LOADING

Type to search

இலங்கை அரசியல்

கற்பிட்டிக்கு ஒரு சட்டம், யாழ்ப்பாணத்திற்கு ஒரு சட்டமா – நா.வர்ணகுலசிங்கம் காட்டம்

Share

பு.கஜிந்தன்

கற்பிட்டிக்கு ஒரு சட்டம், யாழ்ப்பாணத்திற்கு ஒரு சட்டமா என முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவரும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இ்வ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரால் கூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தக் கூட்டத்திற்கு கொழும்பிலிருந்து நீரியல் வளத்துறை அதிகாரிகள் வருகை தந்திருக்கிறார்கள்.

இங்கே உள்ள சங்கங்களுக்கு அறிவித்ததாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பல முக்கியமான கடற்றொழில் அமைப்புகளுக்கு அறிவிக்கவில்லை. ஒரு கட்சி சார்ந்த ஆட்களுக்கு அறிவிக்கப்பட்டே அந்தக் கூட்டமானது இடம் பெற்றிருக்கிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் உட்பட கட்சி சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன் கட்சி சேராத, கட்சிக்கு ஆதரவான இரண்டு பேர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
மொத்தம் 14 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், அந்த கூட்டத்தில் கடற்தொழில் புதிய திருத்தச் சட்டம் என்ற போர்வையில் ஒரு புத்தகம் கொண்டு வந்து அங்குள்ளவர்களுக்கு கொடுத்து விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதில் அதிகாரிகள் ஒருவர் உரையாற்றும்போது, இதுதான் இப்ப கொண்டுவரவிருக்கிற சட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் இருந்த பச்சோந்தியொருவர் இந்த சட்டம் சரி என்று சொல்லியபோது, நெடுந்தீவில் இருந்து வந்த சமாச பிரதிநிதியும் இன்றும் ஒருவரும் குறித்த சட்டம் தொடர்பில் எதிர்த்திருக்கிறார்கள்.

ஏன் இந்த சட்ட புத்தகத்தில் நடுப்பகுதியில் வெள்ளை பேப்பராக இருக்கிறது, ஏன் இடை வெளி விடப்பட்டிருக்கிறது, என்ன காரணம் என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதனைக் கொண்டு வந்து காட்டி மக்கள் எல்லோரும் மீனவர்கள் சமூகம் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவித்து அந்த நடுப்பகுதியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் உங்களுக்கு வேண்டிய விடயங்களை பதிப்பு செய்து அதனை வெளியிடுவதற்கு தானே இந்த முயற்சியை செய்து இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியபோது அந்த அந்த கூட்டம் நடந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு கூட்டத்திலிருந்து அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார் இது அச்சு பதிப்பில் ஏற்பட்ட தவறு என்று. இது இவ்வாறு கூறக்கூடிய கதையா? தனியார் (US) ஹோட்டலில் கூட்டம் நடத்துவதற்கு இவ்வளவு காசு, போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவு என செலவு செய்து கொழும்பிலிருந்து இங்கு வந்து இவ்வாறு கூறுவது சரியா?

அச்சு பதிப்பு சரியாக பதியவில்லை என்று கூறி ஒரு வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். அதில் மீண்டும் ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது ஒன்றரை மாதத்திற்கு பின்னால் திருப்பி பதிப்பு செய்யப்பட்டு கூட்டம் ஒன்று நடாத்தி முடிவு எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதனை, கட்சி உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உறுப்பினர் ஒருவர்
காரணங்களை தெரிவித்திருக்கின்றார்.

இந்த சட்டம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்றும் எதுவும் புரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதனை வாசித்தால் அதில் எனக்கு எதுவும் புரிவதில்லை. நான் என்ன செய்வது என்று சம்மேளனத்தின் பிரதிநிதி மேலும் தெரிவித்திருக்கின்றார்.

இந்த சட்டமானது எங்களுடைய கடற்தொழிலையும் கடல் வளங்களையும் விற்பதற்கானது. தாங்கள் என்ன செய்வது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நான் இன்னும் ஒரு சம்மேளன பிரதிநிதியிடம் கேட்டேன். நீங்கள் இதனை எதிர்த்திருக்கலாம் தானே என்று. எதிர்த்திருந்தால் என்னயும் அன்னராசாவையும், வர்ணகுலசிங்கத்தையும் போன்று அமைப்பிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்பதனால் தான் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் நீரியல் வளத்துறை அதிகாரிகளை பலர் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். ஏன் இது தொடர்பில் நீங்கள் எங்களுக்கு அறிவித்திருக்கவில்லை, நாங்களும் கலந்து கொண்டிருப்போம் என்று. அதற்கு நீரியியல் வளத்துறை அதிகாரிகள், 16 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள் தானே. ஏன் எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பல கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்கள் அல்லது ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இது விடயமாக தெரிவிக்கப்படவில்லை. தங்களுக்கும் தங்கள் சார்ந்தவர்களுக்கு கட்சி சார்ந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டு தங்களுக்கு சார்ந்த சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுருக்கிறார்கள்.

