LOADING

Type to search

இலங்கை அரசியல்

அநுரகுமாரவின் ”யாழ் உரை” யும் தமிழ் கட்சிகளிடம் சில கேள்விகளும்

Share

‘யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார வின் கட்சியில் காணப்படுவதக்க கூறும் நீங்கள் ,இறுதி யுத்தத்தை வன்னியில் நின்று தலைமையேற்று நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு காரணமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோரியதுடன் நீங்களும் ஆதரவாக வாக்களித்தமை எந்த வகையில் நியாயம்?”

கே .பாலா

எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் வாக்களியுங்கள் என்றோ சமஷ்டியை தருகின்றோம் வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்கு இங்கு நாம் வரவில்லை . உங்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கதைக்க நாங்கள் உங்களை சந்திக்க வரவில்லை.வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றியும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இன பேதமின்றியும் இந்து, இஸ்லாம், பௌத்தம் கிறிஸ்தவம் என்ற மத பேதமின்றியும் நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும். நாட்டை புதியதொரு பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கான கலந்துரையாடலுக்காகவே வந்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே .வி.பி.)தலைவர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் மக்களுக்கு கூறிய விடயம் இன்று தமிழர் அரசியல் பரப்பில் கண்டனங்களையும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாட்டில் உரையாற்றுவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே .வி.பி.)தலைவர் அநுரகுமார திசாநாயக்க கடந்த 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக அவர் இந்தியா, சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்திய அரசியல் உயர்மட்டங்களுடன் சந்திப்புக்களை நடத்திவிட்டு அதன் தொடர்ச்சியாக கனடாவுக்கு சென்று அங்கு அரசியல் கூட்டங்களை நடத்திய நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததால் அவரின் வருகை தமிழ் மக்களினதும் தமிழ் அரசியல் கட்சிகளினதும் கவனத்தை ஈர்த்திருந்தது .

யாழ்ப்பாணம் வலம்புரி சங்கிலியன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாட்டில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க,”

இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ள போதும், வடக்கிலுள்ள மக்கள் அதனை கொழும்பில் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்றும் தமக்கு சம்பந்தமில்லாத தேர்தல் என்றும் கூறுகின்றனர் . நீங்கள் வாக்களிக்காது இருக்கலாம், வேறு அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கலாம் ஆனாலும் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதியின் தீர்மானங்கள் நாட்டினதும் மக்களினதும் தலைவிதியை தீர்மானிக்கின்றது. இதனால் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்து வாழ முடியாது. ஆகவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் வாக்களியுங்கள் என்றோ சமஷ்டியை தருகின்றோம் வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்கு இங்கு நாம் வரவில்லை. உங்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கதைக்க நாம் உங்களை சந்திக்க வரவில்லை.வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றியும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இன பேதமின்றியும் இந்து, இஸ்லாம், பௌத்தம் மற்றும் கத்தோலிக்க பேதமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும். நாட்டை புதியதொரு பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கான கலந்துரையாடலுக்காகவே வந்துள்ளோம்.

பல்வேறு அரசியல் தலைவர்கள் எங்களை பற்றி கதைக்க தொடங்கியுள்ளனர். எங்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். மிகவும் தெளிவாக இரண்டு பிரிவுகள் உள்ளன. நாட்டை அழிவுக்கு கொண்டு சென்ற பிரபுக்கள் குழு பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே .வி.பி.) ஆகியனவே தெற்கில் உள்ளன. ஆனால் வடக்கில் எவ்வாறான பிளவுகள் உள்ளன. வடக்கு தெற்கிற்கு எதிராகவும், தெற்கு வடக்கிற்கு எதிராகவும் இருக்கக்கூடாது. அவர்களே எங்களை பிளவு படுத்துகின்றனர். எங்களிடம் இனம், மொழி ரீதியில் பிளவுகள் கிடையாது. இதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும், நாட்டுக்கு என்ன தேவையாக உள்ளது என்றும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

