மனோ சாட்சி | மனம் திறக்கிறார் மனோ கணேசன் | “பெளத்த தேரர்கள், புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்திக்க விரும்பிய கதை”
Share
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம்-3)
- “தேரரே, அப்படியானால் உங்களுக்கு கிளிநொச்சியில் பொங்கல் கொண்டாட வேண்டி வரும்” என்று நான் சொன்னேன்.
- இன்று பெரும்பான்மை கட்சிகள், தேரர்களை பயன்படுத்தினாலும், தேரர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்குவதில்லை.
- மூடிய தடுப்பிற்கு அப்பால் தேரர்கள் என்னத்தான் சாப்பிடுகிறார்கள் என்று அறிய எப்பொழுதுமே எனக்கொரு ஒரு குறு குறுப்பு இருந்தது.
- ஊடக பொறுப்பாளர் தயா மாஸ்டரே, செய்தி வழங்கி இருக்கின்றார் என்பதை நான் தெரிந்துகொண்டேன்
காலகட்டம்: 2003ம் வருட டிசம்பர். ரணில் ஆட்சி. போர் நிறுத்த காலகட்டம். |
இன்று, பெப்ரவரி 2023ல், கொழும்பில் பெளத்த தேசியவாத தேரர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
“13ம் திருத்தம், மாகாணசபை, பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நாட்டை பிளவு படுத்தும். ஈழம் உருவாகும். எல்டிடிஈ பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயன்றதை, இன்று தமிழ் கட்சிகள் 13 மூலம் பெற பார்க்கிறார்கள். ஆகவே நாட்டை காக்க இதை எதிர்ப்போம்.” இவைத்தான் இவர்களின் கோஷம்.
“13ம் திருத்தம், இந்நாட்டு அரசியலமைப்பின் ஒரு அங்கம். புது சட்டம் அல்ல. ஆகவே அதை அமுல் செய்வோம்”. இப்படி ஜனாதிபதி ரணில், கூறப்போக கொழும்பில் ஒரே மஞ்சள் காவி பேராட்டம். வறுமையின் நிறம் சிகப்பு. இன்று கொழும்பின் நிறம் காவி.
13ம் திருத்த மாகாணசபைகளுக்குள்ளே பொலிஸ் அதிகாரங்கள், ஒன்றும் இந்தியாவில் இருக்கின்ற தமிழ்நாடு போலிஸ், கேரளா போலிஸ் என்பவை போல மாநில போலிஸ் அல்ல. இருக்கப்போவது ஸ்ரீலங்கா பொலிஸ்தான். ஒரே இலங்கை பொலிஸ் மாஅதிபர்தான். அவரும் கொழும்பில்தான் இருப்பார்.
அதாவது தமிழகத்தை போன்று “போலிஸ்” அல்ல, இலங்கையில் “பொலிஸ்”தான்..! இது புரியாதோருக்கு மூளையில் சுகமில்லை.
இந்த பெளத்த தேரர் கும்பல்தான், 2019ல் கோட்டாபயவுக்கு ஆதரவு திரட்டி, களனி மஹா விஹாரரைக்கு பின்புறம் ஓடும் களனி ஆறு நள்ளிரவில் பிளந்து, அதற்குள்ளே நாகலோகத்தில் இருந்து நாகராஜன் எழுந்து வந்தான் என்று கதை விட்டவர்கள். நாகராஜன் வந்து, “சிங்களவரை காக்க கோட்டபய என்ற மன்னன் வருகிறான். அவனை வெற்றியடைய செய்யுங்கள்”, என சொன்னதாகவும் இவர்கள் வாய் கூசாமல் கூறினார்கள்.
இவர்களது நாகராஜன் உண்மையில் ஆற்றில் மிதந்த நீர் பாம்பு குட்டி. அதை பிடித்து, “மேட் இன் சைனா” என்று பொறிக்கப்பட்ட வெள்ளித்தட்டில் வைத்து, ஆற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தார்கள். (கவனிக்க, சைனாக்காரன், நாகலோகத்தில் வெள்ளித்தட்டு விற்கும் கடை போட்டுள்ளான்..!)
