ருவாண்டா(1994)…… இலங்கை(2009)……. காசா(2024)……
Share
(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-3
சிவா பரமேஸ்வரன்….. மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
உலகத்தையே உலுக்கிய செய்திகள் வெளியாகும் நாளில், ஆர்வமாக அலுவலகம் வரும் செய்தியாளரை, “இன்று உங்களுக்கு வாராந்திர ஓய்வு நாள், நீங்கள் எதற்காக இன்று வந்தீர்கள், வீட்டிற்குச் சென்று ஓய்வெடுங்கள்” என்று ஒரு ஆசிரியர் கூறுவாறாயின் அதைவிட அந்த செய்தியாளரை பாதிக்கும் ஒரு செயல் இருக்க முடியாது.
அது தான் இந்த செய்தியாளருக்கும் நடைபெற்றது. ”மணியான” தலைவர் அப்படித்தான் என்னிடம் கூறினார்.
அந்த திங்கட்கிழமை பொழுது சங்கடமாகவே புலர்ந்தது. முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையும் பிபிசியில் வேலையிருந்தது. அதற்கு முந்தைய நாள் இரவுப்பணி வேறு.
ஆனால், அந்த திங்கட்கிழமை (18.5.2009) அதிகாலை லண்டன் நேரம் சுமார் 5.00 மணி அளவில் நண்பரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
“சிவா உங்களுக்கு ஏதாவது செய்தி தெரியுமா? நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டீர்களா?
“ஏன் மனோ! ஒன்றும் எனது பார்வைக்கு வரவில்லையே. எதாவது முக்கியமானதா?”
“ஒரு செய்தி கேள்விப்பட்டேன். நீங்கள் அனைத்து தரப்புடனுடம் தொடர்பில் இருக்கக்கூடியவர். போர் தொடர்பான விடயங்களை உங்கள் விரல் நுணியில் வைத்திருப்பவர். இங்கு உள்ளூரில் எமது பார்வைக்கு வராத பல செய்திகள் உங்களுக்கு வந்திருக்குமே” என்றார் மனோ.
“எனது தொடர்புகளிடம் பேசிவிட்டு உங்களை அழைக்கிறேன்”
“நானும் பார்க்கிறேன்”
வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசகூடிய ஒரு அரசியல்வாதி மனோ கணேசன். எனது நண்பர் என்பதற்கு அப்பாற்பட்டு நாட்டு நடப்புகளை உண்ணிப்பாக கவனிக்கும் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, சர்வதேச அளவில் மதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் ஒரு மனித உரிமைகள் போராளியும் கூட. ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையராக இருந்த கனடாவின் மேரி ராபின்சன் அம்மையாரை இலங்கைக்கு அழைத்துவந்தவர் மனோ கணேசன். அதன் பிறகு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் எந்த ஆணையரும் பதவியில் இருக்கும் போது இலங்கை வந்ததில்லை.
எனது செய்தி மூலங்கள் மற்றும் தொடர்புகளுடன் தொடர்ச்சியாக அடுத்த 30 நிமிடங்களுக்கு அழைப்புகளை எடுத்து பேசியபோதும் தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை. எமது வட இலங்கைச் செய்தியாளர் மாணிக்கவாசகம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் உதயகுமார் ஆகியோருடனும் பேசிவிட்டு ஏதேனும் “முக்கியமானதாக” இருந்தால் என்னை அழைக்கவும் என்று கூறிவிட்டு அலுவலகம் புறப்பட தயாரானேன்.
காலை சுமார் 6 மணி அளவில் ஒரு செய்தி வந்தது. “முக்கியமான தகவல் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தெரியவரலாம். எனினும் எதையும் இத்தருணத்தில் உறுதி செய்ய இயலாது. எனவே கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருங்கள்” என்று மிகவும் நம்பத்தகுந்த ஒரு செய்திமூலம் ஒன்றிலிருந்து எனக்கு வந்தது.
இந்த தகவலை நான் மனோவை அழைத்து கூற அவரும் “நானும் கேள்விப்பட்டேன். தி வார் சீம்ஸ் டு பி ஓவர் சிவா” என்றார்.
இதற்குள் 7 மணி ஆகிவிட, வீட்டில் இருப்புக்கொள்ளாமல், அன்று ஓய்வு நாளாக இருந்தாலும் அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன். நான் அலுவலகத்தை அடைந்த சமயத்தில் பிபிசியின் தமிழோசை மற்றும் சிங்கள சேவையான சந்தேஷ்யவில் யாரும் வந்திருக்கவில்லை.
உடனடியாக மாணிக்கவாசகம் அவர்களை அழைத்தேன். அப்போது இலங்கையில் மதியம் சுமார் 12.30 மணி இருக்கும். லண்டனில் காலை 8.00மணி.
