LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஆலய வங்கி கணக்கிலே பணம் சேமிப்பதல்ல எமது நோக்கம் என்கிறார் – ஆறு.திருமுருகன் அவர்கள்

Share

நடராசா லோகதயாளன்.

ஆலய வங்கி கணக்கிலே பணத்தை சேமித்து வைத்து வங்கி புத்தகங்களை பார்த்து பெருமை கொள்பவர்கள் அல்ல நாங்கள் என தெல்லிபளை துர்க்கதேவி தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

தெல்லிப்பளையில் அமைக்கப்பட்ட துர்க்காதேவி வீட்டுத் திட்ட திறப்பு விழாவில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாம் வாழுகின்ற நமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என சிந்தித்து செயலாற்றி வருகின்றோம். அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் எங்களை நல்ல முறையில் ஆற்றுப்படுத்திய காரணத்தால் எங்களுடைய சிந்தனை முழுவதும் தர்ம காரியம் செய்வதிலேதான் அக்கறையாக இருகின்றது.

பம்பலப்பிட்டி சரவஸ்வதி மண்டபத்திலே யோகர் சுவாமிகள் தினம் ஒன்றிலே நான் உரையாற்றி முடிந்ததும் இலங்கை மத்திய வங்கியிலே பணியாற்றிய ஒருவர் என்னை வந்து சந்தித்தித்து,
அதன்போது தெல்லிப்பளை புகையிரதப்பாதை அருகில் 40 பரப்பு காணி உள்ளது உங்களிடம் இந்தக் காணியை ஒப்படைத்தால் ஏதாவது தர்ம காரியத்திற்கு பயன்படுத்துவீர்களா என என்னிடம் கேட்டார்.

எங்களிடம் ஒப்படையுங்கள் எங்களுடைய இல்லப் பிள்ளைகள் திருமணம் ஆகி இல்லற வாழ்வில் இணையும் போது அவர்களுக்கென்று ஒரு வீட்டினை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. பெற்றோரை உறவுகளை தெரியாமல் சிறு வயது தொடக்கம் எங்களுடன் வளர்ந்த பிள்ளைகளுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ளது அதனால் உங்களுடைய இந்தக் காணியை எங்களிம் ஒப்படையுங்கள் என பணிவுடன் தெரிவித்தேன்.

எனது கோரிக்கையினை ஏற்று அடுத்த வாரமே இந்தக் காணியினை எங்களிடம் அவர் ஒப்படைத்தார்.

மிகவும் பற்றையாகவும் எல்லைகள் எது என்று தெரியமாலும் இருந்த இந்தக் காணியை சிறந்த முறையிலே துப்பரவு செய்து எல்லைப்படுத்தி தூய்மையாக வைத்திருந்தோம்.

இந்தக் காணியை நாங்கள் பெற்றுக் கொண்டுள்ளோம் என அறிந்த சுங்கத்திணைக்கள. பொண்னையா நீங்கள் பெற்றுக் கொண்ட காணிக்கு அருகில்தான் எனது காணியும் உள்ளது அதனையும் நான் தருகின்றேன் ஏதாவது தர்ம காரியத்திற்கு பயன்படுத்துங்கள் என தனது காணியினையும் எங்களிடம் ஒப்படைத்ததார்.

இவற்றில் முதல்கட்டமாக பொன்னையா எங்களிடம் ஒப்படைத்த காணியில் எங்கள் இல்லப்பிள்ளைகளுக்கு 6 வீடுகளை கட்டி இல்லற வாழ்வில் இணையும் போது ஒப்படைத்தோம்.

அதன் பின்பு மேலும் மூன்று வீடுகளை கட்டி இல்லற வாழ்வில் இணைந்த எமது இல்லப் பிள்ளைகளுக்கு ஒப்படைத்துள்ளோம்.

மேலும் 4 புதிய வீடுகளை தற்பொழுது கட்டி எமது அன்பான இல்லப் பிள்ளைகளுக்கு இவற்றை ஒப்படைக்கவுள்ளோம்.

தமது உறவுகள் யார் என்று கூட தெரியாமல் சிறு வயது தொடக்கம் எங்களிடம் வளர்ந்த எங்கள் பிள்ளைகளை இல்லற வாழ்வில் இணையும் போது ஒன்றும் இல்லாமல் வெறுங்கையுடன் அனுப்பி வைக்க எங்களுக்கு மனம் இடம் தரவில்லை.

