மனோ சாட்சி | “ஸ்ரீலங்கா மிலிடரி தங்கள் (முன்னாள்) தளபதியை உதைத்து இழுத்து போன கதை”
Share
மனம் திறக்கிறார் மனோ கணேசன்
கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 11
- நானும், ஜேவிபி தலைவர் சோமவன்ச, எம்பிகள் ஹந்துன்நெத்தி, ரவுப் ஹக்கீம் ஆகியோரும் பொன்சேகாவுடன் பேச தயாரானோம். அப்போதான் அச்சம்பவம் நிகழ்ந்தது.
- “என் கிட்டே வர வேண்டாம், கைவைக்க வேண்டாம்.” என்ற சரத் பொன்சேகா, கூடவே சுந்தர சிங்களத்தில் தூஷண வார்த்தைகளையும் தாராளமாக பயன்படுத்தி, கடும் கூச்சல் போட்டார்.
- அந்த அறையிலே துப்பாக்கி சமர் நடக்கப்போறதோ, இவர் திருப்பி சுடப்போறாரோ, “என்னடா இது? இதில் நாமும் அநியாயமாக பலியாக போறோமோ” என நான் மிக வேகமாக நினைத்தேன்.
- புலிகளுக்கு எதிராக போரை வென்ற தளபதி பொன்சேகாவை, அரசியல் நோக்கில் “புலி” என குற்றஞ்சாட்டப்பட்ட தமிழனான என் கண் முன், அதே ஸ்ரீலங்கா ராணுவ வீரர்கள், மிருகத்தை போன்று, அடித்து, இழுத்து போனார்கள்.
காலகட்டம்: 2010 – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பொன்சேகா, அந்த தோல்வியுடன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வாழ விரும்பவில்லை. அவருக்குள் அரசியல் புகுந்து கூடாரம் அடித்து உட்கார்ந்து விட்டது. “அத்தேர்தலில் தானே வென்றேன், மஹிந்த தில்லுமுல்லு செய்து வென்றார்” என சரத் திடமாக நம்பினார். ராஜபக்ச சகோதரர்களுக்கு தொடர்ந்து தண்ணி காட்ட நினைத்தார். |
2010 ஆம் வருட ஜனாதிபதி தேர்தலில் எமது பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா வெல்லவில்லை.
அந்த தோல்வியுடன், மீண்டும் திரும்பி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வாழ விரும்பாத அளவிற்கு அவருக்குள் அரசியல் புகுந்து விட்டது.
2010 பெப்ரவரி, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் அவரது அலுவலகத்தில், கலந்துரையாடலுக்கு எதிரணி கட்சி தலைவர்களை சரத் அழைத்தார்.
மூன்று கட்சிகள். ஜேவீபி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்.
நான் அந்த ரோயல் மாவத்தை மேல் மாடி அறைக்குள் நுழையும் போது, ஜேவிபியின் அன்றைய தலைவர் அமரசிங்க, எம்பி சுனில் ஹந்துன்நெத்தி, நண்பர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
என்னை வரவேற்ற பொன்சேகா கலந்துரையாடலை ஆரம்பித்தார்.
பின்னாளில் பொன்சேகா மீதான வழக்கில் அரசாங்கம் கூறியதை போல, அந்த கலந்துரையாடல் அரசாங்கத்தை சதி செய்து கவிழ்க்கும் தேச விரோத கலந்துரையாடல் அல்ல.
உண்மையிலேயே , தேச துரோக சதி உரையாடலில் ஈடுபட்டோம் என ராஜபக்ச அரசு, என்னையும், ஹக்கீமையும், சோமவன்சவையும் கைது செய்யும் என நினைத்தேன்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. அரசுக்கு உண்மை தெரியும். சும்மா, பொன்சேகாவை உள்ளே தள்ள குற்றம் சாட்டினார்கள்.
