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக ஆகிய இனக்குழுமங்களுக்கு தலைமைத்துவம் வழங்கவல்ல தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைமைத்துவத்தை (visionary leadership) இந்த இனக்குழுமங்கள் மத்தியிலும் காண முடியாதுள்ளது. இன்றைய நிலையில் பிரதான நீரோட்ட அரசியல் கட்சிகளுக்கும் கட்சித் தலைமைகளுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. எனவே இப்போது வரும் தேர்தல்கள் ஆட்சியாளர்களுக்கு வோட்டர்லுவாக அமையலாம். எனவே தான் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை எப்படியாவது பிற்போட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள். காய்களை குறுக்கம் நெடுக்குமாக நகர்த்துகிறார்கள். ஆனால் தேர்தலைப் பிற்போடுவது மேலும் பாதகமான நிலையினை ஏற்படுத்தலாம். கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது போல 13ஆம் திருத்தம் என்ற இனவாதக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் போக ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் இது தொடர்பில் என்ன முடிவு எடுக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தேர்தல் நடக்குமாயின் வன்முறைகளைப் பயன்படுத்தி தமது இலக்குகளை அடைய எத்தனிக்கும் சாத்தியக்கூறை மறுப்பதற்கில்லை. சில நாட்களுக்கு முன்னர் பெற்றோல் விலையும் எரிவாயு விலையும் மீண்டும் அதிகரித்திருக்கின்றன.

அரச வைத்தியர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் தமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. எனவே எதிர்வரும் வாரங்கள் பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கும் வாரங்களாக அமையலாம். வற்புறுத்தி பணிய வைக்கும் தமது சக்தியை (coercive power) பயன்படுத்தி போராட்டங்களை அடக்கிவிடலாம் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. இந்த நிச்சயமற்ற நிலைமை இலங்கை பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்வதுடன் இலங்கையின் எதிர்கால பொருளாதார மீட்சியினை மிக மிக மெதுவானதாகவும் வலிமிகுந்ததாகவும் மாற்றிவிடும். பொருளாதார மீட்சி கடினமானது என்பதை தேய்ந்த இசைத்தட்டு போல மீண்டும் சொல்வதற்கு ஒரு ஜனாதிபதி தேவையில்லை. அது பொதுமக்களுக்கே நன்கு தெரியும். அதிலிருந்து மீளும் வரையில் உயிர்வாழவேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள் என்றே அவர்கள் கேட்கின்றனர். வலியை அனுபவிக்கப்பழகிக் கொள்ளுமாறு ஆளுந்தரப்பு சொல்லாமல் சொல்கிறது. பொறுமை இழந்த மக்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்தே காணவேண்டும்.