பின் “மேட் இன் யூஎஸ்” கோக்காகோலா புட்டியில் அடைத்து, களனி விகாரையில் வைத்து, இலட்சகணக்கான பெளத்த மக்களை அழைத்து வந்து “சாமி தரிசனம்” காட்டினார்கள். (கவனிக்க, நாகலோகராஜனையே அடைக்கும் கோலா புட்டியை அமெரிக்காரன் தயாரித்துள்ளான்..!)
பின் கோட்டாவின் ஓட்டத்துடன் ஒதுங்கி இருந்த தேரர்கள்தான், இப்போது மீண்டும் எழுந்து வந்து விட்டார்கள். ஆகவே மீண்டும் ஆட்டம்.
இங்கே நான் அரசியல் பேச வரவில்லை. ஆனால், கீழே கூறப்போகும் கதைகளை இந்த முன்னுரையுடன் கூறினால்தான், சுவாரசியம்.
அப்போதைய, ரணில் அரசு-புலிகள் சமாதான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு கட்சிகள், அன்று விமல் வீரவன்ச தலைமையில் ஜேவீபியும், ஹெலஉறுமயவும்தான். 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், இந்த சமாதான எதிர்ப்பு கோசத்தை வைத்துத்தான், ஹெலஉறுமய கட்சியின் சார்பாக கணிசமான தேரர்கள் பாராளுமன்றத்திற்கு எம்பீக்களாக வந்தார்கள்.
பாராளுமன்ற சபைக்குள்ளே நுழையும் எம்பீக்கள் சபாநாயகரை நோக்கி தலைசாய்த்து விட்டு உள்வர வேண்டும். வெளியேறும் போதும் தலைசாய்த்து விட்டு போக வேண்டும். சபைக்குள்ளே சபாநாயகர் வரும்போது எல்லா எம்பீக்களும் நிற்க வேண்டும்.
இவற்றை இந்த பிக்கு எம்பீக்கள் செய்யார். மேலதிகமாக பிக்கு எம்பீக்களின் ஆசனங்களில் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு அறையின் மூலையில் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, அந்த சிற்றறையில்தான் இவர்கள் உணவு உண்ணுவார்கள்.
பணியாளர்கள், இவர்கள் கேட்பதை பரிமாறி மூடி, சென்று கொடுப்பார்கள். நமக்கு இவர்கள் உணவு உண்ணுவது தெரியாது.
எனக்கு எப்போதுமே ஒரு குறு குறுப்பு. மூடிய தடுப்பிற்கு அப்பால் அந்த சிற்றறைக்குள்ளே திடீரென நுழைந்து இவர்கள் என்னத்தான் சாப்பிடுகிறார்கள் என்று பார்க்க ஆசை.
அந்த ஆசை நிறைவேற முன் காலம் ஓடி, தேர்தல்கள் நடந்து, கடைசியாக இப்போது பாராளுமன்றத்தில் இரத்தின தேரர் மட்டுமே எஞ்சியுள்ளார்.
இன்று பல பெரும்பான்மை கட்சிகள், பிரசாரங்களில் தேரர்களை பயன்படுத்தினாலும், எல்லா சிங்கள கட்சிகளும் தேரர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்குவதில்லை, என முடிவு செய்துள்ளன. இது நல்ல விஷயம்.
இத்தகைய தீர்மானத்தை முதலில் பகிரங்கமாக எடுத்தவர் ஐதேக தலைவர் ரணில்தான்.
பிற்காலத்தில் யானை வளர்த்த வானம்பாடியாக பெயர்பெற்ற, வண. உடுவே தம்மாலோக தேரர், 2003 ஆண்டு போர் நிறுத்த காலக்கட்டத்திலே, என்னை தனது இருப்பிடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரது விகாரை இல்லமான “அசப்பு” கொழும்பிலே எங்கே இருக்கிறது என கொழும்பு எம்பி எனக்கு தெரியாது. எனது பாதுகாப்பு அதிகாரி தீர்மானிக்கப்பட்ட தினத்திலே வண. உடுவே தேரரின் இருப்பிடத்திற்கு என்னை அழைத்து சென்றார். பார்த்தால், நம்ம வீட்டிலிருந்து ரொம்ப தூரமில்லை.
