LOADING

Type to search

இலங்கை அரசியல்

அராலி முருகமூர்த்தியில் திருட்டு – செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல்!

Share

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் நேற்றிரவு தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமெரா, ஒரு ஒலிபெருக்கி சாதனம் (amplifier) மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்தன.

திருட்டில் ஈடுபட்டவர்கள், ஒரு தொகை சில்லறை காசு மற்றும் ஒலிபெருக்கி சாதனத்தின் பாகங்களை வீசிவிட்டு சென்றனர்.

இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர் ஒருவர் குறித்த பாடசாலைக்கு சென்று, தடயங்களை புகைப்படம் எடுக்க முயன்றார்.

இதன்போது அங்கு கடமையில் இருந்த உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி அமைதியாக இருக்க, சிவில் உடையில் தரித்திருந்த செல்வக்குமார் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஊடகவியலாளரை புகைப்படம் எடுக்க வேண்டாம் என தடுத்து வெளியேற்றினர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் சம்பவம் நிகழ்ந்த அறைக்கு வெளியே வந்து நின்ற வேளை, உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸாரை அழைத்து வந்த செல்வக்குமார் என்ற பொலிஸார் ஊடகவியலாளரை பாடசாலை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தினார்.

இதன்போது அங்கிருந்த இன்னொரு பொலிஸார், செய்தி சேகரிப்பதற்கான பாஸினை காண்பிக்குமாறு கூறினார். அதற்கு குறித்த ஊடகவியலாளர், அப்படி எந்த ஒரு பாஸும் நடைமுறையில் இல்லை. ஊடக அடையாள அட்டை இருக்கிறது. அதனை வேண்டுமானால் காட்டலாம். என கூறியவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதிப்பத்திரத்தை கேட்டு மிரட்டினார்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் உடனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களை தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து விரைந்து செயற்பட்ட திரு த.கனகராஜ் அவர்கள், வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சம்பவம் குறித்து தொலைபேசி ஊடாக தெரியப்படுத்தினார். இந்நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸாருக்கு அழைப்பு மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள், ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும் அவரது பணிகளை செய்ய அனுமதிக்குமாறு கூறினார்.

குறித்த ஊடகவியலாளர், செல்வக்குமார் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் அது குறித்து விசாரணைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.