யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பீட மாணவர்களுக்கான புலமைப் பரிசுத்திட்டம் ஒன்று தொடர்பாக துணைவேந்தரையும் கலைப் பீடாதிபதியையும் சந்தித்த கனடா உதயன் பிரதம ஆசிரியர்
Share
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பீட த்தின் மாணவர்களுக்கான புலமைப் பரிசுத்திட்டம் ஒன்று தொடர்பாக பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ஶ்ரீசற்குணராஜா அவர்களையும் கலைப் பீடாதிபதி கலாநிதி ரகுராம் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
கடந்த சனிக்கிழமையன்று மதியத்திற்குப் பின்னர் பல்கலைக் கழகத்தின் ‘கவுன்சில்’ கூட்டத்தின் பின்னர் கனடா உதயன் குழுவினரைச் சந்தித்த துணைவேந்தரும் கலைப் பீடாதிபதியும் நலன் விசாரித்த பின்னர் கனடியத் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றியும் கலை, கல்வி மற்றும் கலாச்சார செயற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே உரையாடித் தீர்மானித்த புலமைப் பரிசுத் திட்டம் தொடர்பான பத்திரங்களை உதயன் பிரதம ஆசிரியர் இருவரிடமும் கையளித்தார்.
இத்திட்டத்தின் பயனாளிகளை இன்னும் சில வாரங்களில் தெரிவு செய்து அவர்கள் பயன்பெறும் வகையில் செயற்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.
கனடா உதயன் நிறுவனமும் ரொறன்ரோ மனித குரல் அமைப்பும் இணைந்து இந்தத்திட்டத்திற்கான ஒரு மில்லியன் இலங்கை ரூபாய்களை வழங்குகின்றன. கனடா வாழ் சமூக நலன் கொண்ட அன்பர்களான வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சாந்தா பஞ்சலிங்கம், சங்கர் நல்லதம்பி, நிமால் விநாயகமூர்த்தி, கணேசன் சகுமார், திருமதி சசிகலா நரேன் உட்பட மேலும் சிலர் இந்த புலமைப் பரிசுத்திட்டத்திற்கு பங்களித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது எமது ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினரும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞாத்துறைப் பட்டதாரியுமான லோகன் கணபதி அவர்கள் வழங்கிய மாகாண அரசின் வாழ்த்துப் பத்திரங்களையும் உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ஶ்ரீசற்குணராஜா அவர்களுக்கும் கலைப் பீடாதிபதி கலாநிதி ரகுராம் அவர்களுக்கும் வழங்கினார். அதற்கான துணைவேந்தர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.