LOADING

Type to search

இலங்கை அரசியல்

தலைப்புச் செய்தியாகிய குரங்கு | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

இலங்கை அரசாங்கம் ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு விற்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள். குறிப்பாக ஆற்றங் கரைகளில் பயிர் செய்பவர்கள் குரங்குகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் விவசாயிகளில் ஒரு பகுதியினர் யானை வேலியை அமைத்து வருவதாகவும் ஒருமுறை அந்த வேலியில் முட்டினால் குரங்கு மீண்டும் அந்த பகுதிக்கு வரத் தயங்கும் என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த ஒரு அரசியல் செயற்பாட்டாளர் (அதேசமயம் விவசாயப்  பாரம்பரியத்தில் வந்தவர்) சொன்னார்,தங்களுடைய ஊரில் முன்பு குரங்குகளின் வாயை கட்டும் நுட்பம் தெரிந்த மாந்திரீகர்கள் இருந்ததாக. அவர்கள் மரங்களில் ஏறி எதையோ செய்வார்களாம். அதன் பின் குரங்குகள் அந்த மரங்களுக்கு வந்தாலும் காய்கறிகளில் வாய் வைப்பது இல்லை என்று அவர் சொன்னார். அது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத ஒரு நம்பிக்கை. ஆனால் காட்டோரமாக விவசாயம் செய்பவர்கள் சில சமயங்களில் குரங்குத் தொல்லை தாங்க முடியாத போது வேட்டைத் துவக்கினால் குரங்குகளைக் கொல்வதும் உண்டு. கொல்லப்பட்ட குரங்கின் உடலை அப்பகுதியில் தொங்கவிடுவார்கள்.அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு குரங்கின் வருகையை தடுக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.

விவசாயிகள் மட்டுமல்ல காட்டுக்கு அருகே இருக்கும் கிராமவாசிகளும் வீடுகளில் பயிர் பச்சை வைக்க முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக முறையிடுகிறார்கள். குறிப்பாக வன்னிப் பெருநிலத்திலும் யாழ்ப்பாணம் தென்னராட்சியிலும் இந்த நிலைமை உண்டு. வீட்டில் ஆசையாக ஒரு பயிர் பச்சையை வைத்தால் குரங்கு அதை பிடுங்கிச் சாப்பிட்டு விடுகிறது என்று சொல்லுகிறார்கள். மாங்காய்களை மட்டுமல்ல மரவள்ளித் துளிர்கள் உட்பட பயன்தரும் மரங்களின் துளிர்களை எல்லாம் குரங்குகள் சாப்பிட்டு விடுவதாகவும் வன்னியில் முறைப்பாடு உண்டு.

இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை எல்லா அதிர்ச்சிகளின் போதும் தாங்கிப் பிடித்தது விவசாயம்தான். அந்த விவசாயத்துக்கு குரங்கு ஒரு எதிரியாக மாறியிருப்பதாக விவசாயிகள் முறைப்பாடு செய்கிறார்கள். அது தொடர்பாக புள்ளிவிபரங்களும் உண்டு. புள்ளிவிபரங்களால் இக்கட்டுரையை நிரப்பக் கூடாது என்பதனால் அதைத் தவிர்க்கிறேன்.

ஆனால் இலங்கை அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாதம் குரங்கை ஒரு பீடை என்று அறிவிக்கும் அளவுக்கு குரங்குகள் விவசாயத்துக்கு  பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன. அண்மையில் அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இருந்து குரங்குகளை நீக்கும் அளவுக்கு குரங்குகள் ஆபத்தானவர்களாக மாறிவிட்டன. இவ்வாறான ஒரு பின்னணியில் அண்மையில் அரசாங்கம் குரங்குகளைக் கொல்வதற்கு அனுமதி அளித்திருந்தது.

இவ்வாறு குரங்குகள் கொல்லப்படுவதை விடவும் சீனாவுக்கு அனுப்பினால் அதனால் காசும் கிடைக்கும். அதே நேரம் குரங்குகளுக்கும் ஒரு வாழ்வு கிடைக்கும். நாட்டில் இருந்து உயிர்களை வெளியே கொண்டு போவதற்கு இருக்கும் சட்டரீதியான தடைகளை அரசாங்கம் தளர்த்த வேண்டியிருக்கும்.

குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து சீனா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும்,சீனத் தனியார் நிறுவனமொன்றே இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும்  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.கடந்த  செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குரங்குகள் தொடர்பில் சீன மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக விவசாயத்துறை அமைச்சருக்கு சீன தனியார் நிறுவனமொன்றிடமிருந்து மிருகக்காட்சிசாலைகளுக்காக குரங்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கை தொடர்பில் அவர் வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட விடயத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினரது பங்குபற்றலுடன் குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் விலங்குகளை சாதாரணமாக பரிமாற்றம் செய்ய முடியாது. எம்மைவிட மிகக்கடுமையான சட்ட ஏற்பாடுகள் சீனாவில் காணப்படுகின்றன.எனவே சில ஊடகங்களில் காண்பிக்கப்படுவதைப் போன்று,அரசாங்கம் தான்  விரும்பியபடி விலங்குகளை இறைச்சிக்காக ஏனைய நாடுகளுக்கு  வழங்க முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அது எந்த தனியார் நிறுவனம் என்பதை அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அதன் ருவிற்றர் பக்கத்தில் மேற்படி குரங்கு வியாபாரம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.. குரங்குகளை சீனாவுக்கு ஏற்றும் விடயம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செயலுக்குப் போகவில்லை.ஆனால் அது தொடர்பில் அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்து வருமளவுக்கு அதில் எதோ ஒரு உண்மை இருக்கிறது.குரங்குகள் சீனாவுக்கு விற்கப்படுமோ இல்லையோ குரங்குகள் நாட்டின் தலைப்புச் செய்திகளாகிவிட்டன.கடந்த வாரம் இலங்கைத் தீவில் அதிகம் மீம்ஸ் உருவாக்கப்பட்டது குரங்குகளுக்கு என்று கூறலாம்.

 குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகைக் கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குகளைப் பிடிப்பதற்காக விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், அவற்றுக்கு உணவளிப்பதற்கு ஏதுவாக அனைத்து பயிர் நிலங்களிலும் அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என விலங்கு நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து குரங்குகளை வாங்கச் சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அமெரிக்காவும் குரங்குகளைப் பெற  விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும், விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள குரங்கு ஒன்றை பிடிப்பதற்காக மாத்திரம் சுமார், 5 ஆயிரம் ரூபா வரையில் செலவிடுவதற்கு சீனா தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கூறியுள்ளார். சீனா குரங்குகளை மிருகக்காட்சி சாலைகளில் பாதுகாப்பதற்கு என்றே கேட்டுள்ளதாக கூறும் அமைச்சர், இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பதற்கும், அதனை சீனாவிற்குக் கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதாவது,குரங்குகளைப்  பிடித்து, தனிமைப்படுத்தி, அவற்றுக்கு நோய்த்தொற்று உண்டா என்பதனை பரிசோதித்து, கூடுகளில் அடைத்து, சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழுச்செலவையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து குரங்குகளை 50 ஆயிரம் ரூபா செலவளித்து சீனாவிற்கு கொண்டு சென்று, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துவார்களாயின் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாவிற்கே விற்க வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்ட அமைச்சர், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து குரங்கை வாங்கிச் சமைப்பதற்கு சீனர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்,இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவின் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்படலாம் என இலங்கை சுற்றாடல் நீதி அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே கூறுகிறார். இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகளை அழகுசாதனப் பொருட்களைச் சோதனை செய்வதற்கும் மருத்துவப் பரிசோதனைகளிற்கும் சீனா பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார். மிருகக்காட்சி சாலைகளிற்கான சர்வதேச வரைவிலக்கணங்களின்படி, சீனாவில் 18 மிருகக்காட்சி சாலைகளே உள்ளன. ஒரு மிருகக்காட்சி சாலைக்கு 5,000 குரங்குகள் என்று கணக்கிட்டாலும் சீனா தெரிவிப்பது நம்பக்கூடிய விடயமாக இல்லை என்றும்,இலங்கை அரசாங்கம் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பினாலும் இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சீனாவின் தனியார் நிறுவனமொன்று இலங்கைக்  குரங்குகளை தனது மிருகக்காட்சி சாலைகளில் பேணப்போவதாகக்  கூறுகிறது. அதேசமயம் சீனாவில் குரங்கு இறைச்சி சாப்பிடும் பாரம்பரியம் இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக குரங்கின் மூளையிலிருந்து தயாரிக்கப்படும் உணவு சீனாவில் அதிகம் விலை கூடியதாகவும் பெரும் செல்வந்தர்களால் மட்டும் நுகரப்படக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் குரங்குகள் சீனாவின் விலங்குகள் காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்படுமா அல்லது சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படுமா என்ற சந்தேகத்தை ஒரு பகுதியினர் கிளப்புகிறார்கள்.

இலங்கைத் தீவு இதுவரையிலும் பணிப்பெண்களையும் வீட்டு உதவியாட்களையும் நாட்டுக்கு வெளியே அனுப்பி வருமானத்தைப் பெறுகின்றது. இப்பொழுது குரங்குகளையும் அனுப்பினால் என்ன ? என்று சிந்திக்கும் ஒரு நிலைமை வந்திருக்கிறது. அரசாங்கம் உண்மையாகவே குரங்குகளை அனுப்புமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.ஆனால் .எம்.எஃப்பின் நிபந்தனைகளுக்கு கீழ்படிந்த அரசாங்கம் பொதுமக்களை வருத்தும்பொழுது கொதித்து எழும் சிங்கள மக்களைத் திசைதிருப்ப  குரங்குகள் சில சமயம் அரசாங்கத்திற்கு உதவுமா? அதாவது அரசாங்கம்  ஒரு குரங்காட்டியின் வேலையைச் செய்கின்றதா?

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மத நிகழ்வுகளைத் தவிர காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது மே நாள் ஊர்வலங்களும் உட்பட எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் காலிமுகத்திடலை நோக்கி அதாவது தலைநகரில் தூதரகங்களின் பார்வைக்குள் வருவதைத் தடுக்கும் உள்நோக்கமுடையது. அதாவது ஆர்பாட்டங்களையிட்டு அரசாங்கம் உசாராகக்  காணப்படுகிறது.எனவே மக்களுடைய கவனத்தைத் திட்டமிட்டுக் குழப்பவேண்டும்.அதற்கு குரங்குகள் உதவுமா?

நவீன ஊடகக் கலாச்சாரம் எனப்படுவது ஒரு வகையில் வாசகர்களையும் பார்வையாளர்களையும் குரங்கு நிலையில்தான் வைத்திருக்கின்றது. திட்டமிட்டு ஒரு ட்ரெண்டை செற்  பண்ணுவதன்மூலம் ஒரு சமூகத்தின் கூட்டுக் கவனக்குவிப்பை அடிக்கடி மாத்தலாம். குரங்கு கொப்புக்கு கொப்பு தாவுவதைப் போல. இந்த அடிப்படையில் சிந்தித்தால் .எம்.எஃப்பின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் போது,பொதுமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்ப குரங்கும் அரசாங்கத்துக்கு உதவுமா?