மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே உதயநிதியை ‘துணை முதல்வர்’ என்று கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ்
Share
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்சி 40க்கு 40 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பாக துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றவர்களுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழா (ஜூன்16) நடைபெற்றது. இதில் முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ் மொழியில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1761 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் “தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதே போல தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நன்றாக படியுங்கள். மற்ற அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். “மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நம்முடைய தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருக்கும் தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதே போல தமிழகத்திற்கு முதல்வராக தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் இருப்பதை போல இளைஞர்களுக்கு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்” என்று பேசினார். இவருடைய இந்த பேச்சு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.