LOADING

Type to search

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் கே.எல். ராகுல் இடம்பெற மாட்டார் என தகவல்

Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் கே.எல். ராகுல் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மோசமான ஆட்டம் காரணமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளிவந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்டில் 3 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் மொத்தமே 38 ரன்களை எடுத்திருக்கிறார். அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றனர். ஆனால் அவரை அடுத்து வரும் 2 டெஸ்ட்களுக்கு தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. இருப்பினும், அவர் வகித்து வந்த துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் 3ஆவது டெஸ்ட் போட்டியிலும் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், 3 ஆவது டெஸ்டில் ராகுல் களம் இறங்க மாட்டார் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் இளம் வீரராக இருக்கும் சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அணியில் நிரந்த இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக கே.எல்.ராகுலின் ஆட்டம் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுலை நான் விமர்சிப்பதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ராகுல் மீண்டும் நன்றாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ராகுல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்ப வேண்டும். இப்போது ரஞ்சி போட்டிகள் முடிந்து விட்டன. எனவே இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் ராகுல் விளையாட வேண்டும். இதைத்தான் முன்பு புஜாரா செய்திருந்தார். கவுன்டி போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்புவதுதான் ராகுலுக்கு இருக்கு சிறந்த ஆப்ஷன். ஆனால் இதற்கு அவர் ஐ.பி.எல். தொடரை தவிர்க்க வேண்டுமே? இதை செய்வாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.