LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்திய மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை ஆகியோர் யாழ்ப்பாணத்தில்…

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்

இந்திய மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை உள்ளிட்ட இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட இராஜதந்திரிகள் பலாலி விமான நிலையத்தினூடாக நேற்று இலங்கைக்கு வருகை தந்தனர்.

மத்திய தகவல் ஒலிபரப்பு , மீன்வளம் , கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் சட்டத்தரணி கலாநிதி லோகநாதன் முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் குப்புசாமி அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ளனர்.

விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

கடற்றொழில் அமைச்சர், யாழ் இந்தியத் துணை தூதுவர், உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இந்திய சிரேஷ்ட இராஜதந்திரிகளுக்கு பாரம்பரிய முறைப்படி அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்திய மத்திய இணை அமைச்சர் L.முருகன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

பின்னர் மத்திய இணை அமைச்சர் யாழ். நூலகத்தில் மீனவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கினார். இதன்போது, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற 250 மீனவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதனிடையே, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீனவர் சங்கங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

2021 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான காலப்பகுதிக்குள் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட 16 இந்திய ட்ரோலர் படகுகளில் நான்கு படகுகள் நாட்டிலுள்ள சில மீனவர் சங்கங்களுக்கு கடற்றொழில் அமைச்சரால் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன