பிரசித்தி பெற்ற மன்னார்மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் – மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழாவின் நிறைவு யூபிலி பெருவிழா
Share
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம்
மன்னார் நிருபர்
(12-06-2023)
மருதமடு அன்னையின் ஆடி திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் மறை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு முன் ஏற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை(12) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
இவ்விடயம் குறித்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் மேலும் தெரிவிக்கையில்,,,
எதிர் வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள மடு அன்னையின் ஆடி திருவிழாவிற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக சுகாதாரம்,மருத்துவம்,குடிநீர் ,போக்குவரத்து,பாதுகாப்பு,உணவு உள்ளிட்ட முக்கிய விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இம்முறை பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளமையினால் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
கடந்த வருடம் எரிபொருள் தட்டுப்பாடு அதனை தொடர்ந்து எரிபொருள் விலையேற்றம் காணப்பட்டது.இதனால் மடுவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
ஆனால் தற்போது எரிபொருள் போதிய அளவு உள்ளமையினாலும்,விலை குறைக்கப்பட்டு உள்ளமையினாலும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆடி திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆடி மாத திருவிழா ஆரம்பமாகும்.
ஆடி மாதம் 2ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். அதனைத்தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப ஆசிருடன் திருவிழா நிறைவடையும்.
மேலும் இவ்வருடம் மேலும் ஒரு நிறைவைக் கொண்டாட ஆரம்பித்து வைக்க இருக்கின்றோம்.1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது. குறித்த முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு நிறைவு யூபிலி பெருவிழாவாக எதிர் வரும் வருடம்(2024) ஆண்டு ஜூலை மாதம் கொண்டாட இருக்கின்றோம்.
அதனை முன்னிட்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி திருவிழாவின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் யூபிலி நூற்றாண்டு விழாவினை பிரகடனம் செய்து வைப்பார்.
அதனைத் தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச் சொரூபத்தின் பின் விசேட விதமாக யூபிலி ஆண்டை பிரகடண படுத்துவதோடு,அதனை வெளிப்படுத்தும் முகமாக வருடம் முழுவதும் பறக்க விடப்படுகின்ற யூபிலி கொடி மருதமடு ஆலய முன் மண்டபத்தில் ஏற்றி வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு ஜூலை வரை மறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.