இந்தியாவின் கம்பனி நிதி உதவியுடன் முசலி பிரதேச பிரிவில் குடியேறியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உயர் தர மிளகாய் விதைகள்
Share
(மன்னார் நிருபர்)
(31-03-2024)
இடம் பெயர்ந்த நிலையில் மீண்டும் மீள் குடியேறியுள்ள முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அளக்கட்டு கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அதி உயர் மிளகாய் உற்பத்தி செய்கைக்கான விதைகள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(31) மதியம் முசலியில் இடம் பெற்றது.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியாவின் தனியார் கம்பனி ஒன்றின் நிதி உதவியுடன் இலங்கையின் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அளக்கட்டு பிரதேசத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக குறித்த கிராமத்திற்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தலைமையில் வருகை தந்து பார்வையிட்டதோடு தெரிவுசெய்யப்பட்ட 250 விவசாயிகளுக்கு உயர் தரத்திலான மிளகாய் செய்கைக்கான விதைகளை இலவசமாக வழங்கி வைத்தனர்.
மேலும் குறித்த உயர் தரத்திலான மிளகாய் விதைகளை எவ்வாறு பயிரிட்டு பலன் பெற்றுக்கொள்வது மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து வந்து விவசாயிகளுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.
முசலிப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அதி உயர் தரத்திலான மிளகாய் விதைகள் வழங்கும் நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த விவசாய ஆலோசகர்கள் உள்ளடங்களாக முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேப்பங்குளம்,பெரிய புள்ளச்சி பெற்கேணி,மற்றும் அகத்தி முறிப்பு கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 250 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் உள்ளடங்கலாக கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.