LOADING

Type to search

இந்திய அரசியல்

சொத்துக்காக நடந்த கொலையில் இளைஞர் கைது

Share

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராடம் (56). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். உத்திராடத்திற்கும் அவரது தம்பி சங்கருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையில் விசாரணை நடைபெற்று இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை உத்திராடம், காலை கடனை முடிப்பதற்காக ஏரிக்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சங்கரின் மகன் சுபாஷ் (21) உத்திராடத்தின் தலையில் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்னையால் சொந்த பெரியப்பாவை தம்பி மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.