வரி உயர்வு; மானியங்கள் வெட்டு: படைக்குறைப்பு இல்லை? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
ரணில் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே உரமானியம் நிறுத்தப்பட்டு விட்டது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின் கட்டணங்களின்படி மின் மானியமும் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதாவது அரசாங்கம் மானியங்களை வெட்டத் தொடங்கி விட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மாத வருமானம் பெறுவோருக்கு வரி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நடுத்தர வர்க்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. அதன் விளைவாக படித்த நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கி விட்டது. இவ்வாறு புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஐ.எம்.எப்பின் மற்றொரு நிபந்தனையையும் ரணில் நிறைவேற்றி இருக்கிறார். அண்மையில் கண்டியில் உரையாற்றும் பொழுது அவர் அதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றார். தான் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளையே நிறைவேற்றி வருவதாக. அப்படியென்றால் பன்னாட்டு நாணய நிதியம் அவரிடம் படையினரை ஆட் குறைக்கும்படி கேட்கவில்லையா?
ஏனெனில் இலங்கைத் தீவில் இப்போதிருக்கும் படையினரின் எண்ணிக்கை இந்த நாட்டின் ஜனத்தொகையோடு ஒப்பீடுகையில் அதிகமானது. நாட்டின் பொதுத்துறை ஊதியத்தில் சுமார் 50%படைத்தரப்புக்கு வழங்கப்படுகிறது என்றும், உலகில் 100 பேர்களுக்கு எத்தனை படைவீரர்கள் என்ற விகிதத்தில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது என்றும் நிஷான் டி மெல்– வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்டின் பணிப்பாளர்– கூறுகிறார். இலங்கைத் தீவின் பாதுகாப்பு செலவினம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்கள் இரண்டையும் கூட்டி வரும் தொகையை விட அதிகமாக இருப்பதும் பொருளாதார சீரழிவுக்கு ஒரு காரணம் என்று நிஷான் கூறுகிறார்.
இவ்வாறு இலங்கைத் தீவு தன் வல்லமைக்கு மீறி, பருமனுக்கு பொருந்தா விகிதத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கி வருகிறது. இது கிட்டத்தட்ட பாகிஸ்தானில் இருப்பதை ஒத்தது. பாகிஸ்தானிலும் படைத்துறை அந்த நாட்டின் தேவைக்கும் அதிகமாக வீங்கிப் பெருத்துக் காணப்படுகிறது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ஒரே வேறுபாடு, பாகிஸ்தானில் அவ்வப்பொழுது படைத் தளபதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதுண்டு, இலங்கைத்தீவில் அப்படியல்ல. ஆனால் பாகிஸ்தானை போலவே இலங்கையிலும் படைத்துறையானது, அரசியலை தீர்மானிக்கும் ஒரு பிரதான துறையாக காணப்படுகிறது.
இவ்வாறு ஒரு சிறிய தீவின் சனத் தொகை ; தேவை ; பருமன் என்பவற்றின் அளவுப் பிரமாணத்துக்கு அதிகமாக இலங்கைத்தீவு அளவில் பெரிய படைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அக்கட்டமைப்புக்கு அதிகளவு நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது. நாட்டின் வளமனைத்தும் கொடுத்துப் பாதுகாக்கப்படும் படைத்துறையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி தமிழ் மக்களின் தாயகத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது தமிழ்ப் பகுதிகளை ராணுவ மயப்படுத்தும் நோக்கத்தோடு நாட்டின் பெருமளவு நிதி வடக்குக் கிழக்கில் கொட்டப்படுகிறது என்பதே உண்மை.
இவ்வாறு தன் வல்லமைக்கும் அளவுக்கு மீறி பாதுகாப்பு துறைக்கு அதிகளவு பணத்தைக் கொட்டும் ஒரு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கும் பொழுது அதை மீட்க முற்படும் பன்னாட்டு நாணய நிதியம் பிரதான நிபந்தனியாக எதனை முன் வைக்க வேண்டும்? பாதுகாப்பு செலவினங்களை குறை என்று தானே கேட்க வேண்டும்? ஆனால் அப்படிக் கேட்கப்பட்டதாகத் தெரியவில்லையே? ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கண்டியில் ஆற்றிய உரையின்படி நாட்டில் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் படைக்குறைப்புப் பற்றி ஒரு வார்த்தைதானும் பேசப்படவில்லை. அல்லது ஐ.எம்.எப் அவ்வாறு நிபந்தனைகளை விதித்திருந்தாலும் அரசாங்கம் உள்நாட்டு அரசியலைக் கவனத்தில் எடுத்து அதை மறைக்கக்கூடும்.
13 ஆவது திருத்தத்தையே அமுல்படுத்த வேண்டாம் என்று கேட்கும் பிக்குகள் படையினரின் எண்ணிக்கையை குறைத்தால் அல்லது பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டினால் அதற்கு எதிராகவும் கிளர்ந்து எழுவார்கள். எனவே படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது என்ற விடயம் தென்னிலங்கையில் ஒரு அரசியல் தற்கொலையாகவே பார்க்கப்படும். அதனால் ரணில் விக்கிரமசிங்க படையினரில் கை வைக்கத் துணிவாரா?
