LOADING

Type to search

இலங்கை அரசியல்

வன்னி மனித புதை குழியின் எதிர்கால அகழ்வின்போது மரபணு பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்படும்

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(11-07-2024)

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் பெண் போராளிகளுடையது என நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிபுணர் அறிக்கையின் அடிப்படையில் அனுமானிக்கப்பட்ட, வன்னிப் புதைகுழிகளின் சடலங்களை அடையாளம் காண, மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென, அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பான பிரதான தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்க பட்டதையடுத்து, கொக்குத்தொடுவாய் வெகுஜன புதை குழியின் மீட்கப்பட்ட எச்சங்கள், காணாமல் போனவர்கள் உடையதா என, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) தவிசாளர் மகேஷ் கட்டுலந்த சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

“காணாமல் போனவர்களின் தலைவிதியை மிக உயர்ந்த தரத்திற்கு அமைய கண்டறிவதோடு, இது வரையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள காணாமல் போனவர்களுக்கும், கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய எதிர்பார்க்கின்றோம்.”

“காணாமல் போனவர்களை எவரேனும் அடையாளம் காண விரும்பினால், அதற்கு ஒரே வழி குழியிலிருந்து பெறப்பட்ட உயிரியல் கைரேகைகளை (biological fingerprints) பகுப்பாய்வு செய்வதே” என பேராசிரியர் ராஜ் சோமதேவ ஜூலை 10 கொக்குத்தொடுவாய் அகழ்வு இடம்பெறும் பகுதியில் வைத்து வன்னி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

போரின் போது காணாமல் போனவர்களை அடையாளம் காண தேவையான உயிரியல் மாதிரிகள் ஏற்கனவே விசாரணைக் குழுவினரால் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த தொல்பொருள் நிபுணர், நீதிமன்ற உத்தரவை பெற்று விஞ்ஞான ரீதியான ஆய்வினை மேற்கொண்டு அவர்களின் சரியான காலத்தை கண்டறிய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“மறுபுறம், இந்த சந்தர்பத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்காக பல சத்திய கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கௌரவ நீதவான் தெரிவித்தார். எனவே, எதிர்காலத்தில் ஏதேனும் மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், தகுந்த மாதிரிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மிகவும் முறையான மற்றும் விஞ்ஞான ரீதியில், அதாவது ஒவ்வொரு எலும்புக்கூட்டிலிருந்தும், இந்த மூன்றாவது கட்டத்தில் பெறப்படும் ஒவ்வொரு எலும்புக்கூட்டிலிருந்தும் மாதிரியைப் பெற திட்டமிட்டுள்ளோம்.”

பாரிய புதைகுழியின் முதலாவது மற்றும் இரண்டாவது அகழ்வின்போது, பணிகளுக்கு சரியான முறைகள் பின்பற்றப்படாமையால், அவ்வாறான மாதிரிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் வன்னி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“கடந்த முறை, கனரக வாகனங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் மூலம் ஏற்கனவே அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் நிறைய இடையூறுகள் ஏற்பட்டன. இதனால், முதல் கட்டத்திலும், இரண்டாம் கட்டத்திலும் அவற்றைச் செய்ய முடியாமல் போனது. எனவே அத்தகைய இடத்திலிருந்து இதுபோன்ற சோதனைக்கான மாதிரிகளை எடுப்பது ஆபத்தானது. ஆனால் இந்த முறை, எதிர்காலத்தில் எந்தவொரு அறிவியல் ஆய்வுக்கும் பயன்படுத்தக்கூடிய மாதிரிகளை எங்களால் சரியான முறையில் பெற முடிந்தது.”

40 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் அளவு குறித்தும், விசாரணைகளுக்கு முன்னோடியாக இருக்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ விளக்கமளித்துள்ளார்.

“இந்த மூன்றாவது சந்தர்ப்பத்தில், நான்கு மனித எலும்புக்கூடுகளை எங்களால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. மேலதிகமாக கடந்த இரண்டாம் கட்டத்தில் நாங்கள் இங்கே அகற்றாத மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் உள்ளன. இவற்றை பார்க்கும்போது, இப்போது ஏழு எலும்புக்கூடுகளை அகற்ற வேண்டியுள்ளது. நாங்கள் அகழ்வுப் பணிகளைத் தொடர்கிறோம். இந்த அகழ்வின் முடிவுகளுக்கு அமைய இந்த இடத்தில் மேலும் பல எலும்புக்கூடுகள் இருப்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய சான்றுகள் எங்களிடம் உள்ளன. ஆனால் இதன் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்வது எங்களுக்கு இன்னும் கடினமாக உள்ளது. எலும்புக்கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்படாமல் இருப்பதால், அகழ்வுப் பணிகள் முடியும் வரை சரியான தீர்மானத்திற்கு வருவது எங்களுக்கு கடினமாக உள்ளது.
எனவே, இந்த எலும்புக்கூடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்துள்ளதால் அவற்றை அகற்றுவது மிகவும் சிக்கலானது என நான் நினைக்கிறேன், எனவே அவற்றை மிகவும் கவனமாக அகற்ற வேண்டும்.”

