LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் அரசியல் சமூகம் என்ன செய்யப் போகின்றது?

Share

– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியானது ஒருமித்த முடிவை எடுக்க முடியாத ஒரு நிலை தொடர்ந்து நிலவுகின்றது. கட்சிக்குள் காணப்படும் இரண்டு பிரிவுகளும் இரு வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிகின்றது. சுமந்திரன் அணி பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. சிறீதரன் பொது வேட்பாளர் தொடர்பான கருத்தரங்குகளில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறார். சிறீதரன் அணிக்கு நெருக்கமானவராகத் தோன்றும் சம்பந்தர், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் என்று தெரிவை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விடயத்தில் அவர் சுமந்திரன் அணியின் நிலைப்பாட்டோடு காணப்படுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு முக்கியமானது. ஏனென்றால் பொதுவாக தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சாதகமாகத்தான் முடிவெடுப்பதுண்டு. கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழரசுக் கட்சி ராஜபக்சக்களுக்கு எதிராகத்தான் முடிவெடுத்து வந்திருக்கின்றது.

ராஜபக்சக்களுக்கு எதிராக என்ற ஒரே காரணத்துக்காக, போர் முடிந்த அடுத்த ஆண்டு சரத் பொன்சேகாவை ஆதரித்த ஒரு கட்சி. அது ஒரு மோசமான முடிவு. தமிழ் மக்கள் யார் மீது போர் குற்றச்சாட்டுகளையும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளையும் சுமத்துகின்றார்களோ, அவருக்குபோரை வழிநடத்திய ஒரு தளபதிக்குதமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக் கொடுத்தமை என்பது, அதுவும் 2009க்கு அடுத்த ஆண்டு, அவ்வாறு சரத் பொன் சதாவை ஆதரித்தமை என்பது ஒரு மகா தவறு.இப்பொழுது தமிழ் மக்கள் உலக நீதிமன்றங்களுக்கு போக வேண்டும் என்றும் ஐநாவின் பொதுச்சபை, பாதுகாப்பு சபைக்கு விவகாரம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றார்கள். அந்த உலகப் பொது நிறுவனங்கள் தமிழ் மக்களை நோக்கிப் பின்வரும் கேள்வியை கேட்க முடியும். நீங்கள் தானே ஆயுதப் போராட்டம் முடிந்த அடுத்த ஆண்டு அந்த தளபதியை அங்கீகரித்து, அவருக்கு வாக்களித்தீர்கள். இப்பொழுது அவரும் அவருக்கு கீழ் செயல்பட்ட தளபதிகளும் குற்றம் புரிந்திருக்கிறார்கள் என்று சொல்லி ஐநாவில் முறையீடு செய்கிறீர்களே? என்று கேட்டால் தமிழ் மக்கள் என்ன பதில் சொல்வது? தமிழ் மக்களை சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கேட்ட தமிழரசுக் கட்சி என்ன பதில் சொல்லும் ?

இப்படிப்பட்டதோர் வரலாற்றுப் பின்னணியில், இம்முறை தமிழரசுக் கட்சி ராஜபக்சங்களுக்கு எதிராக முடிவெடுக்கும் நிலைமைகள் தான் அதிகமாகத் தெரிகின்றன. அப்படிப் பார்த்தால் அவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு அல்லது ஜேவிபிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜேவிபியின் பொதுக்கூட்டத்தில் சுமந்திரன் முன் வரிசையில் காணப்பட்டார். அதே சமயம் ஜேவிபி தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். இது, தமிழரசுக் கட்சி அதன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகளில் துலக்கமாகப் பிரிந்து நிற்பதைக் காட்டுகின்றதா.

அவ்வாறு கட்சி பிரிந்து இருப்பதும், குறிப்பாக கட்சியின் புதிய நிர்வாகம் செயற்பட முடியாது இருப்பதும், உடலாலும் மனதாலும் இயலாதவர் ஆகிவிட்ட மாவை சேனாதிராஜா தொடர்ந்தும் தலைவராக இருப்பதும், சிங்கள வேட்பாளர்களுக்கு ஒரு விதத்தில் அனுகூலமானது.