ஆனால் அவ்வாறு படையினரின் எண்ணிக்கையை குறைக்காமல் இலங்கை தீவின் அரசு செலவினங்களை குறைக்க முடியாது. இலங்கைத் தீவைப் போலவே தனது அளவுப்பிரமாணத்துக்கு அதிகமாக படையினரைக் கொண்டிருக்கும் ஒரு நாடு பாகிஸ்தான். அங்கேயும் இப்பொழுது பொருளாதார நெருக்கடி பயங்கரமாக இருக்கிறது. அதன் விளைவாக அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கேயும் இப்போதுள்ள அரசாங்கம் அரசு செலவினங்களை குறைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அண்மையில் ரணில் விக்கிரமசிங்க அரச பிரதானிகள் விமான பயணங்களின்போது சாதாரண பயணிகளை போல பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். அதை ஒத்த அறிவுறுத்தல்களை பாகிஸ்தானிய அரசும் அண்மையில் வழங்கியிருக்கிறது.
ஆனால் அவ்வாறு அரச ஊழியர்களின் அல்லது அதிகாரிகளின் அல்லது அரசுப் பிரதானிகளின் ராஜபோக செலவுகளை குறைப்பதன்மூலம் மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. மாறாக படையினரின் ஆட்தொகையைக் குறைத்து, பாதுகாப்புச் செலவினங்களைக் குறைத்தாலே நாட்டின் பெருமளவு நிதி சேமிக்கப்படும். ஆனால் அந்த விடயத்தில் கை வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாரா?
சில சமயம் அதை அவர் வெளிப்படையாக செய்ய தொடங்கினால், பிக்குகள் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள். பிக்குக்கள் மட்டுமல்ல சிங்கள பௌத்த ஜனத்தொகையில் பெரும் பகுதி அவ்வாறு அவருக்கு எதிராக கிளர்ந்து எழ முடியும். அப்படி எதிர்ப்புக் கிளம்பி எழப்போகிறது என்று கூறியே அவர் பன்னாட்டு நாணய நிதியத்தை சமாளிக்கவும் முடியும்.
அதாவது உரமானியத்தை வெட்டிய பொழுது விவசாயிகள் அதிக விலையைக் கொடுத்து எப்படி உரத்தைப் பெறலாம் என்றுதான் யோசித்தார்கள். அதிக விலை கொடுத்து வாங்கிய உரத்தில் செய்யப்பட்ட வேளாண்மையை அதிக விலைக்கு விற்றார்கள். வியாபாரிகள் அரிசியின் விலையை மேலும் கூட்டி விற்றார்கள். மொத்தத்தில் கூட்டப்பட்ட எல்லா விலைகளும் நுகர்வோர் மீது சுமத்தப்பட்டன. அவ்வாறே மின் வெட்டை நிறுத்திவிட்டு மின் கட்டனத்தைக் கூட்டியபோது, மக்கள் மின் நுகர்வை எப்படிக் குறைக்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்கள்.
ஆனால் வரி உயர்வு,மானிய வெட்டு போன்றவற்றின் விளைவாகத்தான் கடந்த ஞாயிற்றுக்க் கிழமை கொழும்பில் ஜேவிபி ஒழுங்குபடுத்திய கூட்டத்தில் அதிகளவு மக்கள் திரண்டார்கள். கடந்த புதன் கிழமை தொழிற் சங்கங்கள் நடத்திய போராட்டதுக்குக் பெருமளவுக்கு ஆதரவு கிடைத்தது. மக்கள் போராடக் கூடிய மனநிலையோடுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் போராட்டங்களை இனவாதத்தின் மூலம் எளிதாகத் திசைதிருப்பலாம் என்ற நிலைமை தொடர்ந்துமிருக்கிறது. குறிப்பாக 13க்கு எதிராக பிக்குகள் திரண்ட போது நாட்டின் கவனம் விலைகளில் இருந்து இனவாதத்தை நோக்கி திருப்பப்பட்டது. அப்படித்தான் இனிமேலும் இனவாதத்தை கிளறினால் விலை உயர்வும், மானியங்கள் வெட்டப்பட்டமையும் மறக்கப்பட்டு விடும். கவனம் படையினரை ஆட் குறைக்கிறார்கள் என்ற விவகாரத்தின் மீது குவிக்கப்பட்டுவிடும். எனவே ஐ.எம்.எப் அதை ஒரு நிபந்தனையாக முன்வைத்தாலும்கூட அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை குறைக்குமா என்பது சந்தேகம்தான்.
படையினரின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கை ராணுவமயநீக்கம் செய்ய முடியாது. அதாவது தொகுத்துக் கூறின் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குப் பின்னரும் தென்னிலங்கையில் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் மனோ நிலை மாறவேயில்லை.
வரி உயர்வு காரணமாக படித்த நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதே நடுத்தர வர்க்கம்தான் கடந்த ஆண்டு காலி முகத் திடலில் கிராமம் அமைத்துப் போராடியது. அல்லது போராடிய இளவயதுக் காரர்களுக்கு உளவியல் ரீதியாக ஆதரவை வழங்கியது. ஆனால் இப்பொழுது அதே படித்த நடுத்தர வர்க்கம் வரி உயர்வைக் கண்டு நாட்டை விட்டு ஓடுகிறது. ஒருபுறம் படித்த நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் அமெரிக்க விமானங்கள் படை அதிகாரிகளோடு ரகசியமாக நாட்டுக்குள் நுழைகின்றன. இந்தியாவின் உளவுத்துறை பொறுப்பாளரும் பாதுகாப்பு ஆலோசகரும் ரகசியமாக வந்து விட்டுப் போகிறார்கள். வடக்கில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாக மாறிவிட்டது. ஒருபுறம் இச்சிறிய தீவை பேரரசுகள் தேடி வருகின்றன. இன்னொரு புறம் இச்சிறிய தீவின் படித்த மூளைசாலிகளோ நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மஹிந்த கனவு கண்ட ஆசியாவின் அதிசயமா?