இதற்குள் தமிழோசையின் இதர “மூத்த” செய்தியாளர்களும் வந்து சேர்ந்தனர். இங்கு அனைத்தும் நானே என்ற எண்ணம் கொண்டிருந்த “மணியான” தலைவருக்கு அன்றைக்கு செய்தி ரீதியாக இருந்த பரபரப்பைவிட வார ஓய்வு நாளன்று நான் ஏன் அலுவலகம் வந்தேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
“உங்களுக்கு இன்று ஓஃப் டே ஆச்சே”
“ஆமாம், முக்கியமான செய்தி ஒன்று இருக்ககூடும் என்று அறிந்தேன், அதனால் விரைவாக புறப்பட்டு வந்தேன்”.
“எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் வீட்டிற்கு சென்று ஓய்வெடுங்கள்”.
“ஓய்வு முக்கியமில்லை. மிகவும் முக்கியமான ஒரு நாளில் செய்தி சேகரிப்பில் ஈடுபடாமல் இருப்பது எனக்கு உடன்பாடு இல்லை”
“இல்லை….நீங்கள் இன்று வேலை செய்தால் உங்களுக்கு மற்றொரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும். அது சரிப்பட்டு வராது. நீங்கள் வீடு சென்று ஓய்வெடுங்கள்”.
”செய்தியைவிட உங்களுடைய கவலை அதுவானால், எனக்கு இன்று வேலை செய்ததற்கு ஈடாக மற்றொரு நாள் விடுப்பு தேவையில்லை. உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், நான் மத்திய செய்தியறைக்கு சென்று அவர்களுடன் இன்று பணியாற்றுகிறேன்” என்று சொல்ல, எனக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.
வேறு வழியின்றி, “சரி சிவா, நீங்கள் இன்று பணியில் இருப்பதாகவே குறித்துக்கொள்கிறேன்” என்று கூற ஒரு வழியாக அந்த பஞ்சாயத்து முடிவிற்கு வந்தது.
அப்போது கூட அந்த “மணியான” தலைவருக்கு அன்று என்ன அப்படி முக்கியமான செய்தி என்பதைவிட நான் ஓய்வு நாளன்று வேலைக்கு வந்ததே மண்டையை குடைந்துகொண்டிருந்தது.
அதற்குள் அரசல் புரசலாக செய்தி கசிய ஆரம்பித்தது. “போர் முடிந்துவிட்டது, பிரபாகரன் இறந்துவிட்டார்”.
உடனடியாக உலகெங்கிலிருந்தும் தொலைபேசி அழைப்புகள். பிபிசியின் மத்திய செய்தியறையிலிருந்து இடைவிடா அழைப்புகள். அந்த செய்தியை உறுதி செய்ய உள்ளக செய்தியறை முதல் உலகமெங்கும் பிபிசி தமிழோசையை எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரையில் நாம் ஏதும் செய்தியை வெளியிட வேண்டாம் என்றது தலைமை. இதற்குள் மாணிக்கவாசகமும், உதயகுமாரும்- ரூபவாஹினி மற்றும் அரச வானொலியில் போர் முடிந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன- என்று கூறினார்கள். மாணிக்கவாசகமும் வன்னியிலுள்ள தனது தொடர்புகளும் அது உண்மை என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறினார். இதற்குள் மத்திய செய்தியறையும் மாணிக்கவாசகத்தை தொடர்புகொண்டு இதே தகவலைப் பெற்றிருந்தனர்.
ஆனல், அந்த சமயத்தில் “பிரபாகரன் இறந்துவிட்டார்” என்ற செய்திய்தான் வெளியாதே தவிர அவர் உடல் குறித்து எந்த தகவலும் இல்லை.
”போர் முடிந்துவிட்டது, பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்” என்று கூறப்படுவதை தலைப்புச் செய்தியாக வெளியிடலாமா என்று தமிழோசையின் “தலைவரிடம்” கேட்க அவரோ, அவசரப்பட வேண்டாம். செய்தி உறுதியானதும் போடலாம் என்று கூறி இழுத்தடிப்புச் செய்தார். அரசு தரப்பில் கூறப்படுவதையே செய்தியாக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் எங்களைப் போன்ற சிலரோ, “போர் முடிந்துவிட்டது” என்று கூறப்படுவது தமிழர் தரப்பிலிருந்து பார்க்கப்படும் செய்தியாக இருக்க வேண்டும் என்று வாதிட்டோம். அதை அவர் புரிந்துகொண்டதாகவோ அல்லது ஏற்றுக்கொள்வதாகவோ தெரியவில்லை.
அவருக்கு உள்ளூர “பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்” என்பதில் ஒரு நிம்மதி இருந்ததை உணர முடிந்தது. ஆனால், எப்படி செய்தியை முன்னெடுத்துச் செல்வது என்பதில் அவருக்கு தெளிவில்லாத சூழல் நிலவியது. இதற்குள் லண்டன் நேரம் காலை 10 மணியாகிவிட்டது.
