ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள்
Share
சிவா பரமேஸ்வரன்
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியாவும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சீனாவும் வலியுறுத்தின
மனித உரிமைகள் தொடர்பான தனது பரிந்துரைகளை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை கோரும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதுள்ள நிலையில், பல நாடுகளும்
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்து எழுத்து மூலமாக தனது அறிவிப்பை முன்வைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப், மனித உரிமை மீறல்கள், குறிப்பாக 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கைக்கு பதிலளித்த ஜெனீவாவில் உள்ள ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணதிலக, “எழுத்துமூல புதுப்பிப்பு, அதன் தீர்மானம் மற்றும் பரிந்துரைகளை நிராகரிக்கிறோம்” என்றார். மேலும், 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களை இலங்கை தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும், அது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போரின் போது மற்றும் அதற்குப் பின்னரும் காணாமல் போனவர்கள உட்பட மனித உரிமை மீறல்களுக்கு ‘பொறுப்புப் கூறல் திட்டத்தை’ அமைக்குமாறு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
ஆணையாளரின் அறிக்கை, கொடூரமான உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கை முழுவதும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக புதிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான அரசாங்கத்தின் முன்மொழிவை அங்கீகரிக்கும் அதேவேளையில், பிரதி உயர்ஸ்தானிகர் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
“யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாக, உண்மை, நீதி மற்றும் பரிகாரத்திற்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் வேதனையிலும் துயரத்திலும் தொடர்ந்து தவிக்கின்றனர்” என அல் நஷிப் கூறினார். “உண்மையைத் தேடுவது மாத்திரம் போதுமானது அல்லவெனவும் மாறாக ஒரு சுயாதீனமான தற்காலிக விசேட நீதிமன்றம் உட்பட பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.”
ஐ நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மான்ங்கள் தலையிடும் வகையிலும் துருவப்படுத்து வகையிலும் அமைந்துள்ளன. மேலும் அது ஆக்கபூர்வமற்ற மற்றும் வளங்களை வீணடிக்கும் ஒரு விடயமும் ஆகும் என்று கூறி, “இலங்கை அத்துடன் ஒத்துழைக்காது” என்றார்.
அதுமாத்திரமன்றி அந்த தீர்மானம் “நம்பகத்தன்மையற்ற ஒரு முடிவு” என்றும் கூறினார் இலங்கையின் தூதர்.
ஆணையாளரின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் உறுப்புநாடுகள் பிள்வுபட்டிருந்தன. தீர்மானத்தை கொண்டு வந்த முக்கிய குழுவுடன் பெரும்பாலான மேற்குலக நாடுகள் பேரவையின் எழுத்துமூல புதுப்பிப்பை வரவேற்றதோடு அதனை செயற்படுத்துவதற்கு ஆதரவளித்தன.
இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் ஆபிரிக்க நாடான புருண்டி, ஈரான், கசகஸ்தான் மற்றும் கம்போடியா போன்றவற்றுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தன.
இந்தியாவின் பதில் சமாளிக்கும் வகையில் இருந்தபோதிலும், “வாக்குறுதிகள் மீதான முன்னேற்றம் போதுமானதாக இல்லை, மேலும் அதன் உறுதிமொழிகளை விரைவாக செயல்படுத்துவதில் அர்த்தமுள்ள வகையில் செயல்படுமாறு இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டார்.
தமிழர்களின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.
இலங்கை மீதான 51/1 தீர்மானம் நேர்மை மற்றும் புறநிலை கொள்கையை பின்பற்றவில்லை எனக் கூறிய சீனா, “தேசிய இறையாண்மை, சுதந்திரம், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் இலங்கையை உறுதியாக ஆதரிக்கிறோம்” எனக் கூறியது.
உறுப்பு நாடுகள் தவிர, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தமிழ் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்களும் 90 வினாடிகளுக்குள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் சட்டத்தரணி வி.எஸ்.எஸ். தனஞ்சயன் தனது கருத்துரையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதை எடுத்துரைத்தார்.
”2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழர்கள் இராணுவத்தை வெளியேற்றுமாறு அழைப்பு விடுத்தனர் மேலும் இராணுவத்தின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும்” இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழர்களின் பூர்வீக தாயகத்தில் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள பௌத்தமயமாக்கல் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறி குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறித்தும் பேரவையின் கவனத்திற்கு தனஞ்சயன் கொண்டுவந்தார்.
மற்றொரு மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமன ஸ்வஸ்திகா அருலிங்கம், 2019 ஏப்ரலில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிப்பதில் அரசாங்கத்தின் இயலாமை குறித்து கருத்து தெரிவித்தார்.
” உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை நம்பத்தகுந்த முறையில் விசாரிக்கத் தவறியது, அந்த தாக்குதலில் அரசின் பாதுகாப்பு இயந்திரத்தின் உடந்தை பற்றிய அண்மைய வெளிப்பாடுகள் போன்றவை, உள்நாட்டுப் பொறிமுறைகளில் பொதுமக்களிற்கு சிறிதளவே நம்பிக்கை உள்ளது,” என அவர் தனது சமர்ப்பிப்பில் கூறினார்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயல்படு பேர்ள் (PEARL) என்ற மனித உரிமை அமைப்பு, இன்று இலங்கை போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றால் அறியப்படுகிறது என்று அதன் பிரதிநிதி தெரிவித்தார்.
“அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படாதவரை கடந்தகால நிகழ்வுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கருத்துக்களையும் வடக்கு கிழக்கில் உள்ள யதார்த்தத்தையும் பிரதிபலிக்கவில்லை என தமிழர்கள் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், இலங்கையின் கள நிலவரத்தை இது பிரதிபலிக்கவில்லை என இலங்கை அரசாங்கமும் இதனை உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.