உண்மையில் பொன்சேகா, எதிரணியின் பிரதான கட்சியான ஐதேக தலைவர் (இன்றைய அதிபர்) ரணிலுடன் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் முரண்பட்டுக்கொண்டார்.
(தேர்தலுக்கு முன் ரணிலை பற்றி குறிப்பிடும்போது, “சார்” என்ற பொன்சேகா, இறுதி கட்டத்தில் “ஹூ” (அவன்) என்றார்..!)
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் எப்படி தாம் பொது எதிரணியாக போட்டியிடுவது என்பது பற்றியே சரத் பேச நினைத்தார்.
உரையாடலில், பொன்சேகாவின் செயலர் சேனகவும் வந்தமர்ந்தார். (இன்றைய துணை அமைச்சர் டயானா கமகேவின் கணவர்) ஒரு அரைமணி கடந்திருக்கும்.
திடீரென கதவை தட்டி அனுமதி பெறாமல் ஒரு சீருடை இராணுவ அதிகாரி அறையின் உள்ளே வந்தார். கையில் ஆயுதம் இல்லை.
அவர் பெயர் மானவடு என பிறகு அறிந்தேன். உள்ளே வந்த விதம் அசந்தர்ப்பமாக இருந்தாலும், பொன்சேகாவின் ராணுவ சகா என நான் நினைத்தேன்.
வந்தவரில் ஒரு பதட்டம். நிமிட தாமதத்தின் பின், எங்களை பார்த்து, “Please go out of the room” (தயவு செய்து அறையை விட்டு வெளியேருங்கள்!) என பதட்டமாக கூறினார்.
அதில் தெளிவில்லாததால் அவரை பார்த்து நான் கேட்டேன், “What..? Tell again” (என்ன., மீண்டும் சொல்லுங்கள்?). அவர் திரும்பவும் சொன்னதை சொன்னார்.
நான் சிங்களத்தில் பதில் கூறினேன்.”உங்களுக்கு எம்மை தெரியாதா? நாம் மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், சுனில் ஹந்துந்நெத்தி, சோமவன்ச அமரசிங்க.”
இப்படி விளக்கமாக நான் சிங்களத்தில் கூறியும், அவர் வெள்ளைக்கார மொழியை விடவில்லை.
பொன்சேகாவை நோக்கி கையை நீட்டி, “I come to arrest him” (அவரை கைது செய்ய வந்துள்ளேன்!) என்று உடைந்த பேச்சுவழக்கு ஆங்கிலத்தில் கூறினார்.
நான் சிங்களத்தை விடவில்லை.”இதோ அவர். பேசிக்கொள்ளுங்கள்” என்றேன்.
இவை அனைத்தும் நிகழ சில வினாடிகள்.
நிலைமையை ஊகித்த கோப கணல் பொன்சேகா, “என்னை அரெஸ்ட் செய்ய நீ யார்?” என்று கேட்டார்.
சரத்தை நெருங்கிய மானவடு “சார், ஒத்துழையுங்கள். மேலிடத்து உத்தரவு. உங்களை கைது செய்து கொண்டு செல்ல வேண்டும்.” என்றார்.
இப்பொழுது மானவடுவிற்கு சிங்களம் வந்தது.
பொன்சேகா ஆத்திரத்துடன் கூக்குரலிட்டார். “என்னடா மேலிடத்து உத்தரவு…?”. இந்த இடத்திலிருந்து சுந்தர சிங்கள தூஷண வார்த்தைகளும் வந்தன.
“நான் இப்போது ராணுவத்தில் இல்லை. சிவில் மனிதன். போய் பொலீசை கூட்டி வா.” என்றார்.
சற்றே திகைத்த மானவடு திரும்பி, கதவிற்கு பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு அதிகாரியை அழைத்தார்.
விரைவாக உள்ளே வந்த அந்த இராணுவர் பொன்சேகாவின் பக்கத்திலே போய், ஒரு ஆவணத்தை சிங்களத்தில் வாசித்தார்.
