LOADING

Type to search

இலங்கை அரசியல்

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கு: ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை

Share

– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கின்றது என்பது தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டு.

இதுபோன்று ஏற்கனவே ஒரு வழக்கு பர்மிய அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கம்பியா அந்த வழக்கை 2019இல் தொடுத்தது. இந்த இரண்டு வழக்குகளும் அனைத்துலக நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள். இந்த இரண்டு வழக்குகளையும் தொடுத்தது ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் நாடுகள்.

தென்னாபிரிக்காவின் இந்த நகர்வானது இனப்படுகொலைக்கு உள்ளாகும் அல்லது உள்ளாகிய மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒன்று. நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படியும் அமையலாம்.அது ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கில் நடந்தது போல பொருத்தமான நீதியை பெற்றுக் கொடுக்கத் தவறலாம். உலக அரசியலில் தூய நீதி எதுவும் கிடையாது. போருக்கு பின்னரான சமூகங்களில் பொறுப்புக் கூறும் நோக்கத்தோடு ஐநா முன்வைக்கும் நிலை மாறு கால நீதியும் கூட தூய நீதி அல்ல. அது ஒரு அரசியல் நீதி, அது ஓர் அரசியல் தீர்மானம்.யார் யாருக்கு எதிராக வழக்கு தொடுப்பது? யார் யாரைக் கூப்பிட்டு விசாரிப்பது? போன்ற எல்லாவற்றிலுமே அரசியல் தீர்மானங்கள் உண்டு. எல்லா அரசியல் தீர்மானங்களும் ராணுவ பொருளாதார ராஜதந்திர நலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றவை. நிச்சயமாக அறநெறிகளின் அடிப்படையில் நீதிநெறிகளின் அடிப்படையிலோ அல்ல. அதற்குப் பின்வரும் உதாரணங்களைக் காட்டலாம்.

ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் உலக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நாடுகளும் உட்பட ஆபிரிக்க நாடுகள் எவையும் இன்றுவரையிலும் உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை.ஏனெனில் ரஷ்யா,ஆபிரிக்காவை அதிகம் அரவணைத்து வருகின்றது.

அதுபோலவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து சிறிது காலத்திலேயே மேற்கு நாடுகள் அங்கு நடப்பது இனப்படுகொலை என்று குற்றம் சாட்டின.ஆனால் இன்றுவரை காசாவில் நடப்பது இனப்படுகொலை என்று எந்த ஒரு மேற்கு நாடும் கூறவில்லை. அது மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் நடவடிக்கைக்கு இதுவரையிலும் எந்த ஒரு மேற்கு நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அனைத்துலக நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும்போது அதற்குரிய ஆரம்ப ஏற்பாடுகளில் அதிகம் ஈடுபட்டது பிரித்தானியாவும் அமெரிக்காவுந்தான்.

அவ்வாறு இஸ்ரேலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை ஆதரிக்காத அதே மேற்கு நாடுகள்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன.

எனவே இங்கே யாருக்கு எதிராக யார் வழக்கு தொடுப்பது என்பதனை அறநெறிகளை விடவும் நீதி நியாயங்களை விடவும் புவிசார் மற்றும் பூகோள அரசியல் நலன்கள் தான் தீர்மானிக்கின்றன. இந்த விடயத்தில் பலஸ்தீனர்கள் ஈழத் தமிழர்களைவிடப் பலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அதிகார சபை உண்டு.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உண்டு. ஐநாவில் அவர்களுடைய குரல் பலவீனமாகவேனும் ஒலிக்கின்றது. ஐநாவில் அவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் உண்டு

ஆனால் ஈழத் தமிழர்களின் நிலை அவ்வாறில்லை.இறுதிக் கட்டப் போரில் ஏறக்குறைய முழு உலகமும் ஒன்றில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக நின்றது.

அன்றைக்கு உலகில் பெரும்பாலான நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நின்றன.அல்லது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தரப்புக்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டுச் சேர்ந்திருந்தன. ஐநா, போரில் நேரடியாக தலையிடாமல் விட்டதன் மூலம் இனப்படுகொலையை மறைமுகமாக அங்கீகரித்தது.

