ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர்.
Share
எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.
அவர்களின் கண்ணீரைப் போக்கி சமூகத்தில் அவர்களும் வாழ்வை இயன்ற வரை பிறரைப் போல் தாமும் வாழந்திட வேண்டும் எனும் நல் நோக்குடனும் சீரிய சிந்தனையுடனும் திரு.செந்தில் குமரன் அவர்கள் கருணையுள்ளம் கொண்டு தமது சுய வாழ்வின் விருப்புகளுக்கு அப்பால் பல ஆண்டுகளா கடினமாக உழைத்து அந்த நலிவுற்றோர் நல் வாழ்வுக்காக இடையறாது தொடர் பணி செய்து வருவது யாவரும் அறிந்த ஒன்றே.
நீண்ட காலமாக தமக்கே உரித்தான “மின்னல் இசை” எனும் அவரது இசைப்பயணங்களின் மூலம் இயல்பாகவே அமைந்த அவரது குரல் வளத்தினை மூலமாகக் கொண்டு இசை பிரியர்களை மகிழ்வித்தும், பின் நிவாரணம் என்னும் இசை நிகழ்வுகளினூடாக ஈழத்தில் இடர் உற்றிருக்கும் அந்த மக்களுக்காக மேடைகள் தோறும் உள்ளங்களை உருக்கும் சிந்தனைப் பாடல்களைப் பாடி சிறுகச் சிறுகச் சேர்க்கும் பொருள் வளங்களைத் திரட்டி அவை பயனாள மக்களைச் சென்றடைவதற்கான பிற செலவுகள் அனைத்தையும் தமது சொந்த பணத்தின் மூலம் குடும்ப சகிதம் தாமே ஈடு செய்து பல விதமான வாழ்வாதார மேம்பாடுகளை இங்கிருந்தும் தாய் நிலத்து மக்கள் முன்னேற சமுகமளித்தும் தொடர் தொண்டாற்றி அவர்களை வருவதுவும் தமிழ் சமூகம் அறிந்த ஒன்றே.
கால ஓட்டத்தில் பெரும் பொருட் செலவினை ஏற்படுத்த வல்ல குணப்படுத்லுக்கு சவாலாக இருக்கக்கூடிய தீவிர நோய்களுக்கு நோகளுக்கு ஆளாகி நின்று தவிக்கும் நோயாள மக்கள் பெருகி வரும் நிலையினை அவதானித்த திரு.செந்தில் குமரன் அவர்கள் கடந்த ஓர் ஆறு ஏழு ஆண்டுகளாக நலிவுற்ற அந்த மக்கள் வாழும் ஊர்ப் பகுதிகள் பலவற்றிலும் இம்மக்கள் முகங் கொடுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் அவற்றிற்கு ஏற்ற வகையில் அங்குள்ள பல மருத்துவ மனைகளில் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவுகளும், அவற்றிற்கான உபகரணங்கள், இயந்திரங்கள், தேவைக்கேற்ப இல்லாதிருப்பதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டும்.