அது இராணுவ குற்ற பத்திரிகை. கடும் சிங்களம். பல்வேறு குற்றச்சாட்டுகள் புரிந்தன.
அந்த கலவர அதிகாரியின் கைகள் நடுங்கின. வார்த்தைகள் குளறின. நேற்று வரை தமக்கு கட்டளையிட்ட தளபதிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை வாசிக்க வேண்டி வந்ததே..!
அப்போது, அங்கே இருந்த சேனக சில்வா, (அவரும் முன்னாள் ஸ்ரீலங்கா இராணுவர்) எதிர்ப்பை வெளிப்படுத்த, ஏதோ சொல்லி வம்பை வாங்கினார்.
கோபமடைந்த மானவடு அறைக்கு வெளியே நின்ற ஆயுத படையினருக்கு ஆணையிட்டார்.
“இவன்தான் அடுத்தவன். இவனை பிடியுங்கள்.” என்று கூற, தடதடவென வந்த சிப்பாய்கள், சில்வாவின் கைகளை பின்புறமாக இறுக்கி, கழுத்திலே கையை வைத்து, அடித்தே இழுத்து சென்றனர்.
திரும்பவும் மானவடு இப்பொழுது உரத்த குரலில் “சார், வாங்க சார் வாங்க!” என்று பொன்சேகாவை அழைத்தார்.
சரத் விடாப்பிடியாக “நான் சொன்னது உனக்கு விளங்கலையா, முட்டாளே? போய் போலிசை கூட்டிக்கொண்டு வா!”.
“ஆம். போலீசாரை கூட்டி வாருங்கள்” என்று ரவூப் ஹக்கீம் இடைமறித்தார்.
ஒரு கணம் திகைத்த, மானவடு சுதாகரித்துக்கொண்டு, தன் கைபேசியை அழுத்தியபடி அறைக்கு வெளியே சென்றார்.
வெளியே அவர் யாருடனோ உரையாடுவது கேட்டது. நிலைமையை விளக்கி, மேலிட ஆணையை பெறுகிறார் என விளங்கியது.
சற்று நேரத்தில் மானவடு வேகமா வந்தார். அவரது முகத்தில் மாற்றம். “சார்” என்ற கெளரவம் இருக்கவில்லை.
பெருந்தொகை ஆயுத இராணுவ வீரர்கள், மிக பெரிதல்லாத அந்த அறைக்குள் வந்தார்கள்.
இது என்ன ரொக்கட் சயன்சா..? “அடேய், நீ அவனை இழுத்து வராவிட்டால், அவனையும், உன்னையும் இழுத்துவர வேண்டி வரும்.” என்று மானவடுவிற்கு மேலிடத்தில் இருந்து, கடும் எச்சரிக்கை கிடைத்திருக்கிறது என நான் மிக சுலபமாக ஊகித்தேன்.
கோபமடைந்த சிங்க பொன்சேகா, தடுமாறி உறும ஆரம்பித்தார். போலீசாரை தவிர வேறு எவரிடமும் தான் சரணடைய மாட்டேன் என்று திரும்பத் திரும்ப கூறினார்.
அறையில் நிலைமை மோசமடைந்தது.
ராணுவத்தை பற்றி நன்கு தெரிந்ததாலோ என்னவோ, நடப்புகளை கண்ட, ஜேவீபி தலைவர் சோமவன்சவும், எம்பி சுனிலும் தமது இருக்கையிலிருந்து எழுந்து வந்து, நானும், ரவுப்பும் அமர்ந்திருந்த அகன்ற இருக்கையில் வேகமாக இடம் பிடித்து அமர்ந்து கொண்டார்கள்.
அடுத்தது, இச்சம்பவத்தின் போது அவர்கள் இருவரும் எதுவுமே பேசவில்லை.
