LOADING

Type to search

இந்திய அரசியல்

பட்டா வழங்க 16 நாட்கள், பாமரர்கள் வாழ்வில் சந்தோஷப் பூக்கள்….

Share

மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் சான்று தேவைப்படுகிறது. வாழ்கிற வாழ்க்கைக்கும் அது அத்தியாவசியமாகிறது. நாம் யார் என்பதற்கும், என்ன தொழில் செய்கிறோம் என்பதற்கும், எது எது நமக்கு உடைமை என்பதற்கும், எந்த ஒரு துறைகளுக்கு செல்வதற்கும் சான்று அவசியமாகிறது.

தொழில், வணிக ரீதியான சான்றுகள் விதிமுறைக்கும், விரிவான விசாரணைக்கும் உட்பட்டவை. ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அத்தியாவசிய சான்றிதழ்கள் வசிக்கும் இடத்திலேயே கேட்டறிந்து, வருவாய்த் துறையில் இருக்கும் ஆவணத்தில் பார்த்தறிந்து வழங்கத்தக்கவை.

ஆனாலும் அவற்றை பெறுவதற்கு தேவையற்ற காலதாமதமும் பண விரயமும் பொது மக்களுக்கு ஏற்படுகிறது.

சாதி , இருப்பிடம், வருமானம், வாரிசு உள்ளிட்டவற்றுக்கான 26 சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வருவாய்த்துறை முன்பு நேரடி விண்ணப்பத்தின் பேரில் வழங்கி வந்தன. பின்னர் அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

‘காசிக்குப் போயும் கர்மம் தொலையவில்லை’ என்பது போல், இணையத்தில் ஏற்றியும் அதிகாரிகளின் இதயத்தில் ஏற்ற முடியாமல் ‘பழைய குருடி கதவைத் திருடி’ கதையாக காலதாமதமும் காசு பணச் செலவும் தொடர்கதை ஆகின.

இந்நிலையில் தான் ஆன்லைன் வழியாக வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு தாலுகாவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கான நடைமுறையை விரைவுப்படுத்தவும், செயல்படுவதை கண்காணிக்கவும் சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்ட மற்றும் தாலுகா அளவில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பது மற்றும் மதிப்பீடு செய்வதற்காக துணை ஆட்சியர் அளவில் ஒரு நோடல் அதிகாரி’யை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாலுகாவிற்கு வெளியில் இருந்து துணை தாசில்தார் அல்லது உதவியாளர்கள் குழுவை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்படுவார் என்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.

துடிப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த செயல்முறை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இலட்சக்கணக்கான பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

இதையே கடந்த காலத்தில் நடிகர் விஜயகாந்த் தனது கட்சியான தேமுதிக தேர்தல் அறிக்கையில்,’ வீடு தோறும் சென்று அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வருவாய் சான்றிதழ்கள் வழங்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

அவர் வாயால் சொன்னதை தமிழக முதல்வர் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் மூலம் சான்றிதழ்கள் கிராமங்களிலேயே வழங்கப்பட்டால் இது மேலும் மெருகேற்றப்பட்ட புரட்சிகரமான திட்டமாக மாறும்.

அதேபோல், பொதுமக்களுக்கான சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ள தமிழக அரசு, அதையே பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டமாக இயற்றவேண்டும்’ என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் ஆலோசனையும் நியாயமாக தோன்றுகிறது.

பொதுச்சேவை பெறும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்தினால் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்பதில் சிறிதளவு மையம் இல்லை. ஏனெனில் பொது சேவை பெறும் உரிமைச் சட்டப்,படி, குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும், சேவை வழங்காத அதிகாரிக்கு தண்டம் விதிக்கவும் வகை செய்யப்படும். ஆட்சி நிர்வாகம் அப்பழுக்கின்றி இயங்கும்.

அடித்தட்டு மக்களுக்கான இந்த ஆவண சேவை என்பது அடிப்படை சேவையாவது. அரசுத் துறையின் மற்ற சேவைகள் இல்லாத ஒன்றை பெறுவதாக இருக்கும். ஆனால் இந்த சான்றாவண சேவை மட்டும் இருக்கும் ஒன்றை உறுதி செய்வதாக இருக்கும். எனவே, இது எளிமையாக எளிதாக கிடைக்க வேண்டிய சேவை. ஆனால் இதில் தான் வருவாய்த் துறையின் ஊழியர்கள் அனைவருமே வருவாய் பார்த்து வந்தனர்.

இந்த சேவைகளை பெறுவதில் பெரும்பாலானோர் ஏழை, பாழைகள் தாம். வீட்டில் அடுப்பு எரிக்க விளக்கு ஏரிக்க முடியாதவர்கள் வயிறு எரிய லஞ்சம் கொடுத்தும் அவர்களை நடையாய் நடக்கவைத்து தவிக்க விட்டனர் வருவாய்த்துறையினர்.

எப்படியோ தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்த சீரிய திட்டம், அத்தகைய கொடுமைகளை மாற்றும் சீர்திருத்தமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பட்டாக்கள் சான்றிதழ்கள் வழங்குகின்ற வேலை எளிதாகி விட்டால், விவசாயம்,கல்வி, வேலை வாய்ப்புக்கான முயற்சிகள் எளிதாகும். மக்கள் முன்னேற்றத்தின் மூலம் நாட்டின் முன்னேற்றம் கைகூடும்.