நான் தெல்லிப்பழை தூக்கா தேவியின் நிழலில் வளர்ந்தனான் வெறுங்கையோடு திருமணமாகி சென்றேன் என ஒரு பிள்ளையும் மனம் கலங்கி ஏங்க கூடாது என்ற சிந்தனை எனது மனதில் ஆழமாக பதிந்தது.

இதனால் எங்கள் இல்லப் பிள்ளைகள் குறைவின்றி இல்லற வாழ்வில் இணைய வேண்டும் என்று நாங்கள் இந்த வீட்டுத் திட்டப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம்.

வீட்டுத் திட்ட பணிகளை நாங்கள் ஆரம்பிக்கும்போது பணத்திற்கு என்ன செய்வீர்கள் என பலரும் கேட்டார்கள் அம்பாள் ஏதாவது ஒரு வழி காட்டுளாள் என்று நம்பினேன் அதுபோலவே எங்கள் தர்ம காரியங்களுக்கு எங்கள் நாட்டிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் அன்னையின் பக்தர்களும் எங்களுக்கு தாமாக முன்வந்து உதவுகின்றார்கள்.
எங்கள் பணிகளை அவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு மனமுவந்து உதவி செய்கின்றார்கள்.

இன்று யாழ்பாணம், கண்டி, கொழும்பு மட்டக்களப்பு, மொறட்டுவ என பல பல்கலைக்கழகங்களில் எங்கள் பிள்ளைகள் படிக்கின்றார்கள் ஏனைய சாதாரண பிள்ளைகளைப் போலவே எங்கள் பிள்ளைகளும் கல்வி கற்க நாங்கள் சகல உதவிகளையும் செய்கின்றோம்.

இது போன்ற தர்ம காரியங்களை பார்த்து பொறாமைப் படக்கூடாது இது போல இன்னும் இன்னும் பல தர்ம காரியங்களை செய்ய வேண்டும் என்று மனதிலே அனைவருக்கும் ஊக்கம் வர வேண்டும்.

அன்னை சிவத்தமிழ் செல்வியிடம் பேராசிரியர் சிவத்தம்மி அவர்கள் ஒருமுறை கேட்டார் உங்களுக்கு பின்பு இந்தப் பணிகளை யார் செய்வது என அதற்கு அம்மா அவர்கள் எனக்கு அருகில் இருக்கும் திருமுருகனிடம் கேளுங்கள் என பதில் சொன்னார்.

எனக்கு பெரிய பொறுப்பு இருந்தது அன்னையின் பணிகளை குறைவின்றி முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனை எனது மனதில் ஆழமாக ஊறிக் கொண்டது.

எங்களுக்கு அப்பாற்பட்ட எங்கள் அம்பாளின் சக்தி எங்களை இயக்குகின்றது அதன் வழி நடந்து நாங்கள் தர்ம காரியங்களை செய்து வருகின்றோம்.

எங்கள் தர்ம காரியங்களை சரிவர உணர்ந்தவர்கள் எங்களுக்கு அம்பாளின் பெருங் கருணையால் ஏதோ ஒருவகையில் உதவுகின்றார்கள்.

இல்லப் பிள்ளைகளுக்கு கட்டப்பட்டுள்ள இந்த வீட்டுத் திட்டத்திலே ஒரு சிறிய விளையாட்டு மைதானத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களும் உள்ளது அதற்கும் எங்கள் அன்னை யாரோ ஒருவர் மூலம் எங்களுக்கு உதவி செய்வாள் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்கள் பணி அனைத்தும் நமது சமூகத்திற்க்கு எங்களால் முடிந்த தர்ம காரியங்களை செய்வதுதான். ஆலய வங்கி கணக்கிலே பணத்தை நிரப்பி வைத்து விட்டு நான் தலைவர், நான் செயலாளர், நான் பொருளாளர் என நமக்கு நாமே பெருமை பேசிக் கொள்வதில்லை.

அன்னை சிவத்தமிழ் செல்வி காட்டிய வழியில் எங்கள் அம்பாளின் ஆசியுடன் எங்கள் தர்ம காரியங்கள் தொடரும் என்றார்.