அக்குறைகளை சரி செய்து மக்கள் உயிர்களை முடிந்த வரை காத்திடும் நோக்குடனும் “நிவாரணம்” எனும் ஓர் உயிர்காப்பு அறக்கட்டளை ஊடாக உயிர் காக்கும் இதய சத்திர சிகிச்சைகள், குருதி சுத்திகரிப்பு நிலையங்கள், நோயுற்றோருக்கான வாழ்வாதாரங்கள் என பல மருத்துவம் சார்ந்த உதவிகளை நல்லிதயம் கொண்ட கொடையாளராகிய அன்பிற்குரிய தமிழ் மக்களின் பேருதவியுடன் அரும்பாடு பட்டு நிவர்த்தி செய்து அவற்றில் வெற்றி கண்டு வருவதுவும் கண்கூடே. கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் கிளிநொச்சி மாவட்டத்தில் இவரது அமைப்பின் நடமாடும் மருத்துவ திட்டம் ஊடாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று சேவைகள் வழங்குவதன் மூலம் அவர்களின் போக்குவரத்து நிதி நெருக்கடிகளை தவிர்த்து நோயாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பெரும் பயனை வழங்கி வருகிறது. செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு சமீபத்தில் மார்க்கம் முல்லை என்று பெயர் சூட்டி மாஞ்சோலை மருத்துவமனையில் ஒரு அவசர இதய சிகிச்சை பிரிவு ஒன்றிற்கான நிதியினை வழங்கி வைத்தனர். அந்த நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வின் சிறப்பு அதீதியாக இலங்கைக்கான கனடிய தூதுவரான திரு எரிக் வால்ஸ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசியது நிவாரண அமைப்பின் மனித நேய செயற்பாடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மிகப்பெரிய அங்கீகாரம் என்பது சிறப்பு . இந்த மனித நேய சேவை எனும் நீள் பயணத்தின் ஒரு மைல்க்கல்லாக தமது மனித நேசிப்பிற்காக தாய்த்தமிழகத்திலும் எமது தமிழ் மண்ணிலும் ஒட்டு மொத்த தமிழினத்தின் உள்ளங்களிலும் அன்பையும் அபிமானத்தையும் பெற்று நிலைத்திருக்கும் அமரர் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் MGR அவர்களின் பெயரால் 2018 முதல் ஆண்டு தோறும் “MGR 101, 102, 106” எனும் இசை மாலை ஒன்றை ஒழுங்கமைத்து எமது உள்ளூர் கலைஞர்களையும் மனித நேயத்தின் பால் பரிவு கொண்ட பிற இசை வல்லுனர்கள் பாடகர்கள் போன்றோருடனும் கை கோர்த்து தமது கம்பீரக் குரலால் மக்கள் வெள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி எம் மக்களின் ஆறாத்துயர் துடைத்திட அதனூடே அரும் பாடுபட்டு நிதி சேர்த்தன் பயனாக இருதய நோய் முற்றி உயிருக்காக போராடி நின்ற எம் ஊர் உறவுகளில் இது நாள் வரை 105 இளம் உயிர்களை அறுவைச் சிகிச்சைகள் மூலம் காப்பாற்றி அவர்களையும் அவர் சார் குடும்பத்தினரையும் முகம் மலர வாழ வைத்த செயல்கள் வார்த்தைகளால் விளக்கிட முடியாதவை.
அத்தோடு தமது உடல் நலக்குறைகளின் இயலாமை காரணமாக குறிப்பாக சிறுநீரக வருத்தம் முற்றி ரத்த சுத்தீகரிப்பினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலையில் உள்ள, தொழில் வாய்ப்போ வருவாயோ பெறும் வகையற்றோரின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளாக பால் தரக்கூடிய ஆடு மாடுகள் கோழிப் பண்ணைகள் தையல் நிலையம் மற்றும் சிறு கைத்தொழில் மூலம் அன்றாட வாழ்வை நகர்த்தும் உள்ளூர் தயாரிப்புகளுக்கான சிறு தொழில் இயத்திர ஆலைகள் போன்ற எண்ணற்ற உதவித்திட்டங்கள் மூலம் வாழ்வாதார வழிமுறைகளை ஏற்படுத்தி அவர்கள் கண்ணீரைத் துடைதிட்டதில் இவரது நிவாரண அமைப்பின் பங்கு இணையற்றது எனில் மிகையல்ல எனலாம்.
