கனடா நோக்கிய பயணம்: டீகோ கார்சியாவில் சிக்கிய தமிழ் புகலிட கோரிக்கையாளர்களின் நிலை
Share
(கனடா உதயனின் சிறப்பு கட்டுரை)
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரித்தானிய-அமெரிக்க இராணுவத்தின் ஆளுமையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளதாக ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
அங்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியுள்ளவர்கள் வன்முறை, துஷிபிரயோகம், சட்டவிரோத தடுப்புக்காவல் ஆகியவற்றை எதிர்கொள்வதால், அவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த ஐ நா அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், கனடாவில் தஞ்சம் கோரும் நோக்கில் இந்தியாவிலிருந்து சென்ற தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு அந்த தீவை அண்மித்த கடல் பிரதேசத்தில் சேதமடைந்ததால் அவர்கள் மீட்கப்பட்டு அந்த தீவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிரித்தானியாவுக்கு சொந்தமான அந்த தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழு, தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் மறக்கப்பட்டுவிட்டதாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளதோடு, பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்கியுள்ள அகதி முகாமிலுள்ள இதர புகலிட கோரிக்கையாளர்களாலேயே பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு தாங்கள் ஆளானதாக ஐ நா விசாரணையாளர்களிடம் கூறினர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக சுய தீங்கை ஏற்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயல்வது ஆகியவை குறித்தும் அவர்கள் ஐ நா விசாரணையாளர்களிடம் பகிர்ந்துகொண்ட விடயம், பிரித்தானியாவின் எல்லைகளுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் பிரதேசங்களுக்கான உச்சநீதிமன்றத்தில் ஐ நாவின் அகதிகளுக்கான அமைப்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அங்குள்ள புகலிட கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து கவலைகள் எழுந்ததை அடுத்து முதல் முறையாக அங்கு நேரில் ஆய்வு செய்ய ஐ நா அகதிகளுக்கான முகமையின் அங்கு குழு சென்றுவந்தது.
பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்வதால் எந்த பயனும் இல்லை என புகலிடக் கோரிக்கையாளர்கள் கருதுவதாகவும், பாதுகாப்பு, நீதி போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என அவர்கள் கருதுவதே அங்கு அப்படியான செயல்கள் அதிகரிக்க காரணம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கால்பந்து மைதான் அளவிற்கே இருக்ககூடிய நிலப்பரப்பில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இந்த புகலிட கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடப்பாற்றாக்குறை நிலவும் சூழலில், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரே முகாமில் வசிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிலும் அந்த 61 பேரில் 16 சிறுவர்கள் தடுத்து வைத்திருப்பது “குறிப்பாக கவலைக்குரியது” என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதோடு, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அவர்களை பிரித்தானியாவிற்கு மாற்றுவதற்கான அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் சுயாதீனமாக எங்கும் வெளியே செல்ல முடியாதபடி அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூடாரங்களைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டு, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட G4S என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களால் கண்காணிக்கப்படுகிறார்கள்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் சுயமாக தமக்கான சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுவது என்றாலும், அது பல சந்தர்ப்பங்களில் அவர்களின் கலாசார விழுமியங்களுடன் ஒத்துப்போவதில்லை என்று ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எலிக்கடியாலும் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தீவில் பரவலாக காணப்படும் எலிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் கூடாரங்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“நாங்கள் மறக்கப்பட்டவர்களாகிவிட்டோம், எங்கள் வாழ்க்கைய முடித்துக்கொள்வது குறித்து எங்களில் அனேகமானவர்கள் கருதுகின்றோம்.” என பெண் ஒருவர் ஐ நா விசாரணையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
டீகோ கார்சியாவில் தங்கள் வாழ்க்கை நிலை குறித்தும் அவர்கள் பேசியுள்ளனர். “இங்கு வாழ்வது நரகத்தில் வாழ்வது போன்றது” என புகலிடக் கோரிக்கையாளரான தாய் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடும் அந்த அறிக்கை, சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், காவலுக்கு இருக்கும் நாய் வேலிக்கு வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிவதையும் சிறார்கள் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீவு இந்தியப் பெருங்கடல் தீவின் ஒரு பகுதி என பிரித்தானியா வலியுறுத்துகிறது. இது லண்டனால் நிர்வகிக்கப்படுகிறது, எனினும் அரசியலமைப்பு ரீதியாக பிரித்தானியாவில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை டீகோ கார்சியா தீவு மொரிஷியஸின் ஒரு பகுதி என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தெரிவிக்கின்றது.
புகலிடக் கோரிக்கையாளர்களின் குழுவினால் பிரித்தானியாவில் இருக்கும் அந்த பிரதேசத்திற்கான உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், அந்த தீவில் தாங்கள் தடுத்து சட்டவிரோதமான தடுப்புக்காவலாகும் என வெளிப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் அமைப்பு அந்த நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர், டீகோ கார்சியாவில் அவர்களின் வாழ்க்கை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாக உள்ளது என்றும், அவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் நீதிமன்றில் கூறியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியவில் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் இது பற்றி கூறும் போது: “பிரித்தானியவிற்கு வெளியே ஆனால் தமக்கு சொந்தமான அந்த தீவுகள் குடியேறிகள் இருப்பதற்கு ஏற்ற இடம் கிடையாது, அதனால் தான் நாங்கள் அவர்களின் தஞ்ச கோரிக்கையை பரிசீலப்பதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம் என்றும், பாதுகாப்பு தொடர்பில் யாருடைய கோரிக்கைகள் ஏற்க்கப்படுகிறதோ அவர்களை ஏற்புள்ள மூன்றாம் நாடு ஒன்றிற்கு அனுப்ப முயல்கிறோம். எந்த வேளையிலும், அங்கிருக்கக் கூடிய குடியேற்றவாசிகளின் நல்வாழ்வும் பாதுகாப்புமே எமது உச்சபட்ச முன்னுரிமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
எனினும் அங்கு அவர்களின் சூழல் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு ஒப்பாகும் என்பதை தாங்கள் ஏற்கவில்லை என்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.