LOADING

Type to search

இலங்கை அரசியல்

மீண்டும் சூடு பிடிக்கிறது குருந்தூர்மலை விவகாரம்

Share

நடராசா லோகதயாளன்

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய சுற்றாடலில் இராணுவத்தினர் பௌத்த விகாரை ஒன்றை கட்டுவது தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்கு கட்டுமானம் நடைபெறுவதை தமிழர் தரப்பு சுட்டிக்காட்டி நீதிமன்றம் சென்றுள்ளது.

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போலீஸ் மற்றும், தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்திற்காக, இம்மாதம் 30ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023அன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராசா உத்தரவிட்டுள்ளார்.

குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர்சார்பில் புதன்கிழமை (1) நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூகஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரது வழக்கு இலக்கம் AR/673/18 இன் ஊடாகவே நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டது.

இதன்போது குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறி தொடர்ந்தும் சட்டவிரோதமாக பௌத்தவிகாரையின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்தே நீதிபதியால் மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டது.

குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று நீதிமன்றம் கட்டளை வழங்கிய வழங்கியபோதும் அந்த கட்டளையையும் மீறி குருந்தூர்மலையில் பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

23.02.2023 அன்று குருந்தூர்மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் சென்ற சமயம் நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

நீதிமன்றக்கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் நேரில் பார்வையிட்டவர்களில் ஒருவரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 23.02.2023அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 02.03.2023நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றிலும் நீதமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி ரி.சரவணராஜா, குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் மற்றும், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகிய தரப்பினர் இம்மாதம் 30ஆம் திகதி மன்றில் தோன்றி விளக்கமளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.