மானவடுவின் கட்டளைப்படி சுமார் பத்து பேர்வரை வீரர்கள், தமது ஆயுதங்களை மற்றவர்களிடம் கையளித்துவிட்டு, பொன்சேகாவை அவரது இருக்கையில் இருந்து எழுப்பி இழுத்து செல்ல முயன்றனர். இன்னும் சிலர் ஆயுதங்களுடன் சுற்றி நின்றனர். சிறிய அறை.
பொன்சேகா “என் கிட்டே வர வேண்டாம், என் மேல் கைவைக்க வேண்டாம்.” என கடும் கூச்சல் போட்டார். இடையிலே நல்ல பல சுந்தர சிங்கள வார்த்தைகளையும் உதிர்த்தார். கனல் பறந்த அவர் கண்களில் அவமானம் தெரிந்தது.
இராணுவ வீரர்கள், இழுத்து செல்ல, பொன்சேகா மீது கையை வைத்த போது, பொன்சேகா குனிந்து தனது இருக்கையின் கீழே எதையோ தேடினார்.
இருக்கையின் கீழே வைத்திருக்கும் துப்பாக்கியை தேடறாரோ, அதை எடுத்து இவர்களை சுடப்போறாரோ, அந்த அறையிலே துப்பாக்கி சண்டை நடக்கப்போறதோ, “என்னடா இது, எமக்கு வந்த சோதனை.? இதில் நாமும் பலியாக போறோமோ” என நான் மிக வேகமாக நினைத்தேன்.
பின்னாளில் இது பற்றி பேசியபோது ஹக்கீம் தானும் அப்படிதான் நினைத்ததாக கூறினார்.
சோமவன்சவும், சுனிலும் கூட அப்படித்தான் நினைத்தார்கள் என்பது அப்போதே அவர்களின் முகங்களில் தெரிந்தது. அவர்கள் அனுபவசாலி கொம்ரேட்ஸ்..!
இறுதியில் ஆறடி உயர திடகாத்திர பொன்சேகாவை இழுத்து போனார்கள். கைகளையும், கால்களையும் பலர் பிடித்துகொண்டார்கள்.
எனக்கு ஞாபகம் இருக்கும் வகையில் மானவடுவின் கை பின்புறமாக பொன்சேகாவின் கழுத்தை பிடித்துக்கொண்டிருந்தது. திமிறிய பொன்சேகாவின் கால் பட்டு அங்கிருந்த இரும்பு அலுமாரியின் கொக்கி உடைந்தது. பல ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
அறையில் இருந்து இறுதியாக சரத்தின் கழுத்தில் கையை வைத்தபடி வெளியேறிய மானவடு, திரும்பி எங்களை பார்த்து, “இங்கேயே இருங்கள், வெளியே வர வேண்டாம்.” என்றார்.
மேல் மாடி அறையில் இருந்த எமக்கு மாடிப்படி வழியாக கீழே இழுத்து செல்லப்பட்ட பொன்சேகாவின் கூக்குரல் நீண்ட நேரம் கேட்டது. இன்றுபோல் ஞாபகம் இருக்கிறது. இழுத்து செல்லப்படும் பொழுது பொன்சேகா தலையை திருப்பி எம்மை பார்த்தார்.
ஒரு வினாடி அவர் கண்களும், என் கண்களும் சந்தித்தன. அவரது கண்களில் தெரிந்தது, கோபமா, துக்கமா, அவமானமா என்பதில், “அவமானம்” என்பதற்குத்தான் எனது “ஓட்டு”.
அந்நேர அரசியல் சூழலில் கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாத கடத்தல், காணாமல் போதல், படுகொலை, ஆகியவற்றுக்கு எதிராக போராடிய முன்னணி போராளி, நான்.
இதனால், தென்னிலங்கை இனவாதிகள் என் மீது “புலி” என்ற முத்திரையை குத்தி இருந்தனர்.
அப்படியானால் இங்கு என்ன நடக்கிறது?
