LOADING

Type to search

இலங்கை அரசியல்

சம்பந்தனின் மரணத்தில் நடக்கும் ”அரசியல்”

Share

சுமந்திரன்-சாணக்கியன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் தமிழரசுக் கட்சி இயங்கினால் அது வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ‘ஆபத்துக்களை’ விளைவிக்கும்

சம்பந்தனின் உயிர் பிரிந்தவுடனேயே சுமந்திரன் அணி சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பான அனைத்து விடயங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது தமிழரசுக்கட்சியினரிலேயே பெருமளவானோருக்கு தெரிந்திருக்கவில்லை. அதேவேளை ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள் முதல் வெளிநாடுகளின் தூதுவர்கள் ,இராஜதந்திரிகள் வரை சுமந்திரனுடனும் அவரது வலதுகரமாக இரா.சாணக்கியனுடனுமே தொடர்பு கொண்டவாறு இருந்தனர். சம்பந்தனின் இறுதிக்கிரியைகளில் இறுதிவரை தமிழரசுக்கட்சியின் தலைமை நாமே என்ற கோதாவில் செயற்பட்ட சுமந்திரன் அணி தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பார்க்கின்றது”

கே .பாலா

இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் இலங்கைத்தமிழர் அரசியலில் மூத்த ,பழுத்த அரசியல்வாதியும் இலங்கையின் முன்னாள்  எதிர்கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் அமரராகி இரு வாரங்களாகிவிட்ட நிலையில் அவரது மரணத்திலும் அரசியல் நடத்தும் அவலம் இலங்கை தமிழரசுக்கட்சியில் ஏற்பட்டுள்ளதுடன்  தமிழரசுக்கட்சியை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  சுமந்திரன் அணி தீவிரமாகவும் தந்திரமாகவும்  களமிறங்கியுள்ளது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்விகண்ட நிலையில் அடிபட்ட பாம்பாக சுற்றுத்திரிந்த சுமந்திரனும் அவரது அணியினரும் ”அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போது  காலியாகும்” எனக்காத்திருந்த நிலையில்தான் சம்பந்தனின் மரணச்செய்தி வெளியானது. சம்பந்தனின் இந்த மரணச்செய்தியுடன் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ”பாடை”கட்டும் நடவடிக்கையில் இறங்கிய இந்த  அணி அந்த முயற்சியில் வெற்றி கண்டும் வருகின்றது.

சம்பந்தனின் மரணச்  செய்தியுடன் தமது ஆட்டத்தை தொடங்கிய இந்த அணியினர் முதலில் சம்பந்தனின் ”மரணச்சடங்கு” காரியத்தை கையில் எடுத்தனர். சம்பந்தனின் மரணச்சடங்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின்  இன்னொரு அணியான ஸ்ரீதரனின் வகிபாகம் இருந்துவிடக்கூடாது என்பதில் தீவிர  கவனம் எடுத்த சுமந்திரன் அணி சம்பந்தனின் உடல் அக்கினியுடன் சங்கமமாகும் வரை சம்பந்தனின் உடலுடன் சங்கமித்தே இருந்தனர். இதனால் இலங்கை தமிழரசுக்கட்சியின் தற் போதைய  தலைவரான  மாவை சேனாதிராஜா ,ஸ்ரீதரன் முதல் தமிழரசுக்கட்சியின் உண்மையான விசுவாசிகள் வரை வெறும் பார்வையாளர்களாக வந்து சம்பந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவேண்டிய நிலைமையை இந்த அணி ஏற்படுத்தியிருந்தது.

சம்பந்தனின் உயிர் பிரிந்தவுடனேயே சுமந்திரன் அணி சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பான அனைத்து விடயங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது தமிழரசுக்கட்சியினரிலேயே பெருமளவானோருக்கு தெரிந்திருக்க வில்லை. அதேவேளை ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள் முதல் வெளிநாடுகளின் தூதுவர்கள் ,இராஜதந்திரிகள்வரை சுமந்திரனுடனும் அவரது  வலதுகரமாக இரா.சாணக்கியனுடனுமே தொடர்பு கொண்டவாறு இருந்தனர். மாவை, சேனாதிராஜா, ஸ்ரீதரனை எவருமே அணுகவில்லை.

இவ்வாறான நிலையில் கொழும்பு பொரளை மலர்ச் சாலையிலும் பின்னர் பாராளுமன்றத்திலும் அஞ்சலிக்காக  வைக்கப்பட்ட  சம்பந்தனின் உடலை அவரது சொந்த  ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்ல முன்னர் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் ஸ்ரீதரனால் சுமந்திரன் அணியிடம் விடுக்கப்பட்டு  முதலில் அது  ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஸ்ரீதரனால் ”சம்பந்தனின் உடல் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்” என்ற செய்தி  ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் திடீரென ஸ்ரீதரனின் இந்த வேண்டுகோளை நிராகரித்த   சுமந்திரன் அணி ,சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவரங்கத்தில் மட்டுமே அஞ்சலிக்காக வைக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்தது. அவ்வாறானால் சம்பந்தனின் உடலை  தரை வழியாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது தமிழர் பகுதிகளில் மக்கள் அவருக்கு வழி  நெடுகிலும் அஞ்சலி செலுத்தக்கூடியதாக இருக்கும் என்ற ஆலோசனை கூறப்பட்ட போதிலும் அதனையும் நிராகரித்த சுமந்திரன் அணி சம்பந்தனின் உடலை விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அஞ்சலிக்கு வைத்து விட்டு பின்னர் அங்கிருந்து  விமானம் மூலமே  திருகோணமலைக்கும்  எடுத்துச் சென்றது.

