LOADING

Type to search

இலங்கை அரசியல்

விநாயகர் விமர்சனம் | சிலுக்கு சிங்காரியிடம் சிக்கியவர்களின் சரித்திரம்-1

Share

(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்பகுதி 7)

கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி

தலைப்பைப் படித்துவிட்டு விநாயகர் சினிமா விமர்சனம் செய்வதற்காக (ஹெ)லி ஏறிச் சென்றதால் தான் கடந்த வாரம் காணாமல் போய்விட்டதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை

அதே போன்று விமர்சனம் எழுதும் விநாயகரையும் சிலுக்கையும் உங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு நீங்கள் ஏதாவது கணக்குப் போட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.

ஆனால், இந்த சிலுக்கு அந்தக்கால ரசிகர்களை உலுக்கு உலுக்கென்று உலுக்கி உன்மத்தம் பிடிக்கவைத்து பொன் மேனி உருகுதே என்று உருக்கியதாகவும் சிலுக்கு (சில்க்) கடித்த ஆப்பிள் ஒரு இலட்சம் ரூபா வரை ஏலம் போனதாகவும் ஆனபடியால் கதைப்பது கவனம் என்று டாடி கூத்தாடிய பிரான் காதில் வந்து சொன்னார். எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் சொல்ல வந்தது அந்த சிலுக்கு இல்லை இது வேற சிலுக்கு

சீனா என்ற சிலுக்கு சிங்காரி பட்டுப்பாதையை (Silk Route) கட்டிவைத்து மேற்குலகுக்கு சிலுக்கு (Silk) விற்ற சீனாவே நமது சிவப்புக் கம்பளக் கதாநாயகி

1992 வரை கம்யூனிச சிவப்புப் புடைவை போர்த்தி ஏராளமான குழந்தைகளைப் பராமரிக்கும் வீட்டுப்பெண்ணாக இருந்தவள் திடீரென மாறி மொடர்ன் பெண்ணாக உலகை வலம் வரத் தொடங்கினாள். இப்போது ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த பொருளாதாரமாகவும் உலகின் முதன்மைத் தொழிற்சாலையாகவும் அசுர வளர்ச்சியடைந்து அமெரிக்காவுக்கே டஃப் கொடுக்கிறாள்

ஆனானப்பட்ட அமெரிக்காவோ, ஐரோப்பாவோ ஆயிரம் ஆயிரம் பொருட்களைத் தயாரித்தாலும், சிலுக்கு சீனாவிடமிருந்து சிறிய ஸ்க்ரூ (screw) வரவில்லை என்றால் டப்பா டான்ஸாடிவிடும். குண்டூசி  தொடங்கி கணினி பாகங்கள் வரை சீனாவில் குடிசைத் தொழில். 

அனுமன் எரித்த இலங்கை பொருளாதாரத் தீயிலும் எரிந்து வெந்து கொண்டிருக்க இந்த சிலுக்கு சிங்காரி வழங்கிய வணிகக் கடன்களே முக்கிய காரணம் என விமர்சிப்பவர்களையும் இங்கே காணமுடிகிறது. ராஜபக்ச கூட்டம் சிலுக்கின் பிரதான வாடிக்கையாளர்களில் முன்னணியில் இருப்பவர்கள். அவர்கள் காசடிக்க வசதியாக மாகம்புரைத் துறைமுகத்தையும் மத்தளை விமான நிலையத்தையும், தொலைத் தொடர்புக் கோபுரத்தையும் அகலப் பாதைகளையும் அமைக்க வணிகக் கடன் கொடுத்து அந்தக் காசை தமக்கும் ராஜபக்சர்களுக்கும் தவிர வேறெங்கும் செல்லாதவாறு அந்த வெள்ளை யானைகளை அவர்களே கட்டிக்கொடுத்து இலங்கையில் இருக்கும் ஒவ்வொருவரையும் கடனாளியாக்கியதும் இதே சிலுக்கு தான்

கடனை மீளச் செலுத்த முடியாமல் வங்குரோத்து அடைந்து விட்டோம் என்று கடந்த வருட ஆரம்பத்தில் இலங்கை அறிவித்து ஐ எம் எஃப் இடம் சென்று விரிவுபடுத்தப்பட்ட நிதிவசதியின் ((Extended Fund Facility -EFF)) கீழ் 2.9 பில்லியன் டொலர்களைக் கடனாகப் பெறும் நோக்கில் ஐ எம் எஃப் இன் ஆளணிமட்ட இணக்கப்பாட்டை எட்டிய பின்னர் கடன்களை மீளச் செலுத்துவது பற்றிய நிதி உறுதிப்பாட்டை ((financial assurance)) கடன் கொடுத்தவர்களிடமிருந்து பெற்றால் மட்டுமே ஐ எம் எஃப் இடமிருந்து கடனைப்பெறமுடியும் என்ற நிலை வந்த போது இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் பாரீஸ் கிளப் (Paris Club) நாடுகளும் இலங்கைக்கு சாதகமான சமிக்ஞைகளை வழங்கிய போதிலும் கடந்த சில  தினங்களுக்கு முன்வரையிலும் இலங்கைக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு வருடங்கள் தாமதித்து ஆரம்பிக்க சலுகை வழங்குவதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது

நாங்கள் ஏன் மேற்குலகம் எதிர்பார்க்கும் நிதி உறுதிப்பாட்டை வழங்கவேண்டும் என்ற முரண்பாட்டிலேயே சீனா இருந்தது. இதனால் கடந்த வருடமே முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய ஐ எம் எஃப் நிதியுதவி ஒப்பந்தம் மாதக்கணக்கில் தாமதமாகியது. இலங்கையோ நிதி உறுதிப்பாட்டை தருவியா இல்லை தரமாட்டியா என்று கெஞ்சாத குறையாக  கேட்டுக் கொண்டே இருந்ததுஅதாவது அந்த சில்க் உச்சத்தில் இருந்தபோது பெரிய பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எல்லாம் அவரது கால்ஷீட் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏங்கி தவித்த காலகட்டத்தைப் போன்றே இந்த சிலுக்கு சீனா செய்தது.

ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் பிரதான இருபக்க கடன் வழங்குநர்களிடமிருந்து தேவையாக நிதி உறுதிப்பாட்டைப் பெற்றிருப்பதாக ஐ எம் எஃப் இன் தலைவியும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இயக்குநரும் உறுதிப்படுத்தினர்

அதன் அடிப்படையிலேயே மார்ச் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட பணிக்குழாத்தினர் மட்டத்திலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் கடனுதவி குறித்து தீர்மானிக்கப்படுமெனத் தெரிகிறது. மாதக்கணக்கில் பிகு பண்ணிக் கொண்டிருந்த சிலுக்கு திடீரென முடிவை மாற்றி இலங்கையைத் தடவிக் கொடுத்ததன் தாற்பரியமென்ன என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை

ஆனால் சிலுக்கு சீனா இலங்கையை இவ்வாறு தடவிக்கொடுத்தால் , சிலுக்கிடம் கடன் பெற்றுள்ள ஏனைய நாடுகளும்  அவ்வாறு தடவச் சொல்லிக் கேட்கலாம் என்ற அச்சமும் தடவத் தாமதமானதற்குக் காரணமாக அமையலாம். (இது தொடர்பில் விரிவாக அடுத்த வாரம் எழுதவுள்ளேன்)மறுபுறம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மிக உயர்மட்ட அதிகாரிகளை ஏற்றிய இரு பாரிய விமானங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றன.  

ஆப்கானிஸ்தானிலிருந்து  அமெரிக்காவின் துருப்பினரை அழைத்துச் சென்ற விமானங்கள் இவைதான் என ஒரு செய்தி கூறியது. அதே போல இப்போது சிறந்த வணிக நிறுவனங்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் சஞ்சிகையின் (Forbes Global 500) வரிசைப்படுத்தலில் 5வது இடத்தில் உள்ள சீனாவின் Sinopec நிறுவனத்தினதும் அதே பட்டியலில் 152வது இடத்தில் உள்ள China Merchant நிறுவனத்தினதும் பிரதிநிதிகள் இலங்கையில் தங்களது முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய இங்கு வந்துள்ளனர். பெற்றோலியம் இரசாயனம் வர்த்தகம் கைத்தொழில் பேட்டைகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகள் போன்ற துறைகளில் கலனம் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. பெற்றோலியத் துறையில் அம்பாந்தோட்டையில் பாரிய முதலீட்டை மேற்கொள்ள பச்சைக் கொடிகாட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டுச் செய்திகள் கூறுகின்றன

சிலுக்கின் (சில்கின்) தடவலில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன என்பதை நாம் அறிவோம்.

இப்போது சிலுக்கு சீனா இலங்கையைத் தடவிக் கொடுப்பதற்கும் சில தொடர்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அதேபோல உள்ளுராட்சித் தேர்தல்களைக் கட்டாயம் நடத்தவேண்டும் என அமெரிக்கத் தூதுவர் கூறினாலும் கூட அதனை வெளிப்படையாகவே நிராகரிக்கும் ரணிலின் அண்மைக்கால ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அமெரிக்காவின் கடைக்கண் பார்வையின்றி நடைபெற முடியாது. ஆகவே உலகின் இருபெரும் வல்லரசுகளின் போட்டாபோட்டியில் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காட்ட வேண்டிய நிலையில் இலங்கை இருப்பது தெரிகிறது.

இந்த நடிகர் இல்லையென்றால் அந்த நடிகர் என்பதைப் போல இலங்கை சிலுக்கு சீனாவை தடவுவதற்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு, அமெரிக்காவிற்கு கண்ணாமூச்சி காட்டுகிறது என்ற கருத்தும் உலவுகிறது. அதில் ஓரளவிற்கு உண்மையும் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.   