இதனிடையே நமது செய்தியாளர்களும் ரூபவாஹினி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கிறார்கள் என்று கூற, மத்திய செய்தியறையும் எங்கள் தரப்பிலிருந்து அது உறுதிசெய்யப்படுவதற்காக காத்திருந்தது. எனினும், தமிழோசையின் தலைவரோ மஹிந்த ராஜபக்சவே தனது தொலைபேசியில் அழைப்பெடுத்து போர் முடிந்துவிட்டது, பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
இந்த சூழலை மத்திய செய்தியறையின் தலைமை ஆசிரியருக்கு விளங்கச்செய்து, இனியும் நாம் தாமதிக்கலாகாது, அரச ஊடகம் கூறுவதை மேற்கோள் காட்டி நாமும் செய்தியை வெளியிடுவோம் என்ற கருத்தை முன்வைத்தேன். அதை அவர் ஏற்றுக்கொண்டு சுமார் 10:10 மணியளவில் அந்த செய்தியை ஒரு செய்தியறிக்கையாக வெளியானது. உடனடியாக அனைத்து மொழி சேவைகளும் இதையே பிரதான செய்தியாக தமது வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் வெளியிட்டன.
உலகமே இந்த விஷயத்தில் பிபிசி தமிழோசையை எதிர்ப்பார்த்து காத்திருந்த போது, உலகத் தமிழர்களுக்காக அதிலும் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஒலித்திருக்க வேண்டிய தமிழோசை, மத்திய செய்தியறையின் ஆங்கில செய்திக்குறிப்பை மொழிபெயர்த்து வெளியிடும் அவல நிலையில் இருந்தது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
இந்த சமயத்தில் பிபிசி நிறுவனம் எப்படிச் செயல்படும் என்பதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலக அளவில் அந்த நிறுவனத்திற்கு பெருமையும் நம்பகத்தன்மையும் பெற்றுத்தந்தது அதன் உலகசேவை வானொலி ஒலிபரப்புகள் தான். சுமார் 30 மொழிகளில் ஒலிபரப்பான அந்த சேவைக்கு உலகம் முழுவதிலிருந்தும் முழுநேர மற்றும் பகுதிநேர செய்தியாளர்கள் இருந்தனர். களத்திலிருந்து அவர்கள் தரும் செய்தியே பிபிசியின் அடிப்படையாக இருந்தது. அது மட்டுமல்ல, ஒவ்வொரு மொழிப்பிரிவின் தலைவர்களுக்கும் “வானளாவிய அதிகாரம்” இருந்தது. பிரித்தானிய மகாராணியைவிட இவர்களுக்கு கூடுதல் அதிகாரம் இருந்தது என்று கூறப்படும். ஆகவே ஒவ்வொரு மொழிப்பிரிவின் தலைவர்களும் ஒரு குறுநில மன்னர்களைப் போன்று நடந்துகொள்வார்கள்.
இவர்களில் பலர் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள், களத்தில் பணியாற்றியவர்கள், அற்புதமான தொடர்புகளை பேணி வந்தவர்கள். ஆனால் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பிரிவின் தலைவர்களின் தலைமைத்துவம் மற்றும் ஊடகத்திறமை தொடர்ச்சியாகவே கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. திறமையின்மை தொடர்பில் தமிழோசையின் அந்த “மணியான” தலைவர் மீது உள்ளக விசாரணைகள் நடைபெற்றதும் உண்டு. வெற்று டப்பா போன்று விஷயமே தெரியாமல் தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அவர் வல்லவராக இருந்தார். துரதிஷ்டவசமாக திறமையின்மை இருந்தாலும் செய்திகளைப் பொறுத்தவரை துறைத்தலைவர்கள் சொல்வதே வேதவாக்கு. பாதிக்கப்பட்ட தமிழர்கள் தரப்பை மையப்படுத்தியே செய்திகள் இருக்க வேண்டும் என்று நான் தொடர்ச்சியாக வாதிட்ட காரணத்தால் பழிவாங்கப்பட்டு, எனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பதவி உயர்வும் அளிக்கப்படாதது மட்டுமல்ல சில அவமானங்களையும் சந்திக்க நேர்ந்தது.
கடைசியாக, உலகெங்கும் உள்ள தமிழர்களின் கருத்துக்களைப் பெற்று, அதை உள்ளடக்கிய ஒரு பெட்டகமாகத் தயாரித்து அன்றைய ஒலிபரப்பில் சேர்த்தோம். அதில் தமிழ் மக்கள் அழுது புலம்புவதும், வேதனையில் விளிம்பில் இருப்பதையும் யதார்த்தமாக நான் பதிவு செய்திருந்தேன். பிரபாகரன் என்ற தனிநபரின் இறப்பு எப்படி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருந்தது என்பதை பிபிசி தொலைக்காட்சியின் உலக ஒலிபரப்பில் ஆங்கிலத்தில் நான் விளக்கினேன்.
இப்படியான அந்த கனமான திங்கட்கிழமை கழிந்தாலும், பிரபாகரன் இறந்துவிட்டார், அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்றால் அதற்கான ஆதாரங்கள் ஏன் வெளியாகவில்லை. போர் முடிந்திவிட்டது என்று எதன் அடிப்படையின் அரசு கூறுகிறது என்ற சந்தனை அன்று முழுவதும் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
வன்னியில் இருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த இரவு மிகவும் நீண்டிருந்தது.
ஆனால், போர் முடிந்துவிட்டதாக அரசு அறிவித்ததன் பின்புலத்தில் பெரும் அவலம் இருந்தது………. அது அடுத்த வாரம் …….. தொடரும்…….