மாவை சேனாதிராஜாவின் தலைமைப் பொறுப்பின் கீழ் தான் கட்சி இப்படி ஒரு சீரழிவு நோக்கிச் செலுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உண்டு. மாவையால் முடியாது என்பது கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் உள்ள ஒரு பொது அபிப்பிராயம். ஆனால் இந்த பொது அபிப்பிராயம்,கடந்த 15 ஆண்டுகால அனுபவம் என்பவற்றை எல்லாம் மீறி அவர் தொடர்ந்தும் தலைவராகக் காணப்படுகிறார்.

நாடு இந்த ஆண்டு ஒரு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் மூன்று தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இப்படிப்பட்டதோர் காலகட்டத்தில், கட்சியானது வினைத்திறனோடு செயல்பட முடியாமல் இருக்கிறது. இது தென்னிலங்கைக்கு அனுகூலமானது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது வழமைபோல ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கின்றது. தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது யாருக்கும் வாக்களிக்காமல் விடுவது என்பது ஒரு ஜனநாயகத் தெரிவு. ஆனால் அது ஒரு கட்சியின் கொள்கை முடிவாக மட்டும் இருக்க முடியாது. ஏனென்றால் மக்களுக்கு வழி காட்டத்தான் கட்சி.மக்களைத் திரட்டத்தான் கட்சி. புறக்கணிக்கிறோம் என்று அறிவித்துவிட்டு, கட்சி சும்மா இருக்க முடியாது. மக்களைப் புறக்கணிக்குமாறு கருத்துருவாக்கம் செய்ய வேண்டும். ஏறக்குறைய அதுவும் ஒரு தேர்தல் பிரச்சாரம் தான். அதற்கும் ஒரு பட்ஜெட் இருக்கும்.அவ்வாறு மக்கள் தேர்தலை புறக்கணிப்பார்களாக இருந்தால், அதுகூட ஆகப் பிந்திய ஒரு மக்கள் ஆணையாகக் காட்டப்படும். எனவே தனது முடிவை மக்கள் மயப்படுத்துவதில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியிருக்கிறது. முடிவை அறிவித்து விட்டு விலகி நிற்பது அல்லது வேட்பாளரை முன்னிறுத்த முயற்சிக்கும் தரப்புகளை அரசாங்கத்தின் ஆட்கள் என்று கூறுவது தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல. தன் முடிவை மக்கள் மயப்படுத்துவதில்தான் ஒரு கட்சியின் வெற்றி தங்கியிருக்கின்றது. அந்தக் கட்சியின் கருத்துக்கள் மக்கள் மயப்பட்டால்,மக்கள் தேர்தலில் அந்தக் கட்சியோடு நிற்பார்கள். ஜனநாயக ரீதியாக அந்தக் கட்சி அதிக ஆசனங்களை வெல்லும். மட்டுமல்ல, அது மக்களை ஒரு தேசமாகத் திரட்டும். எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதன் முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்.

அப்படி அவர்கள் உழைக்கவில்லையென்றால், மக்களை அவர்கள் பாட்டில் வாக்களிக்க விடுவதாக அது முடியும்.அது ஓர் அரசியல் தவறு. மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை நெறிப்படுத்துவதுதான் கட்சி அரசியல். மக்கள் இயக்கத்தின் அரசியலும் அதுதான். எனவே மக்களுக்கு வழி காட்ட வேண்டும். மக்களை நீங்களே முடிவெடுங்கள் என்று விட முடியாது. அது தமிழ் மக்களைக் கையாள முற்படும் வெளிச் சக்திகளின் வழிகளை இலகுவாக்கி விடும்.

