LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா பீல் பிரதேச சொப்கா மன்றத்தின் 15வது ஆண்டுவிழா

Share

குரு அரவிந்தன்

யூலை மாதம் 6 ஆம் திகதி கனடாவின் பீல் பிரதேசத்தில் உள்ள சொப்கா குடும்ப மன்றத்தினர் தமது 15வது ஆண்டு விழாவை மிசசாகாவில் ஸ்ரிவ்பாங் வீதியில் உள்ள அனாபில்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடத்தினார்கள். மங்கள விளக்கேற்றி, அகவணக்கமும் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா பண் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து வரவேற்புரையும் அதன் பின் மன்றத் தலைவர் யாழினி விஜயகுமாரின் உரையும் இடம் பெற்றன. இந்தவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் அவர் தனது உரையில் நன்றியைத் தெரிவித்திருந்தார்.

இந்த விழாவின் பிரமத விருந்தினராகக் கனடா காவல்துறை பெண் அதிகாரியான ஏவா ரட்ணகுமார் கலந்து கொண்டார். இளைய தலைமுறையினருக்கு ஏற்றவகையில் ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்து அறிவூட்டும் வகையில் அவரது உரை இடம் பெற்றிருந்தது. அடுத்து ஈசாபரா ஈசானந்தாவின் உரை இடம் பெற்றது.

அடுத்து இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரொறன்ரோ கல்விச் சபையைச் சேர்ந்த அனு சிறீஸ்கந்தராஜாவின் உரை இடம் பெற்றது. அவரது உரை இளைய தலைமுறையினரின் கல்வி சார்ந்ததாக அமைந்திருந்தது. எனது 25 வருடகால ரொறன்ரோ கல்விச்சபை ஆசிரியர் பணியைப் பாராட்டி ரொறன்ரோ கல்விச்சபை பாராட்டுப் பத்திரம் வழங்கிய போது அவர்தான் அப்போது அதை மேடையில் வைத்து வழங்கி என்னைக் கௌரவித்திருந்தார்.

இந்த மன்றத்தின் முன்நாள் தலைவராகவும், தற்போது காப்பாளராகவும் நான் இருப்பதால் இளைய தலைமுறையினருக்கு உரையாற்றும்படி கேட்டிருந்தனர். நான் எனது உரையில்,

‘சொப்கா மன்றத்தின் இந்த ஆண்டு விழாவை இளையதலைமுறையினர் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்துவதையிட்டுப் பெருமையாக இருக்கின்றது. 15 வருடங்களுக்கு முன் சிறுவர் சிறுமிகளாக இருந்தவர்கள் இன்று நிர்வாகக்குழுவில் அங்கம் வகித்து தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை நடத்துவது பெருமைக்குரியது. புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்காது என்று சொன்னவர்கள் இந்த நிகழ்வைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இங்கே பிறந்து வளர்ந்த மன்றத்தின் இளைய தலைமுறையினர் தமிழில் உரையாடி இந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்துவதையிட்டு எல்லோருக்கும் பெருமையாக இருக்கின்றது. இளைய தலைமுறையினரிடம் எங்கள் மொழியைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் எடுத்த முயற்சி வீண்போகவில்லை என்பதை நேரடியாக இங்கே பார்க்கும் போது எமக்குப் பெருமையாக இருக்கின்றது.’ என்று உரையின் போது குறிப்பிட்டிருந்தேன்.

தொடர்ந்து வீணை இசை, திரைப்படப் பாடல், சிறுவர் நாடகம், சிறுமிகள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து நன்றி உரை இடம் பெற்றது. சென்ற வருடம் நடந்த சொப்கா விழாவில் எனது நூல்களை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை மருத்துவ மனைக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தோம். அதேபோல நடைபயணம் மேற்கொண்டு அதில் சேகரித்த பணத்தை மருத்துவ மனையில் நோயாளர் தங்கும் ஒரு அறையைப் பராமரிப்தற்கான செலவையும் கொடுத்திருந்தோம். இரத்தானம், உணவு வங்கிக்கு உணவு சேகரித்துக் கொடுத்தல், பூங்கா துப்புரவு செய்தல், முதியோர்களுக்கான பயிற்சிப் பட்டறை, தமிழ் மொழி வகுப்புகள் போன்றவற்றையும் சொப்கா மன்றத்தினர் செய்து வருகின்றனர்.