இந்தியாவும் சீனாவும் பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று நட்பு நாடுகள் அல்ல. ஆனால் இரண்டு நாடுகளுமே ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரு கோட்டில் நின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் எதிரிகள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. சீனாவும் அமெரிக்காவும் உலக அளவில் ஒன்றுக்கொன்று எதிரான அரசியலைக் கொண்டிருப்பவை. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரண்டும் ஒன்றாக நின்றன. உலகில் பிராந்திய மட்டத்திலும் உலகளாவிய மட்டத்திலும் தங்களுக்கு இடையே பகைவர்களாகக் காணப்படும் நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒன்றாக நின்றன

பெரிய நாடுகள் மட்டுமல்ல, இப்பொழுது இனப்படுகொலைக்கு உள்ளாகும் பாலஸ்தீனம் 2009 இலும் அதற்குப் பின்னரும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் எந்த அறத்தின் அடிப்படையில் நிலைப்பாடுகளை எடுத்தது? பலஸ்தீன சுயாட்சி அதிகாரசபை எனப்படுவது ஒடுக்கப்படும் ஒரு தரப்பு என்ற அடிப்படையில் மற்றொரு ஒடுக்கப்படும் தரப்பாகிய ஈழத் தமிழர்களைத்தான் ஆதரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஈழத் தமிழர்களை ஆதரிக்கவில்லை. 2009 இல் மட்டுமல்ல அதற்குப் பின்னரும் பலஸ்தீனம் ஈழத் தமிழர்களின் பக்கம் இல்லை. அவர்கள் மகிந்தவின் பக்கம்தான் நிற்கின்றார்கள்.2009 மே மாதத்திற்கு பின்னர்தான் அவர்கள் மகிந்தவை பலஸ்தீனத்துக்கு அழைத்து அங்குள்ள உயர் விருது ஆகியபலஸ்தீன நட்சத்திரம்என்ற விருதை அவருக்கு கொடுத்தார்கள். அங்குள்ள சாலை ஒன்றுக்கு அவருடைய பெயரையும் சூட்டினார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது?

பலஸ்தீனம் மட்டுமல்ல கியூபாவும்கூட ஈழத்தமிழர்களின் பக்கம் இல்லை. கியூபா ஆயுதப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்ற ஒரு முன்னுதாரணம். அந்த முன்னுதாரணத்தை 1980களில் ஈழ விடுதலை இயக்கங்கள் பெரிதும் போற்றின. சில இயக்கங்கள் தமது முக்கிய பொறுப்புக்களை வகித்த நபர்களுக்கு காஸ்ட்ரோ என்று பெயரையும் வைத்தன. ஆனால் கியூபா, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையின் போது யாருடைய பக்கம் நின்றது? ஐநா தீர்மானங்களில் யாருடைய பக்கம் நிற்கின்றது?

2009 க்கு பின் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதலாவது தீர்மானம் முன்வைக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்துப் பேசிய கியூபப் பிரதிநிதி ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். அப்பிரேரணையை முன்வைக்கும் பெரும்பாலான மேற்கு நாடுகள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு போர் புரியத் தேவையான ஆயுதங்களில் 60 விதமான ஆயுதங்களை வழங்கினஎன்று அவர் சொன்னார். அவ்வாறு போர் புரிய ஆயுதங்களை வழங்கிவிட்டு இப்பொழுது அந்தப் போரில் குற்றங்கள் இடம் பெற்றதாகக்  கூறி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வருகிறீர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதுதான் உண்மை