முதலாவதாக எங்களுக்கு தேசிய ஒற்றுமை அவசியம். சிங்கள, தமிழ் மக்கள் ஒருவருக்கொருவர் குரோதத்துடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எங்களை மொழி, இனம், கலா சாரம் என பிரிக்கும் அரசியல் கலா சாரமே சுதந்திர காலத்தில் இருந்துள்ளது. பழைய தலைவர்கள் தமது அரசியல் அதிகாரத்திற்காக இனவாதத்தை கக்குகின்றனர். அதன் விளைவாக எமது காலத்தில் யுத்தத்தை செய்ய வேண்டியுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் பெருமளவான தாய்மார்கள் தாம் இழந்த பிள்ளைகளை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர். எமது பழைய பரம்பரை இனவாதத்தை பரப்பியதால் எமது காலத்தில் யுத்தங்களை சந்திக்க வேண்டியேற்பட்டது. 30 வருட யுத்தத்தில் அதிகளவில் வடக்கு மக்களே பாதிக்கப்பட்டனர். இன்னும் எதிர்காலத்திற்கும் இவ்வாறான நிலைமை அவசியமாகுமா? எமக்கு இனவாத அரசியல் அவசியமா? என்று மனதை தொட்டு சிந்திக்க வேண்டும். எமது பரம்பரையில் யுத்தம் செய்தாலும் எமது பிள்ளைகள் அந்த நிலைக்கு செல்லக்கூடாது என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

இனவாதத்தை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்பும் தேசிய அரசியலொன்று அவசியம். அனைத்து மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.அத்துடன் நாட்டை கட்டியெழுப்ப இரண்டு பாதைகள் உள்ளன. முதலாவது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடி ஆராய்ந்து தீர்வுகளை வழங்க வேண்டும். அடுத்ததாக நாட்டின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும். 76 வருடங்கள் பழமையான நாட்டை அழிவுப்பதைக்கு கொண்டு சென்ற அரசியலால் நாட்டுக்கு தீர்வுகளை வழங்க முடியுமா? அது தோல்வியடைந்த, அழிவுக்கு கொண்டு சென்ற அரசியல் . மீண்டும் நாட்டின் நிர்வாக சுக்கானை அதே தரப்பினரிடம் வழங்கக் கூடாது.

இந்நிலையில் வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுகின்றோம். தமிழ் மக்கள் முகம்கொடுத்துள்ள உண்மையான முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்ற எண்ணமுள்ள அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். பிள்ளைகளின் கல்வி, தொழில்வாய்ப்பு பிரச்சினைகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீனவர்களின் பிரச்சினைகள், கலாசாரம் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வடக்கு மக்கள் முகம்கொடுக்கின்றனர். அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுகின்றோம். நாங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைப்போம்.

வடக்கின் அரசியல் இரண்டு விதமாக இருக்கலாம். முதலாவது உண்மையாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று சிந்திக்கும் அரசியல், இரண்டாவதாக வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு அவர்களின் அரசியலை வளர்க்க நினைக்கும் அரசியல் என்பன இருக்கலாம். மக்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் அரசியல் மூலமே வடக்கு மக்களின் பிரச்சினைகளுகளை தீர்க்கலாம். இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். நாங்கள் ஒன்றிணைந்து எமது நாட்டின் அரசாங்கத்தை உருவாக்குவோம். நாங்கள் வடக்கின் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றோம். உண்மையான பிரச்சினைகளை தீர்க்க ஒன்றிணையவே அதனை செய்கின்றோம் என்று உரையாற்றியிருந்தார்.

அநுரகுமார திச நாயக்கவின் இந்த உரைதான் தமிழர் அரசியல் தரப்பால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.

அநுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார். தமிழர் பிரச்சினைக்குரிய விடயங்கள்அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியில் காணப்படுகின்றன

அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை.இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திசாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும். மேலும், 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள்?

தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை.இதனை யாழ் வந்த ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது.இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர் நிராகரித்துள்ளார்.வடக்க கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம், அபிவிருத்தி மட்டுமல்ல. அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதைஅவர் அறியாதவர் போல் பேசுகின்றார்.

இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்தக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸநாயக்க 13 ஐ தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார். அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க வில்லை.

இதன்மூலம் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.இந்நிலையில் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜே.வி.பியினர் கூறுவது ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது.

இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசநாயக்க, வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை.அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு மீனவர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்தபோதும் ஜே.வி.பி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை என்றவாறாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கும் தரப்புக்களிடம் நடு நிலையாக சிந்திக்கும் தரப்பாக இருந்து ஒரு சில கேள்விகளை மட்டும் எழுப்ப வேண்டியுள்ளது. அதாவது,

ஜே .வி.பி.தலைவரான அநுர குமார திஸாநாயக்க 13 ஆவது திருத்தம் ,சமஸ்டி தீர்வு தொடர்பில் வாக்குறுதி தரவில்லை என்கின்றீர்கள். இலங்கையில் இதுவரையில் ஆட்சி புரிந்த சிங்கள அரசியல் தலைவர்கள் எமக்கு வாக்களியுங்கள் 13 பிளஸ் தருகின்றோம், சமஷ்டியை தருகின்றோம் என்று கூறி தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றியதைப் போன்று ஜே .வி.பி.தலைவரான அநுர குமார திஸாநாயக்கவும் உங்களையும் தமிழ் மக்களையும் இந்த வாக்குறுதியைத் தந்து ஏமாற்ற வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்களா?

13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து தமிழ் மக்களுக்கு இதுவரை உத்தரவாதம் தந்த மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா?மைத்திரி ,ரணிலின் வாக்குறுதியை நம்பி அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோரிய நீங்கள் மீண்டும் அவ்வாறான வாக்குறுதியை கோருவது மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றவா? அல்லது நீங்களும் சேர்ந்து ஏமாறவா?

வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் ஜே .வி.பி.முன்னின்று செயற்பட்டதாக நீங்கள் குற்றம்சாட்டுவது உண்மைதான். ஆனால் அந்த வடக்கு,கிழக்கு இணைப்பின் பிதாமகனான இந்தியா நினைத்திருந்தால் வடக்கு,கிழக்கு பிரிக்கப்பட்டதை தடுத்திருக்க முடியும். ஆனால் வடக்கு,கிழக்கு பிரிப்பு உள்நாட்டு விவகாரம் என இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தையே செல்லாக்காசாக்கி விட்டு மௌனம் காத்த இந்தியாவை இன்று வரை நம்பும் நீங்கள் , இந்தியாவை குற்றம்சாட்டாத நீங்கள் வடக்கு,கிழக்கை தனது அரசியல் ஆதாயத்துக்காக பிரிக்கஒரு வழக்கு போட்ட ஜே .வி.பி.யை குற்றம் சாட்டத் தகுதியுடையவர்களா?

யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தனர். யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூடதெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டும் நீங்கள் இறுதி யுத்தத்தை வன்னியில் நின்று தலைமையேற்று நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு காரணமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோரியதுடன் நீங்களும் ஆதரவாக வாக்களித்தமை எந்த வகையில் நியாயம்?நீங்கள் செய்ததை விடவும் ஜே .வி.பி.செய்தது பெரும் குற்றமா?

வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை என்கின்றீர்கள்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில்தான் இது தீவிரம் பெற்றுள்ளது. அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரைத்தானே உங்கள் கட்சிகள் ஆதரிக்கப் போகின்றன. அமைச்சுப்பதவி பெறப்போகின்றீர்கள். அல்லது வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் இதுவரையில் வாய் திறக்காத சஜித் பிரேமதாசவைத்தானே ஆதரிக்கபோகின்றீர்கள்?ஏனெனில் நீங்கள் தான் தமிழ் பொது வேட்பாளரை ஏற்க முடியாதென ஏற்கனவே அறிவித்து விட்டீர்களே?

அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜே.வி.பியினர் கூறுவது ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது என்று கூறுகின்றீர்கள். நீங்களும் அநுரகுமாரவின் உரையை எதிர்ப்பது,விமர்சிப்பது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்துத்தானே ?

இந்தியாவுக்கு சென்றிருந்த ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசநாயக்க, வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை என்கின்றீ ர்கள்.தமிழ் மக்களின் பிரதிநிதியான கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ என்னத்தை வெட்டிக்கிழித்தார்?

எனவே எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் வாக்களியுங்கள் என்றோ சமஷ்டியை தருகின்றோம் வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை என உண்மையைக்கூறி தமிழ் மக்களுக்கு ஆட்சியின் பங்கு தருகின்றோம் எனக்கூறும் அநுர குமார திசாநாயக்கவை விமர்சிக்கும் ,குற்றம்சாட்டும் உரித்து,அருகதை எந்தவொரு தமிழ் கட்சிகளுக்கும் கிடையாது. ஏனெனில் நீங்களும் 13 ஆவது திருத்தம், சமஸ்டியை வைத்துத்தான் அரசியல் செய்கின்றீர்கள்.