LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சனைகளை தடுத்து நிறுத்த பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்

Share

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பபு ஒன்று வுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்தின் நெருக்கடிகள் மற்றும், பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக தமிழர்களின் நலன்களைப் பாதுகாத்து உரிமைகளை பெற்றிட இரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், வனவளத்திணைக்களத்தால் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை, தொல்பொருள்திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக இனம் காண்பதற்காக 7 பேர் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அதற்கு இணையாக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டத்தை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், ஒருசிலர் இந்துசமயம் மீது மாத்திரமே தற்போது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாகவும், வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தாக்கப்பட்டபோது குரல்கொடுப்பவர்கள் திருக்கேதீஸ்வரத்தில் வளைவு உடைக்கப்பட்டபோது அமைதியாக இருந்ததாகவும் கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் சற்றுநேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பின்னர் சுமுகமானது. இதேவேளை குறித்த கலந்துரையாடலுக்கு வடக்கு, கிழக்கு சங்கநாயக்கரான விமலசார தேரரும் வருகை தந்திருந்தார்.

நீதிமன்றில் வழக்கு இருக்கும் நிலையில் குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், தமக்கே தெரியாமல் சில விடயங்கள் நடந்துவிடுவதாகவும், ஏற்கனவே இருந்த பழைய ஆலயங்கள் புதுப்பிக்கப்படாமல் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழ் அரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்துகொண்டனர்.