“அசப்பு” என்ற அந்த இல்லத்தின் வாசலில் என்னை வரவேற்றவர்கள், ரணிலின் நண்பர் தினேஷ் வீரக்கொடி (இன்று துறைமுக நகர் அதிபர்).
மாடியில் வண. தம்மாலோக்க தேரர் நான் வரும்வரை காத்திருந்தார். என்னால் ஆகவேண்டியது என்ன என்று கேட்டேன்.
“மனோ, எங்களுக்கு தமிழ்ச்செல்வனை சந்திக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுங்கள்.” என்று நேரடியாக விடயத்திற்கு வந்தார்.
“பார்க்கின்றேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன். இது பற்றி தமிழ்ச்செல்வனுக்கு மின்னஞ்சல் மூலம் எனது அலுவலகத்தில் இருந்து தகவல் சென்றது.
மூன்று வாரங்களுக்கு பிறகு தினேஷ் வீரக்கொடி என்னை மீண்டும் அசப்புவிற்கு அழைத்துச்சென்றார். அன்று அங்கே வண. உடுவே தம்மாலோக்க தேரருடன் வேறொரு தேரரும் இருந்தார். அவர்தான் வண. எல்லாவல மேதானந்த தேரர்.
எல்லாவல மேதானந்த தேரர், தனக்கு தானே “புரா-வித்யா சக்கரவர்த்தி” (வரலாற்று மாமன்னன்) என பெயர் கூட்டிக்கொண்டவர். வடக்கு கிழக்கு முழுக்க “பெளத்த வரலாற்று ஸ்தானங்களை” குறிப்பிட்டு ஒரு வரைபடம் தயாரித்தவர். அதைத்தான் இன்று அரசுகள் நடைமுறை படுத்த முயலுகிறார்கள்
இருவரையும் புத்தனின் பெயரை சொல்லி வணங்கிவிட்டு, சிவனின் பெயரை சொல்லி, “சிவனே” என்று அவர்கள் சொல்வதை கேட்க ஆரம்பித்தேன்.
வண. எல்லாவல மேத்தானந்தர் அவரது நாட்குறிப்பேட்டை பிரட்டியபடி நேரடியாக, “மனோ, எனக்கு ஜனவரி 12 முதல் 16 வரை ஓய்வுள்ளது. தமிழ்ச்செல்வனை சந்திக்க நாளொன்றை ஏற்பாடு செய்வோமா?” என்று கேட்டார்.
இது நடைபெற்றது, சரியாக 2003 ஆம் ஆண்டின் இறுதி காலம் ஆகும்.
“தேரரே, அப்படியானால் உங்களுக்கு கிளிநொச்சியில் பொங்கல் கொண்டாட வேண்டி வரும்” என்று நான் சொன்னேன். “நல்லது. நடத்துவோம். அது மாற்றத்தை கொண்டு வரலாம்.” என்று இரண்டு தேரர்களும் கூறினார்கள்.
பின்னர் நான், “சரி, சரி” என்று கூறிவிட்டு விடைபெற்று வந்து, மீண்டும், தமிழ்ச்ச்செல்வனின் அலுவலகத்துக்கு அறிவித்தேன்.
சில நாட்களில், “தேரர்களை சந்திக்க தலைமை அனுமதி வழங்கவில்லை. மன்னிக்கவும்.” இப்படி தமிழ்ச்செல்வனிடம் இருந்து செய்தி. அதனை நான் தேரர்களுக்கு கூறினேன்.
தேரர்களுக்கு நிறையவே ஏமாற்றம். அதை மறைத்துக்கொண்டு, தாம் தமிழ்ச்செல்வனை சந்திக்க கோரிக்கை விடுத்ததையும், அவர்கள் மறுத்ததையும் பகிரங்கமாக்க வேண்டாம், என்று என்னிடம் கேட்டார்கள்.
