IPL 2023 | 556 நாட்களுக்கு பிறகு கேப்டனான விராட் கோலி
Share
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
பெங்களூர் அணியில் முதலில் ஃபேப் டு பிளேசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் களமிறங்கிய இருவரும் அரைசதம் கடந்தனர்.
விராட் கோலி 47 பந்துகளில் 1 சிக்சர் 5 பவுண்டரிகள் என 57 ரன்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். பிறகு வந்த பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து ஆட்டமிழக்க, ரன்ரேட் சற்று சரிவை கண்டது.
மேக்ஸ்வெல் டக் அவுட் ஆக, ஃபேப் டு பிளேசிஸ் மறுபக்கம் அதிரடி காட்டினார். டு பிளேசிஸ் 56 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகள் என அடித்து 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில், ஆர்.சி.பி 174 ரன்களை எடுத்து, 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே சரிவை கண்டது. பவர்பிளேவிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து, 43 ரன்களுக்கு 4 விக்கெட் என பரிதாபமான நிலையில் இருந்தது.
இம்பேக்ட் பிளேயராக வந்த பிரப் சிம்ரன் சிங், அதிரடியாக 46 ரன்களை எடுத்தார். ஷார்ட் (8), லிவிங்ஸ்டன் (2), சாம் கரன் (10) என வரிசையாக பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை விட, 11 ஓவரில் 97 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் அணி.
பிறகு வந்த ஜிதேஷ் சர்மா பஞ்சாப்பிற்கு வெற்றி ஆசையை கொடுக்க, மறுபக்கம் விக்கெட்டுகள் அதே வேகத்தில் சரிந்தன. முடிந்தவரை போராடிய ஜிதேஷ் சர்மா, 27 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி என 41 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் 18.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணியில், அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியால், பெங்களூர் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.