மனித எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக, வெகுஜன புதைகுழியில் கண்டறியப்பட்ட பகுப்பாய்வுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்தும் தடயவியல் தொல்பொருள் பேராசிரியர், விளக்கமளித்திருந்தார்.

“நாங்கள் இரண்டு முக்கியமான சில தொல் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளோம், அதாவது, பகுப்பாய்வுக்கு பொருத்தமான, பயன்படுத்தக்கூடிய இரண்டு பொருட்கள் கிடைத்துள்ளன. துப்பாக்கிச் சன்னத்தின் தலை. ஒரு புல்லட் ஹெட். மற்றொன்று இரண்டு கம்பி துண்டுகள் கிடைத்துள்ளன. எனவே நாம் அதை சுத்தம் செய்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். இன்று அந்த இரண்டும்தான் எங்களுக்கு கிடைத்தன.”

மீட்கப்பட்ட பொருட்களின் பகுப்பாய்வு தாமதமானதற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தினார்.

“அது தவிர, மட்பாண்ட துண்டுகள், உடைந்த கண்ணாடி போத்தல்கள் மற்றும் பிற இரும்புத் துண்டுகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். மட்பாண்ட துண்டுகள், கண்ணாடித் துண்டுகள், பிற இரும்புத் துண்டுகளுக்கும், எலும்புக்கூடுகளுக்கும் இடையிலான தொடர்பு என்னவென எமக்குத் தெரியவில்லை. அகழ்வு முடியும் வரையில் இதுத் தொடர்பில் நாம் ஆராய வேண்டும். மேலும் கிடைக்கின்றவற்றை பார்த்து, அவர்களின் நிலைகள் மற்றும் அவைகள் எவ்வாறு இதனுடன் தொடர்புபடுகின்றன என்பது தொடர்பிலும், இறந்தவர்களுடன் அவைகளுக்கு நேரடியாக தொடர்பு காணப்படுகிறதா அல்லது அந்த சம்பவத்துடன் தொடர்புடையதா? இல்லையெனில், உடல்கள் வேறு இடத்தில் இருந்து குப்பையைப்போல் இங்கு கொண்டு செல்லப்பட்டனவா? என்பதை ஆய்வு செய்து தீர்மானிக்க சிறிது காலம் எடுக்க வேண்டும். ”

ஒரு வருடத்திற்கு முன்னர் வன்னியில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழியின் காலக்கணிப்புக்கான கார்பன் பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளை சேகரிக்கும் உத்தரவு இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என அவர் கூறுகிறார். ஒரு வெளிநாட்டு ஆய்வகத்தில் சரியான காலத்தை தீர்மானிக்க, கார்பன் 14 அல்லது ‘பொம்ப் பள்ஸ்’ அல்லதுபகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்பது அவரது பரிந்துரை.

“இந்த சம்பவம் நடந்த காலத்தை பரிந்துரைக்க நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டுள்ளது.
அதனால் நான் அதை செய்துள்ளேன். ரிலேடிவ் டேட் (தொடர்புடைய காலப்பகுதி) நீதிமன்றத்தில் எவராவது கோரிக்கை வைத்தாலோ, விஞ்ஞான சோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலோ, அகழும்போதே தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அதில் மாதிரிகளை சேரிக்க வேண்டும். எனினும் அவ்வான ஒன்று இன்னும் வரவில்லை.”

கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதுவரை எவ்வித அழுத்தமும் விடுக்கப்படவில்லை என, வன்னியில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த பேராசிரியர், மகிழ்ச்சியாகவும் ஒத்துழைப்புடனும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“எல்லோரும் எங்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறார்கள். எங்களுக்கு இதுவரை அவ்வாறான அழுத்தம் அல்லது பாதிப்பும் எதுவும் இல்லை.”

2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் வெளிப்பட்டன.