இவ்வாறு ஒரு கேவலமான விடயத்தை இந்த நீரியல் வளத்துறை மேற்கொண்டு வருகிறது.

கொழும்பிலிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பில் ஒவ்வொரு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களும் கவனத்தில் எடுங்கள். எங்களுடைய கடல் வளங்கள் காணாமல் போகப் போகிறது. அழிந்து போகப் போகிறது. இது கடல் வளங்களை வெளிநாட்டுக்காரனுக்கு விற்பதற்கான சட்டங்களை கொண்டுவரப்படவிருக்கிறது. ஒன்றரை மாதத்தின் பின்னர் இவ்வாறான ஒரு கூட்டம் இடம்பெற இருக்கிறது. உங்களை அழைக்கிறார்களோ அழைக்க வில்லையோ அந்த கலந்துரையாடலுக்கு செல்லுங்கள்.

மீண்டும் தயவுசெய்து ஒவ்வொரு சங்கத் தலைவரும் விசேட கவனம் எடுங்கள். நாங்களும் அந்த புத்தகத்தை வாங்குவதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம். அது எங்களுக்கு கிடைக்கும். அந்த புத்தகம் கிடைத்தவுடன் நாங்கள் ஊடகத்தில் அதை காண்பிப்போம்.
இந்தச் சட்டம் இலங்கை முழுவதற்குமானது.

ஏன் என்று சொன்னால் வட மாகாணத்தில் மீனவர்கள் ஏற்று கொள்ளப்பட்ட சட்டம் என்று காண்பித்து சட்டமாக கொண்டுவரப்படவிருக்கிறது.

இங்குதான் மீனவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது இங்கே சுருக்கு வலை, டைனமெற், கணவாய்க்குழை, இந்தியன் ரோளர் உட்பட பல்வேறு சட்டவிரோதமான தொழில்கள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பலவிதமான சட்ட விரோதமான தொழில்களும் வடக்கில் தான் இருக்கிறது. வடக்கு மக்கள் ஏற்றுக் கொண்டதாக கூறி தென்னிலங்கை மீனவர்களையும் சம்மதிக்கவைத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தான் எடுக்கப்படவிருக்கிறது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாராளுமன்றம்வரை கொண்டு செல்லப் போகிறார்கள்.

அடுத்த மாதமும் மீண்டும் இடம்பெற இருக்கிற அந்த கூட்டத்தில் கட்சியும், கட்சி சார்ந்தவர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை தான் அழைக்கப் போகிறார்கள். தயவுசெய்து நான் மீண்டும் சொல்கிறேன் கூட்டம் நடைபெறப் போகிறது என்றால் நீங்கள் அனைவரும் அந்த கூட்டத்திற்கு செல்லுங்கள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தலையில் கையை வைத்துக் கொண்டு வீட்டில் நாங்கள் தூங்கவேண்டிய நிலைதான் உண்மையில் ஏற்படும். யோசியுங்கள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் பலரது வலைகள் பூநகரியில் புடுங்கப்பட்டு ஒன்றரை, இரண்டு மாதங்கள் கடந்தும் அது இன்னும் கொடுக்கப்படவில்லை.

கட்சி ஒன்றின் சொல்லைக் கேட்டுத்தான் அந்த வலைகள் பிடுங்கப்பட்டன. ஆனால் இன்று வரை கொடுக்கப்படவில்லை. இன்று அது வழக்கிற்கு போயிருக்கிறது.

முன்னறிவித்தல் கொடுத்து அதை செய்திருக்க வேண்டும். உள்ளூர் இழுவை மடி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இப்போது கற்பிட்டியில் உள்ளூர் இழுவை மடி படகுகள் தொழிலில் ஈடுபடுவதில்லை. ஆனால் வடக்கு மாகாணத்தில, யாழ்ப்பாணத்தில் இழுவை மடி படகுகள் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இன்று கற்பிட்டிக்கு ஒரு சட்டம் யாழ்ப்பாணத்திற்கும் வடக்கு மாகாணத்துக்கும் இன்னொரு சட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.