LOADING

Type to search

இலங்கை அரசியல்

எல்லை தாண்டி மீன்பிடித்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை

Share

நடராசா லோகதயாளன்

இலங்கை மற்றும் இந்தியாவில் நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட படகுகளை சொந்த நாடுகளிற்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் இருநாடுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகளில், நீதிமன்றம் விடுவித்த படகுகளை இலங்கைக்கு எடுத்து வரவும் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம், இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியப் படகுகளில் இலங்கை நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்ட படகுகளை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வது தொடர்பிலுமே இந்தப் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன.

இதிலே இலங்கையில் இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் தொடர்பில் 2021 ஆம் ஆண்டுவரை பிடிக்கப்பட்டவை, ஏலம் விடப்பட்டு விட்டன. அதன் பின்பு 2022 முதல் 2024 மார்ச் 10 வரையில், 96 படகுகள் எல்லை தாண்டிய சமயம் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 படகுகள் திருகோணமலையிலும், 11 படகுகள் மன்னார் மாவட்டத்திலும் உள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 81 படகுகள் உள்ளன.

இவ்வாறுள்ள 96 படகுகளில் யாழ்ப்பாணம் மீனவர் சங்கத்திற்கு ஒரு படகும், முல்லைத்தீவு சங்கத்திற்கு ஒரு படகும் கடற்தொழில் அமைச்சரால் வழங்கப்பட்டதில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட படகு கடலில் மூழ்கி விட்டது. எஞ்சிய 94 படகுகளும் தற்போதுவரையில் இலங்கையில் உள்ளன.

அவ்வகையில் இலங்கையில் உள்ள 94 படகுகளில் 17 படகுகள் நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட நிலையில் ஓர் படகு இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. எஞ்சிய 16 படகுகளில் இரு படகுகள் திருகோணமலையிலும், 14 படகுகள் மயிலிட்டியிலும் உள்ளன. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளிலும் இரு படகுகள் முழுமையாக சேதமடைந்துவிட்டதாக இந்திய மீனவர்களே நேரில் வந்து பார்வையிட்டுச் சென்று உறுதி செய்து அந்த இரு படகுகள் தொடர்பிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்து விட்டனர்.

இதேபோன்று இலங்கை மீனவர்களின் படகுகளில் 2013ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 76 படகுகள் இந்தியாவில் பிடிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சால் இந்தியாவிடம் விபரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றினை ஆராய்ந்த இந்தியத் தரப்பு இந்த 76 படகுகளின் தற்போதைய விபரத்தை தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இலங்கையின் 76 படகுகளில் 11 படகுகள் கடத்தல் வழக்குகளுடன் நேரடியாகத் தொடர்புபடுவதனால் அவற்றை எக்காரணம் கொண்டும் வழங்க முடியாது எனக் கூறப்பட்டுவிட்டது. எஞ்சிய 65 படகுகளில் 2015 ஆம் ஆண்டில் 15படகும், 2017ஆம் ஆண்டில் 5 படகுகளும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு 2023இல் ஒரு படகு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விபரம் தெரிவித்துள்ளனர்.

இந்த விபரங்களிற்கு அமைய எஞ்சி 43 படகுகளையும் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான அனுமதியை பெற்றுத்தர இந்தியத் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இவற்றின் பிரகாரம் இந்திய மீனவர்களின் 14 படகுகள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இலங்கை மீனவர்களின் 43 படகுகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் அடுத்த மாதம் முற்பகுதியில் கை மாறுவதற்கான ஏற்பாடுகள் இரு தரப்பிலும் முன்னெடுக்கப்படுவதோடு சேதமாக்கபட்ட வலைகளிற்கான நட்ட ஈடு தொடர்பிலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளன.

இதன் இன்னுமொருபடியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தும் மீன்பிடிப் படகுகளை கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.