ஆகவே இந்த செய்தியை வெளியில் விட வேண்டாம் என, நானும் தமிழ்ச்செல்வனுக்கு செய்தி அனுப்பினேன். செல்வனும் உடன்பட்டார்.
உண்மையில் அச்சமயத்தில் புலிகள் தேரர்களை சந்தித்திருக்க வேண்டும் என நான் விரும்பினேன். யார் யாரையோ அக்காலத்தில் சந்தித்த தமிழ்ச்செல்வன், இவர்களையும் சந்தித்திருக்கலாம். இதன்மூலம் இனவாத இறுக்கத்தில் ஓரளவு தளர்வு ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கணிப்பு.
ஆனால், இது அவர்கள் முடிவு. எனது நிலைப்பாடு பற்றி நான் அவர்களிடம் சொல்லவில்லை.
ஒருமாதம் கழித்து சன்டே லீடர் பத்திரிகையில் ஒரு கிசுகிசு செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. தெற்கிலிருந்து பிரபலமான பௌத்த தேரர்கள் தம்மை சந்திக்க முயன்றதாகவும், தாம் அதை நிராகரித்ததாகவும் புலிகள் கூறியதாக அந்தச் செய்தி.
இச்செய்தியை எப்படி சன்டே லீடர் பிரசுரித்தார்கள்? என்று தேடினேன். தேடி முடிப்பதற்குள் தினேஷ் வீரக்கொடி என்னை தொலைபேசியில் அழைத்தார். தாம் கிளிநொச்சி செல்ல விரும்பியதை இரகசியமாக வைத்துக்கொள்ள தாம் கோரியும், அது பத்திரிகையில் வந்திருப்பதையிட்டு தேரர்கள் கவலையடைந்துள்ளதாக கூறினார்.
அதை கேட்டதும் எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. எப்படி நண்பர் தினேஷின், முகத்தை பார்ப்பது? நான் செய்தி வழங்கியதாகதானே இவர்கள் நினைப்பார்கள்.
இந்த செய்தியை சன்டே லீடர் பத்திரிகைக்கு யார் தந்தது என ஊடக உளவு நண்பர்கள் மூலமாகத் தேடினேன்.
இதை பகிரங்கப்படுத்துவதில்லை என்ற இரகசிய நிலைப்பாட்டை மீறி, சன்டே லீடர் பத்திரிகைக்கு புலிகளின் ஊடக பொறுப்பாளர் தயா மாஸ்டரே கூறியுள்ளார். இது எனக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இது வேறு யுகம். ஆகவே ஒரு யுகத்து செய்திகளை அடுத்த யுகத்திலே சொல்லலாம். அப்போது நடந்தவைகளை இப்போது நான் பகிரங்கமாக கூறுகின்றேன்.
“தமிழ் பிரிவினைவாதிகள், புலிகளை அழிக்கவேண்டும்”, என்று திட்டி, தம்மைத் தாமே சிங்கள பௌத்த தேசிய வீரர்கள், என்று அறிவித்துக்கொண்டாலும்கூட, ஒவ்வொருவரின் நடத்தையும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிகழும் நிகழ்வுகளால்தான் தீர்மானிக்கப்படுகின்றது.
புலிகள் பலமாக இருந்த பொழுது அவர்களுடன் பேசி ஒரு இலங்கைக்குள், அதி உச்ச அதிகார பகிர்வுக்கு தயாராக இருந்த சிங்கள தலைமைகள், புலிகள் பலவீனமடைந்த பிறகு குறைந்தபட்ச அதிகார பகிர்வுக்கு கூட இணங்க மறுப்பதை வரலாறு இதோ காட்டுகிறது.
அதே போல, புலிகளும் தாங்கள் பலமாக இருந்த காலத்தை பயன்படுத்த தவறினார்கள். இவை வரலாறு தரும் தரவுகள், படிப்பினைகள் என நான் நினைக்கின்றேன்.