‘சுயாதீன வேலை சூழலினை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் மன்னாரில் சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த பெண்கள் கௌரவிப்பு.
Share
(மன்னார் நிருபர்)
(01-06-2023)
‘சுயாதீன வேலை சூழலினை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் கடந்த மூன்று மாத காலம் இடம் பெற்ற தொழில் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் இன்று(1) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
உரிமை சார்ந்த வேலை திட்டங்களை மேற்கொள்ளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் நிதி ஒதுக்கீட்டில் பெண்களுக்கான தொழில் பயிற்சி செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
குறித்த செயற்திட்டத்தில் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்ட பெண்களுக்கு கெளரவிப்பு மற்றும் அவர்களுக்கான சான்றிதல்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கான சுய தொழில் உபகரணங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பனம் பொருள் உற்பத்தி பொருட்கள் சந்தைப் படுத்தப்பட்டு அதனூடாக கிடைக்கப்பெற்ற பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு,உரிய பயனாளிகளுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக சட்டத்தரணி தர்மராஜ் வினோதன், மன்னார் நகர சபை முன்னாள் தவிசாளர் ஜான்சன், பனை வள அபிவிருத்தி சபையின் முகாமையாளர் ஜஸ்ரின் பெணில்டஸ், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவில் இம்மானுவேல் உதயசந்திரா,உட்பட பலரும் கலந்து கொண்டு பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.