யாழ்ப்பாணத்தில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ள போதைப் பொருட்கள் விற்பனை.
Share
நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனையாகும் ஹெரோயின்
துன்னாலையில் ஆயிரத்து 200 ரூபா விலையில் கிடைப்பதனால் அதனைப்பெற யாழ்ப்பாணத்தில் இருந்து பலர் சென்று வரும்போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக அரச மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குற்றவியல் தொடர்பான கலந்துரையாடல் இந்த வாரம் மாவட்டச் செயலகத்தில் அமைச்சரும் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றபோதே போதனா வைத்தியசாலை சார்பில் பங்குகொண்ட வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.
”யாழப்பாண நகர்ப் பகுதியில் 2,000 ரூபா குடத்தனையில் 1,200 ரூபாவிற்கு விற்பனையாவதனால் அதனைப்பெற இங்கிருந்து பலர் சென்று வருகின்றனர். இவ்வாறு சென்று வந்த சமயம் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்தமை மரணத்தின் பினபான விசாரணையில் கண்டுகொள்ளப்பட்டது”.
இதேநேரம் அங்கே யார் இதனை விற்பனை செய்வது எனவும் தெரியும். இது விற்பனையாகும் இடத்தை சொன்னால் அந்த இடத்திற்குள் போஏலாது என பொலிசார் கூறுகின்றனர் என்றும் அந்த அரச வைத்தியர் மேலும் விசனம் வெளியிட்டார்.
இதனபோது பதிலளித்த வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்,
”இலங்கை முழுவதும் இன்று போதைப் பொருள் பாவனை ஏற்பட்டுள்ளது. பொலிசாரும் அதனை தடுக்க முயல்கின்றனர். இதேவேளை உண்மையில் இலங்கையிலேயே போதைப் பொருள் பாவனை குறைந்த மாவட்டம் யாழ்ப்பாணம் மாவட்டம். யாழ்ப்பாணத்தில் அதிகமாக போதைப் பொருள் பிடிபட்டாலும் யாழ்ப்பாணம் ஊடாக தெற்கிற்கு எடுத்துச் செல்ல முறபடும்போதே பிடிபடுகின்றன” எனத் தெரிவித்தார்.
அண்மை காலத்தில் இந்திய இலங்கை கடற்பரப்பு சர்வதேச மட்டத்தில் முக்கியமான போதைப் பொருட்கள் கடத்தப்படும் பாதையாக மாறியுள்ளது என்று போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பன்னாட்டு அமைப்பு கூறியுள்ளது.
வளர்ந்து வரும் மற்றும் வறிய நாடுகளை இலக்கு வைத்தே சர்வதேச போதைப் பொருட்கள் விற்பனை கும்பல்கள் ஈடுபடுகின்றன, அதற்கு முன்னர் ஆக்பானிஸ்தான் – பாகிஸ்தான் வலையப் பகுதிகள் பன்னாட்டு போதைப் பொருட்கள் வர்த்தகத்தைன் மையமாக திகழ்ந்தன. எனினும், அந்த பகுதியில் அதியுயர் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம், இந்திய – இலங்கை கடற்பரப்பு அதிலும் குறிப்பாக தெற்கு இந்தியாவின் கேரள மாநிலத்தின் கடற்பரப்பை அண்டிய பகுதி வழியாக இந்த கடத்தல்கள் நடைபெறுகின்றன என்று இண்டர்ஃபோல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் சூழல்,இந்த கடத்தலுக்கு ஏதுவாக உள்ளதால், சர்வதேச வலையமைப்பினர் பாக் நீரணை ஊடாக இந்த கடத்தலை முன்னெடுத்து வருகின்றனர் என்றும், இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள கடத்தல் கும்பல்கள் தீவிரமாக செயல்படுகின்றன என்றும் கடற்சார் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலும், இலங்கையின் வடபுலத்திலும் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது தொடர்பில், கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கவலை வெளியிட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.