வடக்கில் ஜனாதிபதி கிழக்கில் பண்பாட்டுப் பெருவிழா | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
ஒருபுறம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் படம் காட்டுகிறார்; படம் எடுக்கிறார். இன்னொரு புறம் அவருடைய ஆளுநர் கிழக்கில் பெருமெடுப்பில் பண்பாட்டு விழாக்களை ஒழுங்குபடுத்துகிறார். புதிய ஆண்டு பிறந்தபின் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்தார். இங்கு அவர் 24க்கும் மேற்பட்ட தரப்புகளை சந்தித்திருப்பதாகத் தகவல். அவர் சந்தித்த தரப்புகளுக்குள் சிவில் சமூகங்கள்; அரசு உயர் அதிகாரிகள்,வடக்கில் பரீட்சைகளில் சாதனை படைத்தவர்கள்; இசை நிகழ்ச்சிகளில், விளையாட்டுப் போட்டிகளில், பழுதூக்கும் போட்டிகளில் சாதனை படைத்தவர்கள்; தொழில் முனைவோர் என்று பல தரப்பினரும் அடங்குவர். தமிழ் மக்கள் மத்தியில் சாதனை புரிந்த தரப்புகளையும் அவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார். சில சமயங்களில் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். அச்சந்திப்புகளில் பெரும்பாலானவை அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ்த் தரப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே மேற்படி சந்திப்புகளில் கலந்து கொண்டார்கள்.
அரசியல் தீர்வைப்பற்றி அவர் அதிகம் கதைக்கவில்லை. இம்முறை யாரும் அதைப்பற்றித் தன்னிடம் கேட்கவில்லை என்று தனது கட்சிக்காரர்களிடம் அவர் கூறியதாக ஒரு தகவல்.யு.எஸ் ஹோட்டலில் நடந்த சந்திப்பில், மாகாண சபைகளுக்கு நிதி அதிகாரம் உண்டு என்றும், நீங்கள் உங்களுடைய மாகாணத்தை கட்டி எழுப்புங்கள் என்று கூறியுள்ளார். பல்கலைக்கழக முக்கியஸ்தர்களைச் சந்தித்தபோது, புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வாருங்கள், அதற்கு நாங்கள் உதவுவோம் என்ற தொனிப்படப் பேசியுள்ளார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள துறை சார் அறிவை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார் ஏற்கனவே கனடாவைச் சேர்ந்த ஒரு தமிழ் முதலீட்டாளர் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறிய பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்பி விட்டார். அதுபோல புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தாயகத்தில் கல்வித்துறையில் முதலீடுகளை செய்யலாம் என்பதனை அவர் சூசகமாகக் கூற விளைகிறாரா?
அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவரிடம் புதிதாக எதுவும் இல்லை. அவரைச் சந்தித்த அறிவு ஜீவிகளும் குடிமக்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அவருக்கு எரிச்சலூட்டும் அல்லது அவரை கோபப்படுத்தும் கேள்விகளை கேட்கவில்லை என்றும் தெரிகிறது.
இவ்வாறு ஜனாதிபதி வடக்கில் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு பலதரப்பட்டவர்களையும் சந்தித்த அதே காலப்பகுதியில், கிழக்கில் அவருடைய பிரதிநிதியாகிய ஆளுநர் பெருமெடுப்பில் பண்பாட்டு விழாக்களை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்.
தமிழ் முஸ்லிம் ஆகிய இரண்டு இனங்களையும் கவரத்தக்க விதத்தில் படகு போட்டி, ஏறுதழுவுதல் என்பவற்றோடு மிகப்பெருமெடுப்பிலான ஒரு பொங்கல் விழாவையும் அவர் ஒழுங்குபடுத்தியிருக்கிறார்.
செந்தில் தொண்டமான், கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்து கொண்டிருக்கிறார். அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் இந்தியாவின் ஆலோசனைகள் இருந்ததாக பரவலான ஊகங்கள் உண்டு.அவருக்கு இந்தியாவில் தொடர்புகள் அதிகம். இந்தியாவின் சக்திமிக்க அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகளோடு அவர் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்றார். இம்முறை திருகோணமலையில் அவர் ஒழுங்குபடுத்திய பண்பாட்டு விழாக்கள் அவருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தை நிரூபிப்பவை. அதுமட்டுமல்ல இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பிணைப்புகளை அவர் கிழக்கிற்கும் பரவலாக்கி பலப்படுத்த தொடங்கிவிட்டார் என்று பொருள்.
ஜல்லிக்கட்டு அதாவது ஏறு தழுவலுக்கு அவர் இந்தியாவில் இருந்தே பயிற்சியாளர்களை கொண்டு வந்திருந்தார். மேடையில் அவர்களுக்கு நன்றியும் சொன்னார். இந் நிகழ்வுகளை தொடக்கி வைத்தவர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாம் தூதுவர் ஆகும். அவருக்கும் நன்றி சொல்லப்பட்டது.
திருக்கோணமையில் ஆளுநர் ஒழுங்குபடுத்திய மெகா பொங்கல் முக்கியமானது. திருகோணமலையின் நவீன வரலாற்றில் அது போன்ற பெருமெடுப்பிலான பொங்கல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதில்லை. நோர்வையின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது, திருமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலை” போன்ற ஒரு பெருமெடுப்பிலான மக்கள் திரட்சி அதுவென்று கருதப்படுகின்றது. அது ஒரு விதத்தில் தமிழ் எழுச்சியைக் காட்டியது. அது தொடர்பாக கேள்விகள் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவ்வளவு பெரிய மெகா பொங்கல் இதற்கு முன் திருகோணமலையில் மட்டுமல்ல வடக்கிலும் நடந்ததில்லை. இலங்கை முழுவதிலும் அதுதான் முதல் தடவை.