புலிகளின் தலைவர் பிரபாகரனை தோல்வியடையச் செய்து, கொன்று, விடுதலை புலிகளை நிர்மூலமாக்கி, நேற்று முன்தினம் வரை முழு நாட்டு சிங்கள மக்களாலும் தேசிய வீரன் என தோளில் சுமக்கப்பட்டு, உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என ராஜபக்ச சகோதரர்களாலே புகழப்பட்ட, போர் தளபதி பொன்சேகாவை, அவர் தலைமை தாங்கிய அதே ஸ்ரீலங்கா இராணுவ வீரர்கள், மிருகத்தை போல அடித்து இழுத்து சென்றனர்.
காலம் இங்கே நிகழ்த்தி காட்டிய விசித்திரம் என்னவென்றால், இவர்களாலேயே “தமிழ் புலி” என்று பொய் குற்றஞ்சாட்டப்பட்ட என் கண்களின் எதிரிலேயே, அதே புலிகளை துவம்சம் செய்த “சிங்கள” ராணுவ தளபதி பொன்சேகா இழுத்து செல்லப்படறார்.
எனக்கு தோன்றிய இந்த எண்ணம், பொன்சேகாவிற்கு தோன்றியதோ தெரியலை.
தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் கூட போர் வெறியர்கள் இதையிட்டு வெட்கப்படத்தான் வேண்டும்.
அரசியல் வெஞ்சினம், பழி வாங்கும் உணர்வு காரணமாக, “உலகிலேயே மிக சிறந்த ராணுவ தளபதி” என்று சொன்ன வாயாலேயே “அவனை அடித்து இழுத்து வா” என்று சொல்லிச் செய்தார்கள்.
இவர்கள் கூறும், “தேசபக்தி, சிங்கள பெளத்த நாடு, மொழி, இனம், மதம், மகாவம்ச சரித்திரம்…” இதெல்லாம் இவர்களுக்கு முக்கியமல்ல. தமது தனிப்பட்ட அரசியல் இலக்குகளை அடைய இவற்றை இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே உண்மை.
அன்று, எனக்கு பொன்சேகா மீது அனுதாபம்தான் ஏற்பட்டது.
நான் புலி அல்லவே..! புலிகள் கூட, இப்படி ஒரு வீரனுக்கு நிகழ்த்தப்படும் அவமானத்தை கண்டு சந்தோசப்பட்டிருக்க மாட்டார்கள்.
நிறைய சிங்கள நண்பர்களும் இப்படி நினைத்து என்னிடம் கூறியுள்ளார்கள்.
போரில் பிரபாகரன் வெற்றி பெற்றிருந்தால்கூட இப்படி செய்திருக்க மாட்டார் என நான் நம்புகிறேன்..! இப்படி நான் சொல்வதை பார்த்து சில புலி எதிர்பாளர்கள் என்னை திட்டலாம். நேர்பட பேசி, நான் வாங்காத திட்டா..? அட போங்கடா..!
மானவடு குழுவினர் பொன்சேகாவை கைது செய்ய எமது அறைக்கு வருமுன் கீழ் தளத்தில் இருந்த எனதும், ஹக்கீமினதும் காவல் அதிகாரிகளை தற்காலிகமாக கைது செய்து, அவர்களின் ஆயுதங்கள், கைபேசிகளை கைப்பற்றி, ராணுவ பாதுகாப்பில் விட்டுதான், மேலே வந்தனர் என நான் பின்னர் அறிந்தேன்.
அன்று, அவ்விடத்தில் துப்பாக்கி, ஆயுதங்கள் பெருமளவில் இருந்தபோதும், ஒரு வெடிப்பும் நிகழவில்லை.
(இந்த மானவடு ஓய்வின் பின் தன் வீட்டில் தோட்ட வேலை செய்யும்போது, தலையில் பூச்சாடியோ, ஏதோ விழுந்து, அகாலமாக இறந்து போனார் என பின்னாளில் அறிந்தேன்..!)