கடந்த 15 ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் மேற்கு நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்மொழிந்து வருகின்றன. தீர்மானங்கள் இலங்கை அரசுக்கு எதிரானவையா? அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவையா? என்று கேட்டால் முதலாவது அர்த்தத்தில் அவை இலங்கை அரசுக்கு எதிரானவைதான். இலங்கை அரசாங்கம் சீனாவை நோக்கிப் போவதில் உள்ள வரையறைகளை உணர்த்துவதே ஐநா தீர்மானங்களின் உள்நோக்கம் ஆகும். ஆனாலும் அனைத்துலக அரங்கில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானவை அனைத்தும் ஈழத் தமிழர்களுக்கு சாதகமானவைதான். அந்த தர்க்கத்தின் அடிப்படையில் பார்த்தால், ஐநா தீர்மானங்கள் ஈழத் தமிழர்களுக்குச் சாதகமானவை.அதாவது, புவிசார் அரசியல் மற்றும் பூகோள அரசியல் அர்த்தத்தில், எல்லா ஐநா தீர்மானங்களும்,புவிசார் மற்றும் பூகோள அரசியல் நோக்குநிலைகளில் இருந்து உருவாக்கப்பட்டவைதான். சில சக்திமிக்க நாடுகள் இலங்கை மீது தமது பிடியைப் பலமாகப் பேணுவதற்கு ஈழத் தமிழர்களின் காயங்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன என்பதே நடைமுறை உண்மையாகும்.

கடந்த 15 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு பொருத்தமான நீதி எதுவும் கிடைக்காமல் போனதற்கு அதுதான் காரணம்.கடந்த ஆண்டு ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் இயங்கி வருகின்றது. அது ஈழத் தமிழர்கள் கேட்ட ஒரு பொறிமுறை அல்ல. அது மிகவும் பலவீனமானது. ஆனாலும் அது இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானது.

இப்படிப்பட்டதோர் அனைத்துலகப் பின்னணியில் காசாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுதே தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான திருப்பம். இது பலஸ்தீனர்கள் ஈழத் தமிழர்களைவிட ஒப்பீட்டளவில் பலமாக இருப்பதைக் காட்டுகின்றது. தென்னாபிரிக்காவின் அமெரிக்காவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையும் அது பிரதிபலிக்கின்றது.

வழக்கின் முடிவுகள் எப்படியும் அமையலாம்.அனைத்துலக நீதிமன்றம் எனப்படுவது ஐநாவின் உறுப்புகளில் ஒன்று. ஐநாவின் ஆறு பிரதான உறுப்புக்களில் அதுவும் ஒன்று. அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஐநா பொதுச் சபையிலும் ஐநா பாதுகாப்பு சபையிலும் விவாதிக்கப்படும். அங்கே குறிப்பாக ஐநா பாதுகாப்பு சபையில் வீற்றோ அதிகாரமிக்க நாடுகள் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் மட்டுந்தான் அது நடைமுறைப்படுத்தப்படும். அவை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அந்தத் தீர்ப்பு அடுத்த கட்டத்திற்கு நகராது. பர்மாவில் ரோஹியங்கா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகியபோது அதற்கு எதிராக கம்பியா தொடுத்த வழக்கிலும் இது நடந்தது

ஐநா பொதுச் சபையோ பாதுகாப்பு சபையோ எடுக்கக்கூடிய எந்த ஒரு முடிவும் சக்திமிக்க நாடுகளின் வீற்றோ அதிகாரத்தில் தங்கியிருக்கின்றது. வீற்றோ அதிகாரம் எனப்படுவது உலகப் பொது மன்றமாகிய ஐநா சமனற்றது; எல்லாருக்கும் சமமான நீதியை வழங்கக்கூடியது அல்ல என்பதனை உணர்த்துவது. ரோகிங்கா முஸ்லிம்களின் விடயத்தில் சீனா பர்மாவுக்கு ஆதரவாக அதன் வீற்றோ வாக்கு அதிகாரத்தை பயன்படுத்தும். இஸ்ரேலின் விடயத்திலும் அமெரிக்கா அதைச் செய்யும். அதாவது இறுதியிலும் இறுதியாக ஐநாவின் நீதி எது என்பதனை வீற்றோ அதிகாரந்தான் தீர்மானிக்கப் போகின்றது. நிச்சயமாக அறநெறிகளோ நீதி நெறிகளோ அல்ல.