இவ்வாறு சம்பந்தனின் இறுதிச்சடங்கில் இறுதிவரை ஸ்ரீதரன் அணியினரை சம்பந்தனின் இறுதிக்கிரியை காரியத்தில் நெருங்கவிடாது பார்த்துக் கொண்ட சுமந்திரன் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் சம்பந்தனின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற ஆசனத்துக்கு சுமந்திரனின் விசுவாசியான குகதாசன் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில் பாராளுமன்றத்திலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட  சுமந்திரன் அணி தயாராகி விட்டது. அதன் விளைவாகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள், கூட்டணிக்கட்சிகள் தமது சார்பில் பாராளுமன்றக்குழுத்   தலைவராக  ஒருவரை நியமிக்கும் .இந்தக்குழுவின் தலைவர்தான் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் இடம்பெறும் கூட்டங்கள்,சந்திப்புக்கள், விவாதங்களில் தமது கட்சி உறுப்பினர்களுக்கான நேர ஒதுக்கீடுகள் போன்றவற்றை தீர்மானிப்பார். அந்தவகையில் ஜே .வி.பி.யின் பாராளுமன்றக் குழுத்தலைவராக அனுரகுமார திஸாநாயக்கவும்  ஐக்கியமக்கள் சக்தியின்  பாராளுமன்றக் குழுத்தலைவராக சஜித் பிரேமதாசவும்  தமிழ்தேசியயக்கூட்டமைப்பின்  பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா.சம்பந்தனும் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் சம்பந்தன் அமரராகிவிட்டதனால்   தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்றக்குழுத்தலைவர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது. இதனால் அந்தப் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகவிருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலந்தனை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களினால் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவி   வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த  புதன்கிழமை பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்க்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள்  விடுதலை கழகத்தின் தலைவர் (புளொட் ) சித்தார்த்தனை தவிர ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துரையாடலில்  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரான செல்வம் அடைக்கலநாதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிக்க வேண்டும்  என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. .இதனை வெளிப்படையாக எவரும் எதிர்க்காத போதும் செல்வம் அடைக்கலநாதன்  உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி  டி.என்.எ என்ற கட்சியை பதிவு செய்திருப்பதால்  செல்வம் அடைக்கல நாதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக சுமந்திரன்,சாணக்கியன் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

எனினும் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சிகுள்ளும்  மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும் உள்ள  முரண்பாடுகள்  தொடர்பில் கடும் விமர்சனங்கள், விசனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதன் மூலம் இவ்வாறான விமர்சனங்களையும் விசனங்களையும் ஓரளவுக்கு தணிக்கலாம் என்ற கருத்து ஸ்ரீதரனால் முன்வைக்கப்பட்டபோதும் அதனை ஏற்கும் நிலையில் சுமந்திரன் தரப்பு இருக்கவில்லை. செலவம் அடைக்கலநாதனை நியமிப்பதென்றால் அவர் டி.என்.ஏ. என்ற மாற்றுக் கட்சியிலிருந்து வெளியேறிவர வேண்டும் என்ற வகையில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தமது கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர்  ஒரு இறுதி தீர்மானத்துக்கு வருவதாக குறிப்பிட்டு    இறுதி தீர்மானம் எட்டப்படாத நிலையில் கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவர் சம்பந்தன் செயற்பட  முடியாத் தலைவராக முடங்கியபோது”எனது சார்பில் இனிமேல் என் சார்ந்த அனைத்து விடயங்களில் எம்.ஏ. சுமந்திரன் அவர்களே பங்கேற்பார்கள்”என சகல தரப்புக்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் .எனவே   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவியும் வெற்றிடமாகி இலங்கை தமிழரசுக்கட்சிபோல் தலைவர் இல்லாது  இருப்பதனால் சுமந்திரன் தான் தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பாராளுமன்ற அலுவல்களையும்  கையாளப்போகின்றார்

ஏற்கனவே  தமிழ் அரசியல் கட்சிகளில் தாய்க் கட்சி என அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக்கட்சி ”தலைவர்”இல்லாத கட்சியாக தத்தளித்து  எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி  சுமந்திரன் அணியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியும் வெற்றிடமாகி நிரப்பப்பட முடியாமல் அல்லது நிரப்ப விடப்படாமல்  இருப்பதால் அதுவும் சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே செல்லப்போகின்றது.  ஒட்டு மொத்தத்தில் தமிழினம் இன்று தம்மை வழிநடத்த ”தலைவன்”இல்லாத ஓரினமாகவே மாறிப்போயுள்ளது.