பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்
Share
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான கொட்டொலிகளை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வாகத் தமிழீழமே இருக்கும் என்ற முழக்கத்தை எழுப்பியும் அங்கு திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பறை இசை முழக்கங்களுடன் தமிழீழத் தேசிய கொடிகளைக் கைகளில் ஏந்தியவாறு “13 வது திருத்தச் சட்டம் தீர்வல்ல,ஒற்றையாட்சி அரசியல் யாப்பே இனவழிப்பிற்கு காரணம்”என்றும் சர்வதேசங்களை நோக்கி தொடர் கொட்டொலிகளை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் அனைத்துத் தளங்களிலும் அரசியற் பணியாற்றிவரும் செயற்பாட்டாளர்கள் இணைந்து நின்று போராட்டத்தைப் பலப்படுத்தியதுடன் கருத்துரைகளையும் வழங்கினர்.“ஈழத்தமிழர்களாகிய நாங்கள் சிறிலங்கன் என்ற அடையாளத்தை நிராகரிக்கின்றோம், சிறிலங்காவின் அரசியலமைப்பை நிராகரிக்கின்றோம் , சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களுக்குக் கரிநாள்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சொல்லியங்களையும் ஏந்தியிருந்தனர்.
வழமைபோல் இல்லாது இந்த வருடம் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சிறீலங்காவின் இனவழிப்பின் அடையாளமான சிங்கக் கொடி தமிழ் மக்களின் எழுச்சி கண்டு சிங்கள இனத்தின் சுதந்திர நாளான இன்று பறக்கவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதே கம்பத்தில் கறுப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் நின்ற மக்களால் பறக்க விடப்பட்டன. தூதுவராலயத்தைச் சூழ தமிழீழ தேசியக்கொடி விடுதலை முழக்கத்துடன் உரிமைக்காகப் பறந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் தமிழ் மக்களால் சிறிலங்காவின் ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு தீயிட்டு எரிக்கப்பட்டு இருந்தது.
இன்றையமுதன்மை உரைகளில் தாயகத்தில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய வடக்குக் கிழக்கு இணைந்த பல்கலைக்கழக மாணவர் போராட்டம் பற்றிப் பேரெழுச்சியோடு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இறுதியாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதி ஏற்புடன் கரி நாள் போராட்டம் நிறைவிற்கு வந்தது.