எனவே தேர்தலைப் புறக்கணிப்பதும் ஒரு தெரிவு. ஆனால் அது மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். அதற்குரிய மக்கள் ஆணை பெறப்பட வேண்டும். இல்லை  என்றால் என்ன நடக்கும் ?

தமிழரசுக் கட்சியும் முடிவெடுக்காது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தன் முடிவை மக்கள் மயப்படுத்தாது.

பொது வேட்பாளரை முன்னிறுத்தப் போவதாக அறிவித்த ஈபிஆர்எல் எஃப் கட்சி அறிக்கைகள் விடுவதற்கு அப்பால் எதையும் செய்ததாகத் தெரியவில்லை. “மக்கள் மனுஎன்ற சிவில் சமூகம் அது தொடர்பாக இரண்டு கருத்தரங்களை ஒழுங்கு படுத்தியது. அந்த அமைப்பு கொழும்பில் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகின்றது.இந்நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவானது இப்பொழுதும் கருத்துருவாக்கம் என்ற ஒரு கட்டத்தைத் தாண்டவில்லை. அதை ஒரு செயலாக மாற்ற ஒரு பெரும் செயலாக மாற்ற, அத்தெரிவை முன்வைக்கும் கட்சிகளும் அமைப்புகளும் மக்கள் மத்தியில் இறங்கி கருத்துருவாக்கத்தைச் செய்ய வேண்டும்.

ஆனால் அரங்கில் அப்படிப்பட்ட செயற்பாடுகளைப் பெரிய அளவில் காண முடியவில்லை. எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவானது தமிழ்ப் பொதுக் கருத்து, அல்லது பொது முடிவு என்ற தெரிவுதான். தமிழ்ப் பொது முடிவு என்பது, நடைமுறையில் தமிழ் ஐக்கியம்தான். கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளை ஐக்கியப்படுத்த முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறான ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது கட்சிகள் அல்லாத குடிமக்கள் அமைப்புகள் அல்லது சில தனி நபர்கள் அல்லது மாணவர் அமைப்புகள்தான். 2020க்கு பின்னர்தான் அதாவது தமிழரசுக் கட்சி அதன் ஏகபோகத்தை இழந்த பின்னர் தான் ஓரளவுக்கு ஐக்கிய முயற்சிகளுக்கு ஒத்துழைத்தது. ஆனால் நடைமுறையில் ஐக்கியம் எனப்படுவது அதன் முழுமையான பொருளில் இன்றுவரை சாத்தியமாகவில்லை.

ஆறு கட்சிகள் இணைந்து புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சியை குத்துவிளக்கு சின்னத்தின் கீழ் உருவாக்கின. அவை அண்மையில் வவுனியாவில் கூடி ஒரு முடிவெடுத்தன. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஏனைய கட்சிகளோடு உரையாடுவது என்பதே அந்த முடிவு. அவ்வாறு உரையாடி எல்லாக் கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அண்மையில்,தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது போன்ற சில விவகாரங்களில் மட்டும் தமிழ்க் கட்சிகள் ஐக்கிய பட்டிருக்கின்றன.மாறாக தேசத்தைத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகளை ஐக்கியப்படுத்த முடியவில்லை.இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்பட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கலாமா?

கடந்த 15 ஆண்டுகளாக நடக்காத ஓர் அதிசயம் இனி நடக்கக்கூடும் என்று எப்படி நம்புவது? எனவே கட்சிகளாக இணைந்து ஒரு முடிவை எடுத்தாள் அது ஒரு பெரிய அடைவு தான். அதுவும் தேர்தல் நோக்க நிலையில் இருந்து அல்லாமல், தேசத்தைத் திரட்டு வது என்ற அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். அதாவது கடந்த 15 ஆண்டுகளாக நடக்காத அதிசயம் அல்லது அற்புதம் ஒன்று நிகழ வேண்டும்.அப்படி எதுவும் நடந்தால்தான் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பெரும்பாலான கட்சிகள் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும்.