அந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் நடனம் ஆடினார்கள். ஏனைய பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. செந்தில் தொண்டமான் அங்கே ஒரு ஆளுநர் என்பதைத் தாண்டி ஒரு கதாநாயகனைப் போல காணப்பட்டார். அந்த நிகழ்வில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழர்களின் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று கூறினார்.
கிழக்கில் திருகோணமலைதான் அதிகம் சிங்களமயப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் சிங்கள பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் மாவட்டம் அது. புள்ளிவிபரங்களின்படி தமிழ் மக்களின் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களின் மூலம் பெருமளவுக்கு அபகரிக்கப்பட்ட ஒரு நிலத்துண்டு அது. அங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் நினைவு வாகன ஊர்திக்குத் தலைமை தாங்கி எடுத்துச்சென்ற போது திட்டமிட்டு இறக்கப்பட்ட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார். அந்த அளவுக்கு சிங்கள மயப்பட்ட ஒரு பிரதேசத்தில் இந்த அளவுக்கு பெருமெடுப்பில் பொங்கல் விழாவை கொண்டாடியமை என்பது அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை. அந்த விடயத்தில் ஆளுநர் இந்தியாவையும் தனக்கு அருகில் வைத்திருக்கிறார்.
அதேசமயம் மேற்படி பொங்கல் விழாவைக் குறித்து வேறு விமர்சனங்களும் உண்டு. ஒரு புறம் மட்டக்களப்பு மேய்ச்சல் தரையை அபகரிக்கும் சிங்கள விவசாயிகள், அங்கே மாடுகளை வெட்டியும் சுட்டும் கொலை செய்து வருகிறார்கள். திருகோணமலையில் பண்பாட்டு விழா இடம்பெற்ற அதே காலப்பகுதியில் ஒரு மாடு சுருக்குத் தடத்திற்கு உயிருக்காக போராடும் படம் வெளியில் வந்தது.அவ்வாறு மேய்ச்சல் தரையை மீட்கப் போராடும் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து “மேய்ச்சல் தரை பட்டி பொங்கல்” என்று கூறி ஒரு whatsapp குழுவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.இப்படியாக கிழக்கின் ஒரு பகுதியில் மாடுகளின் மேச்சல் தரையை அபகரிக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் மறைமுகமாக பக்கபலமாக காணப்படுகின்றது. அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காதிருக்கின்றது. அந்த விடயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு ஒருபுறம் மேய்ச்சல் தரையை அபகரித்து, மாடுகளை சுட்டும் வெட்டியும் சுருக்கு வைக்கும் கொல்லும் ஒரு பின்னணிக்குள், கிழக்கின் மற்றொரு பகுதியில் காளை மாடுகளை வைத்து ஏறு தழுவும் பெருவிழாவை நடத்தியது ஓர் அரசியல் முரண் என்று விமர்சனங்கள் வெளி வருகின்றன.
அதுமட்டுமல்ல அண்மையில் பெய்த கடும் மழையால் கிழக்கில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன விக்னேஸ்வரனின் கட்சி அங்கு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அது தொடர்பான ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்பட்டுள்ளன. அவ்வாறு கிழக்கில் ஒரு பகுதி வெள்ளத்தில் தத்தளிக்க, இன்னொரு பகுதியில் பெருமெடுப்பில், பெரும் செலவில் அப்படி ஒரு பண்பாட்டு விழா தேவையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மேற்படி விமர்சனங்களில் உண்மை உண்டு. ஆளுநர் செந்தில் நியமிக்கப்பட்ட புதிதில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் மேச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் துணிச்சலான சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தார். எனினும் அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியவில்லை. பிக்குகள் அவர் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே புகுந்து குழப்பினார்கள். திருகோணமலையில் அத்துமீறிக் கட்டப்படும் விகாரைகளைக் தடுத்து நிறுத்த அவரால் முடியவில்லை. மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு முடிவுகட்ட அவரால் முடியவில்லை. மேய்ச்சல் தரைக்கான போராட்டம் ஆண்டு இறுதியோடு நூறாவது நாளை கடந்து விட்டது. ஆளுநரால் அதற்கு தீர்வைக் கொடுக்க முடியவில்லை.
அதே ஆளுநர் ஏறு தழுவும் போட்டியைத் திருகோணமலையில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறார். அதற்கு இந்தியாவிலிருந்து பயிற்சியாளர்களை அழைத்திருக்கின்றார். பயிற்சியாளர்கள் மட்டுமல்ல அந்த விழாவின் அறிவிப்பாளர்களும் இந்தியாவில் இருந்துதான் வந்திருந்தார்கள். அறிவிப்பும் தமிழகப் பாணியில் தான் இருந்தது.
இப்படியாக புதிய ஆண்டு பிறந்த சில நாட்களில் வடக்கிலும் கிழக்கிலும் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? வடக்கில் ஜனாதிபதி 13ஆவது திருத்தத்தை,அதாவது மாகாண சபையை தீர்வாக முன்வைக்கின்றார். அதன்மூலம் அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்தலாம். தீர்வு விடயத்தில் 13 வேண்டாம் என்று எதிர்ப்புக் காட்டும் தமிழர்களையும் இந்தியாவையும் மோத விடலாம். இன்னொரு புறம் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார். அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன. அதன்மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையை உருவாக்க முயற்சிக்கின்றார். 13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார். அதாவது வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கம் என்ன செய்ய விளைகிறது என்றால் மாகாண சபைகளை பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றது என்று பொருள்.