இது ஒருபுறமிருக்க கடந்த இருவாரங்களாக இலங்கையின் ரூபா சிறிது ஏற்றம் கண்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது மீண்டும் இறங்கு முகமாகவே உள்ளது.  ஆனால் இலங்கை ரூபா வலுப்பெறுவதாக ஏற்படுத்தப்பட்ட தோற்றம் பொருளாதாரத்தில் கேள்வி மற்றும் நிரம்பல் ஆகிய இரண்டு விடயங்கள் பற்றி அறிந்தவர்களுக்கு அது ஆச்சரியமான ஒன்றாகத் தெரியவில்லை. அது வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதென்று நன்றாக விளங்கியிருக்கும். இலங்கையின் நாணய மாற்றுச் சந்தையென்பது இலங்கையில் உள்ள வங்கிகளுக்கிடையிலான சந்தையாகவே (interbank currency matket) உள்ளது. அதாவது ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு நாளும் வாங்கி விற்கும் டொலர்களின் அளவிலேயே அதன் விலை தீர்மானிக்கப்படும். இப்போது இலங்கையில் டொலர் உள்வருகை அதிகரித்துள்ளதுடன் அதன் வெளிச் செல்கை குறைந்துள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது. இது ஒரு தற்காலிக நிலைமை மாத்திரமே. கடந்த பல மாதங்களாக இலங்கையின் இறக்குமதிகள் மிகக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை கடந்த வருடத்தில் சந்தித்துள்ளது. இது இவ்வருடத்திலும் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது

ஆகவே சுருங்கியுள்ள ஒரு பொருளாதாரத்தில் டொலருக்கான தேவை குறையும் என்பது பொதுவான ஒரு விடயம். அத்தோடு இலங்கை நிதியில் வங்குரோத்து நிலையை அறிவித்த பின்னர் கடன்களை டொலரில் மீளச்செலுத்துவது குறைந்து விட்டது. இப்போது மத்தியவங்கி அறிவித்துள்ள சில நடவடிக்கைகள் வங்கிகளில் டொலர் கையிருப்புகளை அதிகரித்துள்ளது. முன்னர் ஹவாலா உண்டியல் போன்ற முறைசாராத துறைகள் ஊடாக இலங்கைக்குள் டொலர் அனுப்பப்பட்ட நிலை டொலரின் பெறுமதி 360-370 ரூபா மட்டத்தைத் தொட்டவுடன் குறைந்து போய்விட்டது. சிலுக்கு சீனா பொருளாதார மீட்சிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது எனவே, நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பதற்கான அறிகுறியாகவே ரூபா வலுப்பெறுகிறது என்ற மாயத்தோன்ற்றம் உருவாக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, பொருளாதார மீட்சி விரைவாகவும் காத்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதாகவும், எனவே முதலீடுகள் ‘கொட்டோ கொட்டென்று கொட்டும், நாம் கோணியில் கட்டோ கட்டென்று கட்டுவோம்’ என்றும் பன்னாட்டு சமூகத்திற்கு படம் காட்டப்பட்டது.

ஆகவே இப்போது ரூபாவின் பெறுமதி அதிகரிக்கக் காரணம் பொருளாதார மீட்சியோ விரிவாக்கமோ பொருளாதாரம் நல்ல நிலைக்கு மாறத் தொடங்கியமையினால் ஏற்பட்ட ஒன்றோ அல்ல. மாறாக அவ்வாறு பொருளாதாரம் நல்ல நிலைக்குத் திரும்புகிறது. ஜனாதிபதி சாதித்துக் காட்டிவிட்டார் அவரது கொள்கைகள் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி விட்டன என்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அரசியல் தேவை இப்போது ஏற்பட்டுள்ளமையினால் வலிந்து காட்டப்பட்ட ஒருசெப்படி வித்தை’ என்பதே யதார்த்தம்.

மந்திரத்தில் மாங்காய் காய்த்தாலும் காய்க்குமே, ஆனால் சிலுக்கு சீனாவிடம் கடன் வாங்கியவர்களோ அல்லது சிலுக்கின் தடவலில் சுகம் கண்டவர்களோ பின்னாளில் சின்னாபின்னமானதே வரலாறு. உடனே நமது ‘காம்ரேடுகள்’ ஐயோ ஐயோ என்று மேலும் கீழும் குதிப்பார்கள். இப்படி குதித்த பலர் இன்று கப்சிப் ஆகிவிட்டனர். 

சிலுக்கு சீனாவிடம் சிக்கி, மூழ்கி முத்தெடுக்க விழைந்தவர்கள் எல்லாம் என்று மூச்சுத்திணறி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகின்றனர். 

பலர் சாதாரண கோழி முட்டையைக் கூட சந்தையில் விற்க முடியாமல் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

சிலுக்கு சிங்காரியிடம் சிக்கியவர்களின் சரித்திரம் ………. அடுத்த வாரம் தொடரும்.

 

Next Up