பெருந் தொற்று காலமாகிய 2020-2021 காலப்பகுதிகளில் MGR Night போன்ற பொது சமூக நிகழ்வுகள் இல்லாததனால் அந்த அமைதி நிலையிலும் Online போன்ற வலைத்தள வழிமுறைகள் ஊடாக ஜனவரி 2021 இல் “பொங்கு மனிதம்” எனும் ஒரு மெய்நிகர் இசை நிகழ்வூடாகவும் மனிதநேய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தி அதனூடே பெற்றுக் கொண்ட $130,287.14 டொலர் நிதிகளை பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்காக ஏழு மாவட்டங்களிலும் உலர் உணவும் வழங்கி பல சத்திர சிகிச்சைகளையும் பல சவால்களுக்கிடையே நிவாரண அமைப்பு செய்து முடித்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முற்பகுதியில் MGR 106 எனும் மாபெரும் இசை நிகழ்வின் ஊடாக $236.658.58 டொலர்களை சேகரித்து வழங்கி இந்த உயிர்காப்பு செயல் வடிவம் உச்சத்தைத் தொட்டிருப்பது உயிர்ப்போர் வாழ்வாதாரப் போர் புரியும் நமது மண் வாழ் மக்களுக்கான மறுவாழ்வின் கலங்கரை விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.
நிவாரணம் எனும் இந்த நலன் காப்பு அமைப்பின் அதி உச்ச பண்பாக மேற் கூறிய வரவு செலவு அனைத்திற்குமான ஒரு சதம் பிசகாத ஆண்டறிக்கை கணக்கு அட்டவணைப் படுத்தப்பட்டு வழங்குனர் பெயர், வழங்கிய தொகை அவற்றை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தம் நோய்களுக்கு செலவான தொகை, பயனாளிகளின் பெயர்கள் போன்ற அனைத்து தரவுகளும் தமது முகநூல் ஊடாகவும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் அனைவரும் காணும் வண்ணம் பதிவேற்றப் பட்டிருப்பது அவரது இந்த இறை நிகர் பணிக்கான சான்றாகின்றது என்றே சொல்வேன்.
மகாத்மா காந்தியை கெளதம புத்தரை சுவாமி விவேகானந்தாவை அன்னை தெரேசாவை மேன்மை சொல்லும் இன்றைய மனித வர்க்கம் குறிப்பாக நமது ஈழ சமூகம் தமது துறை சார் செய்தி ஊடகங்களோ சமூகவலைத் தளங்களோ அன்றி ஊர் சங்கங்களோ அமைப்புக்களோ இவ்வாறான மனிதம் தழைக்க தமது வாழ்நாளை அர்ப்பணித்து செலாற்றும் திரு.செந்தில் குமரன் போன்றோரை தமது நிறுவனங்கள் வாயிலாக உரிய முறையில் நன்றியறிதலையோ அன்றி இச்செயற்பாட்டு வளர்ச்சிக்கான ஊக்கமோ ஆக்கமோ கொடுக்கின்றோமா என்றால் பதில் கேள்விக்குறியாகவே தெரிகிறது.
இதே வேளை எமது ஈழ சமூகத்திற்கோ அல்லது தங்கள் தமிழ்நாடு சமூகத்திற்கோ ஒரு சதத்திற்கும் பயனற்ற தமிழக திரைப்பட நடிகர்களையும் பாடகர்களையும் சாமரம் வீசி தூக்கி வைத்து கொண்டாடும் எம் சமுகத்தில் உள்ள சில ஊடகங்கள் மற்றும் மனிதர்களின் செயல் வெட்கத்தின் உச்சம்.
இந்நிலை மாறவேண்டும்
இதயங்கள் நெகிழ வேண்டும்
இளைய தலைமுறை செந்தில் குமரன்கள் இவ்வாறான வழிகாட்டிகளின் அடியொற்றி மனிதம் காக்க தோள் கொண்டு அணிவகுக்க வேண்டும்.
வாழ்க நிவாரணத்தாய்
வாழ்க செந்தில் குமரன்
வாழ்க கொடையாள மக்கள்
வாழ்க மனித நேயம்.
“உள்ளம் தேறிச் செய்வினையில் ஊக்கம் குன்றாது உழைப்போமேல்
பள்ளம் உயர் மேடாகாதோ பாறை பொடியாய்ப் போகாதோ”
இப்படிக்கு
நிவாரணத் தாயின்
சிறுத் தொண்டன்
க.இராசநாதன்.
28-09-23.